கண்ணாடி பீரோவில் விளக்குமாறு
ஐஸன்ஹாவர் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்று வெள்ளை மாளிகையில் உட்கார்ந்ததும், தாம் வேலை செய்யும் அறையில் ஒரு கண்ணாடி பீரோவில் விளக்குமாறு ஒன்றை வைத்திருந்தார்.
அவரைப் பார்க்க வரும் எல்லோரும் அந்த விளக்குமாற்றை வெகு ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்; ஆனால் அது ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்கப் பயப்படுவார்கள். இதை ஐஸன்ஹாவர் கவனித்துக் கொண்டே இருந்தார்.
ஒரு சமயம் அவரைப் பார்க்கப் பல பிரமுகர்கள் அவருடைய அலுவலக அறையில் கூடினார்கள். எல்லாருடைய பார்வையும் கண்ணாடி பீரோவில் இருந்த அந்த விளக்குமாற்றின் மீதுதான் சென்றது. ஆனால் ஒருவராவது அது அங்கு எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்கவில்லை.
அதைக் கவனித்த ஐஸன்ஹாவர், அவர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லாரும் அந்த விளக்குமாற்றை ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்களே தவிர அது அங்கு எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்று கேட்கவில்லை. நான் காரணத்தை விளக்குகிறேன். நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், எனக்குப் பல விலையுயர்ந்த பரிசுகள் அனுப்பப்பட்டன. அவற்றையெல்லாம் தனியறையில் பூட்டி வைத்திருக்கிறேன். அப்படி அனுப்பப்பட்ட பரிசுகளில் இந்த விளக்குமாறும் ஒன்றாகும். இதனுடன் ஒரு கடிதம் வந்தது. ‘நீங்கள் அரசியலில் உள்ள குப்பை, கூளங்களைச் சுத்தம் செய்வதற்காக இதை அனுப்பி வைத்திருக்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அந்தக் காரியம் எனக்கு என்றும் நினைவிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை இங்கு வைத்துள்ளேன்” என்றார்.
- மு. சு. முத்துக்கமலம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.