உண்மைத் துறவின் பெருமை
பல நாடுகளையும் வென்றபின் விரக்தி தோன்ற, சாதுக்களின் தரிசனத்திற்கு விருப்பமுற்றான் அலெக்சாண்டர்.
தன் மந்திரிகளை அழைத்து, சாதுக்களை வந்து சன்மானம் பெற்றுப் போகும்படி கூறினான். சாதுக்கள் தமக்கு ஏதும் தேவையில்லை எனக் கூறிவிட்டனர்.
சான்றோர் ஒருவரை எப்படியும் சந்திக்க விரும்பிய அலெக்சாண்டர் ஒரு முனிவரைக் காணத் தகுந்த மரியாதையுடன் சென்றான். அந்த அவதூதர் உள்முக நோக்கில் அமர்ந்திருந்தார். அரசனது பரிவாரங்களின் ஆரவாரம் அவரை விழித்துப் பார்க்கச் செய்தது. பணியாட்கள் அவரிடம் அலெக்சாண்டரின் பெருமைகளைக் கூறி, அவர் தரும் பரிசுகளை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். “இவற்றுள் எதுவும் எனக்குத் தேவையில்லை. என் தேவைகளைப் பகவான் பூர்த்திசெய்கிறார்'' என்றார் சாது.
அலெக்சாண்டர், "என்னைச் சந்திக்கும் யாரும் வெறுங்கையுடன் திரும்புவதில்லை. நீங்கள் ஏதாவது என்னிடமிருந்து பெற்றே ஆக வேண்டும்'' என்றான்.
அந்த மகான், "அப்படியா? குளிருக்கு இதமாக வெயில் காய்ந்துகொண்டிருக்கிறேன். நீ சூரிய ஒளியை மறைத்துக்கொண்டு நிற்கிறாய், சற்று விலகினால் அதுவே போதும்' என்றார்.
அலெக்சாண்டர் உண்மைத் துறவின் பெருமையை உணர்ந்தான்.
- மு. சு. முத்துக்கமலம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.