உனக்கும், தமிழுக்கும் அழிவேது?
தமிழ் மொழி நேசனே - எங்கள்
பாரதிதாசனே
அன்னையின் மறுவடிவான தமிழை
அமுதென்றாய்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு
நேர் என்றாய்
உன் போலத் தமிழை
உயிருக்கு உயிராய் நேசித்தோர்
இவ்வையகத்தில் யாருமில்லை
உன் காலத்தில் நான் பிறந்திருந்தால்
நீ எதிர்பாராத முத்தங்களை
என் அன்பின் பரிசாய் அளித்திருப்பேன்
இருண்ட வீட்டில் வசித்த
தமிழர்களையெல்லாம்
உன் அறிவுத் தமிழை
அள்ளிக் கொடுத்து
அழகின் சிரிப்பாய் மாற்றியவரே...!
நீ படைத்த படைப்புகள்
எங்கள் தமிழர்களின் நெஞ்சங்களில்
வாழும் வரை
உனக்கும், தமிழுக்கும் அழிவேது?
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம். (அபுதாபி)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.