நேர்மைக்குக் கிடைத்த பரிசு!
மு. சு. முத்துக்கமலம்
அவன் ஆடுகளை மேய்க்கும் ஒரு ஜெர்மானியச் சிறுவன். பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று காட்சி தந்த புல்வெளியில் ஆங்காங்கே நின்று அவனது ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுவனின் கண்ணும் கருத்தும் அவற்றின் மீதே நிலைத்திருந்தன.
வீரன் ஒருவனைத் தாங்கியபடி, குதிரை ஒன்று தன்னை நோக்கி மிகவும் வேகமாக வருவதைக் கவனித்தான் சிறுவன். அருகில் வந்து நின்ற குதிரையிலிருந்து இறங்கினான் அந்த வீரன், தோற்றத்தில் அந்த வீரன் வேட்டைக்காரனை ஒத்திருந்தான். எதையோ தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவன் முகத்தில் இருந்தது.
சிறுவன் கேள்விக் குறியுடன் அவனை நோக்கினான்.
"சிறுவனே, உன் பெயர் என்ன?'' என்று வினவினான் வீரன்.
"ஹான்சு ''
"அண்மையிலுள்ள கிராமத்திற்கு இங்கிருந்து எவ்வளவு தொலைவு?''
"ஆறு கல் தொலைவு, ஐயா'' என்ற சிறுவன் சற்று நிறுத்தினான். "ஆனால் சரியான பாதை ஏதுமில்லை. ஒற்றையடிப் பாதை மட்டுமே இருக்கிறது. நீங்கள் கவனமாகச் செல்லாவிட்டால் வழி தவற நேரிடும்'' என்று கூறி எச்சரித்தான்.
"சற்று நேரம் என்னுடன் வந்து வழிகாட்டக் கூடுமா, தம்பி?'' என்று கேட்ட வீரன் சிறுவனைக் கூர்ந்து பார்த்தான். "தக்கபடி பணம் தருகிறேன்'' என்றும் தெரிவித்தான்.
சிறுவன் கையை விரித்தான். "மன்னிக்கவும், என்னால் இயலாது. ஆடுகளை விட்டு வர முடியாது. அவை வழி தப்பி அலைந்து காட்டினுள் சென்று ஓநாய்களுக்கு இரையாகிவிடக் கூடும்.” சிறுவன் குரலில் உறுதியும் கடமையுணர்வும் தொனித்தன.
“அவற்றுக்குங்கூட என்னால் பணம் தர முடியும்'' என்றான் வீரன். விழிகள் செல்வச் செருக்குடன் சிறுவனை அலட்சியமாகப் பார்த்தன. “நிறைய பணம் தருகிறேன். சிறிது நேரம் ஆடுகளை இங்கே விட்டு வந்து எனக்கு வழி காட்டு"
“இயலாமைக்கு மெத்த வருந்துகிறேன், ஐயா" என்று கண்டிப்பான குரலில் பதிலளித்தான் சிறுவன். “இவை என் எசமானின் ஆடுகள். இவற்றைக் கண்காணிப்பது என் கடமை; தங்களுடன் வருவது பிசகு''
"சரி. அப்படியானால் வழிகாட்டி ஒருவனை எனக்காக அழைத்து வர இயலுமா? அதுவரையில் உன் ஆடுகளை நான் கண்காணித்துக் கொள்கிறேன்"
"இதிலும் சங்கடம் இருக்கிறது. தங்களது குரலும் தோற்றமும் ஆடுகளுக்குப் பழக்கம் இல்லையே! அவை மிரண்டு நாலா பக்கமும் ஓடிவிடும்” என்றான். சட்டென்று சிறுவன் முகத்திலும் குரலிலும் கடுமை ஏறியது. “உங்களை என்னால் நம்ப முடியாது!"
வீரனின் விழிகள் வியப்பால் விரிந்தன. என்ன, நீ என்னை நம்பவில்லையா?''
“இல்லை!'' என்று உறுதியுடன் பதில் வந்தது. சிறுவன் முகத்தில் அச்சமோ தயக்கமோ சிறிதும் இல்லை. தங்களது பேச்சு எசமானுக்குக் கீழ்ப்படியாதே என்று எனக்குப் புகட்டுவதாக இருக்கிறது. தங்களை நான் எப்படி நம்ப முடியும்?”
வீரன் சிரித்தான். சிறுவன் மீது சினம், வெறுப்பு ஏதும் கொள்ளவில்லை அவன். “நீ சொல்லுவது முற்றும் சரி!” என்று சிறுவனை மெச்சினான்.
"சிறுவனே, நீ நேர்மை மிகுந்த பையன். உண்மை, விசுவாசம் நிரம்பிய உன்னைப் பணியாளாகப் பெற்ற உன் எசமானன் வாஸ்தவத்தில் ஓர் அதிர்ஷ்டசாலி தான்! சரி, கிராமத்திற்குச் செல்ல வழியை மட்டும் சொல், அது போதும். சமாளித்துப் போய்விடுகிறேன்'
பாதையின் விவரத்தைச் சிறுவன் கூறியதும் வீரன் புரவி மீதேறிப் புறப்பட ஆயத்தமானான்.
திடீரென்று ஐந்தாறு குதிரைவீரர்கள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர் அவர்களில் ஒருவன் குதிரையில் இருந்தபடி உற்சாகமாகக் குரல் கொடுத்தான்; “அதோ, இளவரசர்!'' என்று கையை நீட்டினான். “இளவரசே, தங்களை எங்கெல்லாம் தேடுவது? நல்லவேளை, கண்டுபிடித்தோம் " என்று ஆனந்தக் குரலில் கூறினான்.
சிறுவன் துணுக்குற்றான். இளவரசர் என்று தெரிந்து கொள்ளாமல் உதவ மறுத்தமைக்கு வருந்தினான். தண்டித்துவிடுவாரோ என்ற பீதி முகத்தில் சூழ்ந்தது. கண்கள் பயத்தோடு இளவரசனை நோக்கின.
இளவரசன் முகத்தில் புன்னகை இழைந்தது. "சிறுவனே, உன்மீது எனக்குச் சிறிதும் கோபம் இல்லை. நீ கடமை தவறாத கர்மயோகி” என்று பாராட்டினான்.
இளவரசனும் வீரர்களும் அரண்மனை திரும்பினர்.
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் அரண்மனைச் சேவகன் ஒருவன் வந்து சிறுவனை இளவரசனிடம் அழைத்துச் சென்றான்.
சிறுவன் மௌனமாக நின்றான்.
“ஹான்சு!'' என்று அன்பு ததும்ப அழைத்தான் இளவரசன். “உன் ஆடுகளை அங்கே விட்டு வந்து எனக்குப் பணி செய்ய முடியுமா? கடமையுணர்ச்சி மிக்கவன் நீ; உன் சேவை என் நாட்டுக்குத் தேவை'' என்று சொல்லிச் சற்று நிறுத்தி முறுவலித்தான் இளவரசன். “நான் உன்னை நம்புகிறேன்''
சிறுவனின் வதனம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. “இளவரசே, மிக்க நன்றி. நான் என் எசமானிடம் சென்று விவரம் சொல்லி, அவர் தமது ஆடுகளை மேய்க்க வேறு ஒருவரை நியமனம் செய்தபின் தங்களிடம் வர அனுமதி வழங்க முடியுமா?'' என்று பணிவுடன் வினவினான்.
இளவரசன் இசைந்தான். ஹான்சு ஒரு வாரம் சென்றதும் அரண்மனை வந்து சேர்ந்தான். அவனது நேர்மையும் கடமையுணர்வும் நாளடைவில் அரசாங்கத்தில் உயர் பதவியைத் தேடித் தந்தன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.