முன்னுரை
சுவடி நிறுவனங்களில், எண்ணற்ற சுவடிகள் இன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. அவற்றுடன், பதிப்பிக்கப்பட்ட இலக்கிய இலக்கணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய சுவடிகளும் உள்ளன. “ இந்நிலையில், திருவெண்காடு சிவானந்த சுவாமிகள் இயற்றிய கவிகள் தாள் சுவடியாகக் கிடைக்கின்றன. அவற்றை உரையுடன் பதிப்பித்தல் என்ற முறையில் இக்கட்டுரை அமைகிறது.
திருவெண்காடு சிவானந்த சுவாமிகளின் கவிகள்
உ.வே.சாமிநாதையரின் தமிழ்ப் பணியின் சிறப்பை எடுத்தரைத்து அவர் பெருமை போற்றும் ஐந்து வாழ்த்துக்கவிகளை, திருவெண்காடு சிவானந்த சுவாமிகள் இயற்றியுள்ளார். இந்த வாழ்த்துக்கவிகள் தாள் சுவடியாகக் கிடைக்கின்றன. இக்கவிகளுக்கான உரைகள் அச்சுவடியில் இல்லை. எனவே, அதனை அனைவரும் விளங்கிக்கொள்ளும் வகையில் த. கண்ணன் அவர்களால் உரையெழுதப்பட்டுள்ளது.
உ.வே.சாமிநாதையர் நூல்நிலையத்தின் நோக்கங்களை வரையறுக்குமிடத்து, “ஆராய்ச்சிக் கருவியாக ஐயரவர்கள் சேகரித்துள்ள குறிப்புகளை ஒழுங்குபடுத்திப் புதிய நூல்களை வெளியிடுதல்” என்பதும் இதன் நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது (முத்துச்செல்வன்.ஜெ.2012:129). இதனடிப்படையில் உ.வே.சா நூல் நிலையத்தில் உள்ள கடிதங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, மின்படிகளாக தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்தொகுப்பில் இடம் பெறும் கடிதக் குறிப்பாகவே, இக்கவிகள் கிடைக்கின்றன.
ஆங்கிலேயர் காலத்தில் சுவடிகளை அச்சாக்கம் செய்வதற்குத் தடைகள் இருந்தன. சர் சார்லஸ்மெட்கஃபே (Sir Charless Met Calfa) என்பார் ஆளுநர் பொறுப்பில் இருந்த போது அச்சட்டம் நீக்கப்பட்டது என்பர் (வே.இரா.மாதவன்.2021:42). இதனால் அச்சாக்கமும் சுவடிப் பதிப்பும் நமக்கு உரிமையாக்கப்பட்டாத காலமும் உண்டு என்பதை உணரலாம். இந்நிலையில் இன்று இணையப் பதிப்புகளாக எண்ணற்ற சுவடிகள் கிடைக்கின்றன. அவற்றை நூலாக்கம் செய்தல் என்பது, நமது கடமையாகும்.
வாழ்த்துக்கவி - 1
“மதியணியும் பொன்முடியா ரன்பினைந்திணை தருவாய் மலர்ந்த மாண்பார்
அதிமதுரத் தமிழ்மேன்மை யறிந்து கற்றுத் தமிழ் மடந்தை யந்தோவெற்குக்
கதியேதிங் காதரிப்பா ரெவரென்னக் கலுழுங்கால் கண்ணீர் மாற்றி
சதிமகிணன்றுதி பெரும்பே ராசிரியப் பெயர் படைத்தாய் சாமிநாதா”
உரை
இப்பாடல் உ.வே.சாமிநாதையரின் பதிப்புப் பணியால் தமிழ் அன்னையின் துயரம் துடைக்கப்பட்டதை எடுத்துரைக்கிறது.
சிவன் தன் தலையில் மதியினை அணிந்தவன். பொன்னிறமான முடிக்கற்றை உடையவன். அந்த சிவன் முதலானோர் பாடிய சங்கப் பாடல்களில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற அகந் ஐந்திணைப்பாடல்கள் சங்க இலக்கியச் சுவடிகளாக இருந்தன. அச்சுவடிகள் படிப்பாரற்று, பாடங் கேட்பார் இன்றி, பாதுகாக்கும் எண்ணம் இன்றி, அழிந்து வந்தன. தமிழ்மொழியின் பழம்பெருமைக்குச் சான்றாகச் சங்கப் புலவர்கள் பாடிய பாட்டுகளில் தமிழ்ப் பண்பாட்டின் மேன்மைகள் பாடப்பட்டுள்ளன. தமிழர் வாழ்வியல் நெறி எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவ்வாறான பல சிறப்புகளை உடைய சங்க இலக்கியத் தொகுப்பானது அழிந்து வந்த நிலையில், தமிழ் அன்னை, அந்தோ என்று வருந்துகின்றாள். தான் எவ்விடத்தில் சென்று வாழ்வது என்பதை எண்ணித் தவிக்கின்றாள். சங்கத் தமிழைக் காத்து தமிழாகிய தன்னை ஆதரிப்பார் யார் என்பதைத் தேடி நிற்கின்றாள். அந்நிலையில் தமிழ் அன்னை கண்ணீர் சிந்தி வருந்துகிறாள். அத்தமிழ் அன்னையின் கண்ணீரைத் துடைத்தவர் உ.வே.சாமிநாதையர். இவர், சங்க இலக்கியங்களைத் தேடித் தொகுத்து, அவற்றை ஆராய்ந்து பதிப்பித்த பெரும் பேராசிரியர் எனும் பெயரும் பெற்றார்.
வாழ்த்துக்கவி - 2
“வடமொழிக்குத் தென்மொழியே சமமென்னப் பெரியரெல்லாம் வழுத்தும் வாக்கைத்
திடனுறுத்தத் தென்மொழியிற் பெரும்பேராசிரியனெனச் சிறப்புப் பெற்றாய்
படவரவப் பாயுடையானாதியர் பல்லிய முழுக்கப் பரமானந்த
நடமிறைவனிது தெரிந்தே பொற்சபையில் முன்னரே நடிக்கின்றானே”
உரை
வடமொழி கற்ற தமிழ் அறிஞர்கள் வடமொழியே சிறந்தது எனக் கூறிவந்த காலமும் உண்டு. தமிழின் சிறப்புகளுக்கெல்லாம் வடமொழியில் தொடக்கம் கூறியவர்கள் தமிழின் பழமை அறியாதவர்களாக இருந்தனர். அந்நிலையில் தமிழே வடமொழியினும் பழம்பெருமை உடைய மொழி என்பதை பழம்பதிப்புகளின் வழியே எடுத்துரைத்தவர் சாமிநாதையர். அந்நிலையில் சிவானந்த சுவாமிகள், ஆய்வறிஞர்களில் பெரியர் எனப் பெயர் பெற்றோரும் தமிழும் வடமொழியும் சமம் என்றுரைக்கும் நிலையில், அந்த வாக்கின் திறத்தை அறுத்து, தமிழே வடமொழியினும் சிறந்தது என்பதற்கான சான்றுகளைப் பதிப்புகளாக வெளியிட்டு, அதனால் பெரும் பேராசிரியர் எனும் பெயர் பெற்றவர் சாமிநாதையர் என்றுரைக்கிறார். இவ்வாறு தமிழின் நிலையைத் தாழ்ந்ததாக உணரச் செய்து, பிறகு சாமிநாதையர் முதலிய பழம்பதிப்பாசிரியர்களை உருவாக்கி, தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் இறைவனின் திருவிளையாடல்களே இவை என்பதையும் சுட்டுகிறார்.
வாழ்த்துக்கவி - 3
“கரும்பேராசிரியர் நச்சினார்க்கினிய ரினியவுரை கவினப் பின்னோர்
தரும்பேராசிரியச் சிந்தாமணி …………………………… சாமிநாதா
பெரும்பேராசிரியனெனப் பெயர் பெறுங்காற பராநந்தம் பெறுவேனென்னோ
அரும்பேராசிரியர் சிவாநந்தனென வெனக்களித்தாக அறிஞர்தாமே”
உரை
சாமிநாதையர் 1887 இல் சீவகசிந்தாமணியை முதன்முதலாகப் பதிப்பித்தார் அதன் பின்னர் பத்துப்பாட்டிற்கு நச்சினார்க்கினியர் உரையை முழுதும் ஆராய்ந்து, 1889 இல் பதிப்பிக்கிறார். இப்பதிப்புகளால் சாமிநாதையர் பெரும் பேராசிரியர் எனும் நிலையை எய்துகிறார். இவ்வாறு தனது அரும்பணியால் பெரும் பேராசிரியர் எனப் போற்றப்படும் இச்சிறப்புகளை அறியுமிடத்து, அது சிவன் அளித்த பேரானந்தம் எனத் தான் மகிழ்வதாகக் குறிப்பிடுகிறார் சிவானந்த சுவாமிகள்.
வாழ்த்துக்கவி - 4
“மலைமகடன் மகிணனபர்க கருண்மழைபோற் கவிமழை பெய்மன்னன்பின்னான்
கலைமகடன் கலிநீங்கப் பெரும்பேராசிரியனெனக் கவின்பேர் பூண்டெந்
தலைமகவு விளங்கு மந்நாட் கூடல்வளர் சங்கத்திற் றக்கோரோடும்
அலைகடல் சூணிலம் புரக்கும் பாண்டியன்கொண் டாட்டயர்வானதனைக்காணா”
உரை
மலைமகள் தன்னை வணங்கி மகிழும் அன்பர்களுக்கு கருணை மழைபொழியும் அன்பினள். அன்னையின் அக்கருணை மழைபோல், கவிமழை பொழியும் தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப் பணிகளையும் பின்னிடும் வகையில் உ.வே.சாமிநாதையர் அவர்களால் செய்யப்பட்ட சுவடிப்பதிப்புப் பணிகள் உள்ளன. இந்தப் பதிப்புப் பணியால், தமிழ் அன்னையின் பெருமை அறியாது இருந்த துன்பம் நீங்கியது. இதனால், உ.வே.சா அவர்கள் தமிழ் அன்னையின் துன்பம் நீக்கிய தலைமகனாய் ஆனாா். பண்டை நாளில் பாண்டியர்கள் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் ஆராய்ந்து, இலக்கிய இலக்கணங்களைப் படைத்தனர். அந்நிலையில் அப்பாண்டியர்கள் செய்த தமிழ்ப் பணியும் இத்தலைமகன் செய்த தமிழ்ப் பணியும் பாராட்டி மகிழத்தக்கது என்கிறார்.
வாழ்த்துக்கவி - 5
“இக்கண்ணும் புகழ்கேட்க விச்செவியு மகிழ்வெய்த விந்த நெஞ்சுந்
தக்கனவன் னாதலினாற் சாலவிவை யுடையவந்தச் சங்க ரன்றான்
புக்கனந்தவா நந்தம் புசிப்பனெனப் போயினனே போலு நங்கள்
திக்கனைத்து மிகப் புகழு மீனாட்சி சுந்தரனாந் தெள்ளியோனே”
உரை
தமிழின் பெருமை அறிந்தாரெல்லாம், அப்பெருமைக்கு அடிப்படையாக, பழந்தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்த உ.வே.சா அவர்களின் பதிப்புப் பணியைக் கருதி மகிழ்வெய்துவர். அந்நிலையில் அவர்களின் கண்ணும் செவியும் உ.வே.சா பதிப்புகளைக் கண்டும், அவர் பெருமை கேட்டும் மகிழ்வெய்துகின்றன. உ.வே.சா அவர்களின் பதிப்புப் பணிக்கு, தமிழ்ச் சங்கத்திருந்து தமிழ் பாடிய அந்த மீனாட்சி சுந்தரேசனாரே உடன் இருந்து இதனை நிகழ்த்தினாராக.
முடிவுரை
திருவெண்காடு சிவானந்த சுவாமிகள் இயற்றிய கவிகள், தமிழ்த்தாய் அடைந்த துன்பத்தை எடுத்துரைக்கிறது. தமிழ்த்தாயின் துன்பத்தைப் போக்கும் வகையில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களால் செந்தமிழ்ச் சுவடிகள் பதிப்பிக்கப்பட்டன என்பதை இக்கவிகள் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்துகின்றன. பதிப்பு என்பது, ஒரு சுவடியை அச்சேற்றுதல் என்றளவில் நிற்பதில்லை. மூல ஆசிரியர் நிலையில் நின்று, மூல நூற்காலப் பண்பாடுகளைக் கற்று, அந்நூற்பொருளை நன்கு தெளிந்து,பிரதிகளைத் தொகுத்து, பிரதி பேதங்களை ஆராய்ந்து, மூலபாடம் கண்டறிந்து, நிகழ்த்த வேண்டிய பணியாகும். அப்பணியில் சிறப்பால் தமிழ்த்தாய் மகிழ்வாள் என்பதில் ஐயம் இருப்பதற்கு இல்லை என்பதை இக்கவிகளின் வழியாக அறியமுடிகிறது. இத்தாள் சுவடியைப் பதிவேற்றம் செய்துள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு, உளப்பூர்வமாக நன்றி தெரிவித்தல் கடமையாகும்.
துணைநூற்பட்டியல்
1. முத்துச்செல்வன்.ஜெ. (2012), ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறு, நாவைத் தமிழ்ச் சங்கம், ஆத்தூர் வட்டம், சேலம்.
2. மாதவன்.வே.இரா. (2021), தமிழில் நூற்பதிப்பு நெறிகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
3. தமிழ் இணையக் கல்விக் கழகம், வலைத்தளத்திலுள்ள உ.வே.சா ஆவணங்கள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.