பரபரப்பான இடத்தில் ஒரு டிராஃபிக் சிக்னல். அங்கு ஓர் ஆட்டோ வந்து நின்றது. அதில் ஒரு பயணி.
ஊனமுற்ற ஒருவன் அங்கு வந்து ஆட்டோக்காரரிடம் பிச்சை கேட்டான்.
ஆட்டோ ஓட்டுனர் ஒன்றும் தராமல் போ என்று சைகை செய்தார்.
உள்ளே இருந்த பயணிக்கு ஒரே எரிச்சல். அவர் ஒரு ரூபாயைப் பிச்சைக்காரனுக்குப் போட்டார்.
டிரைவரிடம் எரிச்சலாக, ‘‘ஏம்பா, அவனைப் பார்த்தால் பாவமாக இல்லையா? எல்லாம் நமக்கு வந்தால்தான் தெரியும். நாட்டிலே தர்மமே போயிடுச்சி...’’ என்றார்.
இலவச அறிவுரை. ஓட்டுனர் ஒன்றும் கூறவில்லை.
சிறிது நேரம் சென்றது. பயணி தான் இறங்கும் முன் ஆட்டோ கட்டணத்திற்காக 100 ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.
ஓட்டுனர் சில்லறை இல்லை என்றார். பயணியோ, ‘‘அந்தக் கடைக்குச் சென்று வாங்கி வா’’ என்றார் வேண்டாவெறுப்பாக.
ஓட்டுனர் எழுந்தார், நடந்தார்...!
ஆ! என்ன இவர் விந்திவிந்தி நடக்கிறாரே! இவரும் ஊனமுற்றவரா? அப்படியிருந்தும் வாழ்க்கையைத் துணிவுடன் ஏற்றுச் சமாளிக்கிறாரே...!
அடடா, அதை அறியாமல் அவரைக் குறை கூறிவிட்டோமே என்று அந்தப் பயணி வருந்தினார்.
இங்கு இரண்டு விதமான ஊனங்களைக் காணலாம். புற ஊனம் ஒன்று, அக ஊனம் மற்றொன்று.
புற ஊனத்தை ஏற்றுக் கொண்டவர், தைரியத்தை வளர்த்துக் கொள்ளாமல் பிச்சை எடுக்கிறார்.
ஊனத்தை ஏற்றுக் கொண்டு சம்பாதித்துச் சொந்தக் காலில் நிற்கும் ஒருவர் மன வலிமையை வளர்த்துக் கொண்டு அவரே ஒரு மனிதச் செல்வமாக மாறிவிட்டார்.