ஜென் குருவைக் காணச் சென்ற ஒருவர் வீட்டின் வெளியில் தன் காலணியையும், குடையையும் வைத்துவிட்டு உள்ளே சென்றார்.
உள்ளே வந்தவரிடம் குரு, ‘‘நீ வருவதை நான் ஜன்னல் வழியே பார்த்தேன். குடையைக் காலணியின் இடப்பக்கம் வைத்தாயா? வலப்பக்கம் வைத்தாயா?’’ என்று கேட்டார்.
‘‘ஐயா, எனக்குச் சற்றும் அதைப் பற்றிச் சிந்தனை இல்லை. இப்போது எதற்காக அதைப் பற்றிக் கவலை? நான் ஜென்னின் ரகசியம் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன்’’ என்றார் வந்தவர்.
‘‘சிறிய நிகழ்வுகளில் கவனம் தராவிட்டால், நீ எதைத்தான் கற்பாய்? வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிக்கும் தேவையான கவனத்தைச் செலுத்து. இதுவே ஜென்னின் ஒரே ரகசியம்’’ என்றார் ஜென் குரு.