எங்கும் தேடல்...
பூங்காற்று பூக்களைத் தேட
புதுராகம் பாக்களைத் தேட
வானமுகில் வான் நிலவைத் தேட
தாமரைகள் சூரியனைத் தேட
தீரவில்லை தேடல் -பூமியில்
ஓய்வதில்லை தேடல்
பயணங்கள் சாலைகளைத் தேட
கவிவரிகள் அர்த்தங்களைத் தேட
கரு வண்டு தேன் மலரைத் தேட
பருவங்கள் காலநிலை தேட
தீர்வதில்லையே தேடல் -இங்கு
ஒவொரு கணங்களுமே தேடல்
முயற்சிகள் வெற்றிகளைத் தேட
நித்திரைகள் கனவுதனைத் தேட
இளமையெல்லாம் மகிழ்வதனைத் தேட
புரட்சியெல்லாம் புதியதனை தேட
நிரந்தரமாய் தொடருதடா தேடல் -மனிதன்
வாழ்வெல்லாம் ஓய்வதில்லைத் தேடல்
உழைப்பவர்கள் ஓய்வுகளைத் தேட
பசித்தவர்கள் உணவுதனைத் தேட
ஏழைமனம் செல்வமதைத் தேட
ஆத்திகர்கள் பக்திதனை தேட
உண்மையெல்லாம் நீதிதனை தேட
தேடல் கொண்டே சுழலுதடா பூமி -மனிதர்
தேடுவது இல்லையென்றால் ஞானி
- கிருஷ்ணா

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.