வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
14. அதிகாரி செய்த துரோகம்
நல்லதை விரும்புவோரும் உண்டு. நல்லவர்களையும் நல்லனவற்றையும் விரும்பாதவர்களும் உண்டு. சிலபேர் நல்லவனாக நடித்து நல்லவர்களை ஏமாற்றித் துரோகம் செய்வதுண்டு. அதற்குக் காரணம் என்ன? எல்லாம் சுயநலம்தான். சிலருக்கு நல்லது செய்தாலே பிடிக்காது... நல்லது செய்பவர்களை எப்படியாவது ஒழித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார்கள்...
மகாபாரதத்தில் ஒரு கதை வருகிறது. அதைக் கேளுங்க...
சுயநலம் கொண்டவர்கள் எப்படி நல்லவர்களை வீழ்த்துகிறார்கள் என்பதை விளக்கப் பீஷ்மர் சொன்ன கதைதான் இது.
முன்னொரு காலத்தில் புரிகை என்னும் நகரில் பௌரிகன் என்னும் மன்னன் இருந்தான். முற்பிறவியில் செய்த கர்மப் பயனால் அடுத்த பிறவியில், ஒரு சுடுகாட்டில் நரியாகப் பிறந்தான். நரி தன் முற்பிறவியைப் பற்றி எண்ணி வருத்தம் கொண்டது. அது பிறர் தரும் மாமிசத்தை உண்பதில்லை. பிற உயிர்களுக்குத் துன்பம் தருவதில்லை. உண்மையையே பேசி வந்தது. விரதம் நியமங்களைத் தவறாமல் நிறைவேற்றி வந்தது. மரத்திலிருந்து தாமே உதிர்ந்த கனிகள்தாம் அதன் உணவு. அது விலங்காகப் பிறந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சாதுக்களைப் போல் விளங்கிற்று. தான் பிறந்த சுடுகாட்டை விட்டு வேறிடம் சென்று வசிக்க அது விரும்பவில்லை.
இந்த நரியின் போக்கைக் கண்ட மற்ற நரிகள், நரிகளுக்கு உள்ள பொதுவான வாழ்க்கை முறையையே அது மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்திக் கூறின. “சாதுக்களுக்கு விதிக்கப் பட்ட ஒழுக்கத்தை விட்டுவிட்டு நீ நரிக்குரிய பண்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். மயானத்தில் இருந்து கொண்டு மாமிசத்தை வெறுக்கக் கூடாது. நாங்கள் உண்பதை உனக்குத் தருகிறோம். சாதியின் இயல்புக்கு ஏற்ப நடந்துக் கொள்” என்றன.
மன அடக்கமும் பொறுமையும் உள்ள அந்த நரி இனிய சொற்களால் பதில் உரைத்தது. “பிறப்புக் காரணமாக நான் நரிகளுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்ள மாட்டேன். எந்தக் குலமாய் இருந்தாலும் ஒழுக்கத்தைப் போற்ற வேண்டும். எதைச் செய்தால் நம் இனத்தின் புகழ் பெருகுமோ, அதையே நான் செய்ய விரும்புகிறேன். சுடுகாட்டில் நான் வசிப்பது குற்றமாகாது. ஆத்மாதான் நல்ல செயல்களுக்குக் காரணமாக இருக்கிறது. ஒருவர் வாழும் இடத்திற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்பு இல்லை. பிறப்பு ஒருவருடைய ஒழுக்கத்திற்குக் காரணம் அன்று. ஒழுக்கம்தான் குலத்தை உயர்த்துகிறது. ஆத்மாதான் நல்ல செயல்களையும், கெட்ட செயல்களையும் செய்யத் தூண்டுகிறது. வசிக்கும் இடம் அன்று. ஆசிரமத்தில் இருக்கும் ஒருவன் அடாத செயல் புரிகிறான். ஆசிரமத்தில் இல்லாத ஒருவன் அறம் செய்கிறான். ஆகவே இருக்குமிடம் முக்கியமில்லை. நரியாகப் பிறந்ததால் - சுடுகாட்டில் வசிப்பதால் - மாமிசம் உண்ண வேண்டும் என்பதில்லை. ஆதலால் உங்கள் ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது” என்று கூறிற்று.
அந்த நரியின் ஒழுக்கம் மிக்க வாழ்க்கை காடெங்கும் உள்ள விலங்குகளால் பாராட்டப்பட்டது. ஒரு அரசப் புலி அந்த நரியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்றது. அத்தகைய ஞானம் நிறைந்த நரியை அமைச்சராக ஏற்க விரும்பியது. நரியை நோக்கி, “நண்பனே! உன் புகழை நான் அறிவேன், என்னுடன் இருந்து விடு. எனக்கு நல்வழி காட்டு. உனக்கு என்ன வேண்டுமோ அதை உண்ணலாம். நான் பிறந்த புலி ஜாதி கொடூரமானது. ஆயினும் நீ என் இதயத்தில் இடம் பெற்று விட்டாய். என் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொள்” என்று கேட்டுக் கொண்டது.
வலிமை மிக்க புலியை நோக்கி நரி பணிவுடன், “வேந்தனே! உன் பெருமைக்கு ஏற்ப பேசினாய். தருமத்தில் விருப்பம் உள்ளவரை நீ தேர்ந்தெடுப்பது நியாயமானதே! நீதியில் அன்பும் தருமத்தில் பற்றும் நன்மையில் விருப்பமும் உள்ளவர்களை நீ கண் போல போற்ற வேண்டும். தந்தையைப் போல கருத வேண்டும். உன்னுடைய செல்வத்தில் திளைத்து இன்பம் பெற நான் விரும்பவில்லை. என்னுடைய போக்கு உன்னுடைய சேவகர்களுக்குப் பிடிக்காது. அவர்கள் கொடுமை செய்பவர்கள். நம்மிடையே மோதலை உண்டாக்குவார்கள். நீ நல்ல மனம் கொண்டு பாவிகளைக் கூட மன்னித்து விடுகிறாய். எல்லா நன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன. ஆனால் என் நிலைமையில் நான் திருப்தியடைகிறேன். எனக்குப் பதவி ஆசையில்லை. அரச சேவையையும் நான் அறியேன். அரச சேவையில் இருப்போர் பலவகையான நிந்தனைகளுக்கு ஆளாக நேரிடும். காட்டில் வசிப்பது விரத நியமங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. எனது வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. நல்ல தண்ணீர், நல்ல காய், கனி, கிழங்கு ஆகியவற்றை உண்டு விரதமேற்றிருக்கும் எனக்கு அச்சத்துடன் கூடிய அரச வாழ்வு வேண்டாம். அரச சேவையில் ஈடுபட்டு வீண் அபவாதத்திற்கு ஆளாகி நாசம் அடைந்தோர் பலர். எனக்கு அந்தப் பதவி வேண்டாம்" என்றது நரி.
ஆனால் புலியோ வற்புறுத்தி வேண்டிக் கொண்டது. அதனால் நரி ஒரு நிபந்தனை விதித்தது. புலியை நோக்கி, “நீ உரிய மரியாதையை என்னைச் சார்ந்தவருக்குத் தர வேண்டும். எனது வாழ்க்கை முறையை நான் தொடர்ந்து மேற்கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும். நான் யாரிடமும் கலந்து ஆலோசிக்க மாட்டேன். காரணம் பொறாமை உள்ளவர்கள் என் ஆலோசனையைத் திரித்துக் கூறுவார்கள். உன் இனத்தாரின் நடவடிக்கை பற்றி என்னிடம் நீ கேட்காமல் இருக்க வேண்டும். என் யோசனைகளைப் புறக்கணிக்கும் அமைச்சர்களை நீ தண்டிக்கக் கூடாது. அதுபோலவே சினம் கொண்டு என்னைச் சார்ந்தவர்களையும் நீ எதுவும் செய்யக் கூடாது” என்று கூறியது நரி.
புலி, நரி விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. பின்னர் நரி அமைச்சர் பதவியை ஏற்றது.
அமைச்சரவையில் இடம் பெற்ற நரி புகழத்தக்க செயல்களைச் செய்து வந்தது. அதனால் அமைச்சர் அவையில் இருந்த மற்ற புலிகள் பொறாமையில் புழுங்கின. கொஞ்சம், கொஞ்சமாக நரியின் செயல்களைக் குறை கூறத் தொடங்கின. உள்ளத்தில் பகையும், உதட்டில் நட்பும் கொண்டு பழகத் தொடங்கின. எப்படியேனும் நரியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் எனக் கருதிய அவை பலப்பல கதைகளைக் கூறிப் பொருள் ஆசை காட்டி மனத்தை மாற்ற முயற்சி செய்தன. முடியவில்லை. எப்படியும் நரியைத் தீர்த்துக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தன.
அவை விலங்குகளுக்கு அரசனான புலிக்குத் தயாரித்து வைக்கப் பட்டிருந்த மாமிசத்தைத் தந்திரமாக நரியின் வீட்டில் வைத்து விட்டன. அதனால் பசியுடன் இருந்த அரசனுக்கு உரிய நேரத்தில் மாமிச உணவு கிடைக்கவில்லை. அரசப் புலியும் திருடனைத் தேடி வருமாறு ஆணை பிறப்பித்தது. அந்த நேரத்தில் நரியின் புகைப் புலிகள் அதன் மீது பழியைச் சுமத்தின. மாமிச உணவை, மிகச் சிறந்த மேதாவி என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் உம் அமைச்சனான நரி திருடிக் கொண்டுப் போய்த் தன்னிடத்தில் வைத்துக் கொண்டது என்று கூறின.
நரியின் திருட்டுச் செயல் கேட்ட அரசப் புலி சினம் கொண்டது. உடன் நரியின் பகைப் புலிகள் “இத்தகைய அற்பத்தனமான திருட்டு நரி எதைத்தான் செய்யாது? நீங்கள் நினைப்பது போல அந்த நரி அறிவு மிக்கது அல்ல. நாணயமானதும் அல்ல. தருமம் என்னும் பெயரில் அதருமம் செய்வதில் வல்லமை மிக்க நரியை எப்படித்தான் அமைச்சராக தேர்ந்தெடுத்தீரோ... தங்களுக்குரிய மாமிசத்தைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் அந்த நரிக்கு விரதம் ஒரு கேடா?அந்த நரிதான் மாமிசத்தைத் திருடியது என்பதை நிரூபிக்க இப்போதே போய் அதனைக் கொண்டு வருகிறோம்” என்று கூறி அப்படியே கொண்டு வந்தன.
அது கண்ட அரசப் புலி நரியைக் கொல்லத் தீர்மானித்தது.
இதனை அறிந்த புலியின் தாய் தன் மகனை நோக்கி, “மகனே... நன்கு ஆலோசித்துப் பார். வஞ்சனையாளர்களின் பேச்சை நம்பாதே... ஒரு வேலையைச் செய்பவரிடையே பொறாமை ஏற்படும். அந்தப் பொறாமை படிப்படியாகக் குரோத எண்ணத்தை வளர்க்கும். அதன் விளைவுதான் இப்போது நடப்பதும்... நன்கு யோசித்துப் பார். விரத சீலமுள்ள நரியா மாமிச உணவை நாடும்...? திருடும்...? பொய், மெய் போலவும், மெய் பொய் போலவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கும். அவற்றை ஆராய்ந்து அறிதல் மன்னனின் கடமை. ஆகாயம் கவிழ்ந்த வாணலியின் உள்பாகம் போலக் காட்சியளிக்கும். மின்மினிப் பூச்சிகள் நெருப்புப் பொறிகள் போல் தோன்றும். உண்மையில் ஆகாயத்தில் வாணலியின் தோற்றமும் இல்லை. மின்மினிப் பூச்சிகளிடம் நெருப்பும் இல்லை. எதையும் எண்ணிப் பார்த்து உண்மையைக் காண வேண்டும். அரசன் தன் மக்களில் யாரையும் கொல்ல முடியும். இது பெரிய காரியம் அன்று. உண்மை காண்பதுதான் பெரிய செயல். உண்மையைக் கண்டுபிடி. பாவிகளான மற்ற அமைச்சர்களின் பேச்சைக் கேட்காதே. பழுது எண்ணும் மந்திரிகளின் பேச்சைக் கேட்டால் உனக்கு அழிவு நிச்சயம் ஏற்படும். மேலான நரியைப் பகைக்காதே” என்று கூறிற்று.
அரசப் புலி ஆலோசித்துப் பார்த்தது. நரியின் மீது பழி சுமத்துதல் தவறு என உணர்ந்து கொண்டது. நரியை அணைத்துக் கொண்டது.நீதி நெறி உணர்ந்த நரிக்கு மான உணர்வு மிகுந்தது. பழிக்குப் பின் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்க விருப்பம் கொண்டது. ஆனால் புலி நட்பு முறையில் கண்ணீர் பெருக்கி நரியை அவ்வாறு செய்யாமல் தடுக்க முயன்றது. ஆனால் நரியோ தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தது. அது புலியை நோக்கி, "ஆரம்பத்தில் நீ என்னை நன்கு மதித்தாய். பிறகு பிறரின் சொல் கேட்டுப் பழி சுமத்தி அவமானப்படுத்தினாய். பதவியிலிருந்து நீக்கினாய். மீண்டும் பதவி பெற்றால் என் மீது உனக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? நானும் எப்படி பழையபடி நம்பிக்கை கொள்ள முடியும்? முதலில் பாராட்டிப் பதவியில் அமர்த்திய பின் குறை கண்டு பழி சுமத்துதல் அரச நீதி ஆகாது. இனிமேல் நீயும் என்னிடம் பழையபடி இருக்க முடியாது. நானும் மனம் கலந்து பழக முடியாது. நண்பர்களும் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். பிளவு ஏற்பட்ட பிறகு ஒன்று கூடுதல் கடினம்” என்பன போன்ற நீதிகளைக் கூறிய பின் புலியிடம் விடை பெற்றுச் சென்றது நரி. ஆயினும் மன நிம்மதி இழந்து, உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்து சுவர்க்கம் அடைந்தது' என்று கூறினார் பீஷ்மர்.
துரோகிகளால் நல்லவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?
இப்படித்தான் தாய்நாட்டுக்காகப் போராடிய மாவீரர் ஒருவரை மீர்சடக் என்பவன் துரோகத்தால் வீழ்த்தினான். இந்த மீர்சடக் என்பவனை மிர்சாதிக் முகம்மது மிர்னாதிக் என்றும் அழைப்பார்கள். இவன் உயர் அதிகாரியாக, தீரன் திப்புசுல்த்தானின் நம்பிக்கைக்கு உரிய ஆளாக இருந்தான். ஆனால், இதே மீர்சடக் பெருந்துரோகியாக மாறிட்டான். அது ஒரு பெரிய துரோகம்... பணத்துக்காவும் பதவிக்காகவும் பச்சோந்தியாக மாறி எதிரிகளின் எண்ணம் ஈடேறுமாறு செய்தான் துரோகி மீர்சடக்.
திப்பு சுல்த்தான்
1750-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள தேவனகள்ளி என்னுமிடத்தில் ஹைதர்அலிக்கும் அவரது இரண்டாவது மனைவி பாத்திமாவிற்கும் முதல் மகனாகப் பிறந்தார் திப்பு சுல்த்தான். திப்புவின் தந்தை மைசூர் மன்னரின் படையில் போர்வீரராகவும் சுயமாக ஒரு சிறிய போர்ப்படையினையும் வைத்திருந்தார். திப்புவின் தாயாரின் இயற்பெயர் ஃபகர்உன்நிஸா என்பதாகும். இவரின் தந்தையான சாகில் தாரிக் என்பவர் ஆந்திராவில் உள்ள கடப்பா என்னும் பகுதிக்கு ஹைதராபாத் நிஜாமினால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். சாதாரண படைவீரரான ஹைதர் அலியின் வீரம் திறமை ஆகியவற்றை அறிந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார் ஃபர்உன்நிஸா.
திப்புசுல்த்தான் தனது தந்தையிடம் இந்தியப் போர்க்கலையையும் தனது தந்தையின் இராணுவத்தில் பணியாற்றிய பிரெஞ்சு அதிகாரி ஒருவரிடம் மேல்நாட்டுப் போர்க்கலையையும் கற்றுக் கொண்டார். இளம் வயதிலேயே திப்புசுல்த்தான் தந்தையுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் பல போர்களில் ஈடுபட்டார்.
1766-ஆம் ஆண்டு திப்புசுல்த்தான் தனது 15-அவது வயதில் தனது தந்தையினால் கேரளாவில் நடைபெற்ற போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 1769-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற முதல் மைசூர்ப் போரின் போது தனது 16-ஆம் வயதில் தளபதியாகப் படை நடத்திச் சென்றார் திப்புசுல்த்தான்.
1775 முதல் 1782 வரை நடைபெற்ற முதல் ஆங்கிலேய மராட்டியப் போர்களிலும் திப்புசுல்த்தான் பங்கு கொண்டார். மராட்டியத்திடமிருந்து சில பகுதிகளைப் பெற்று மைசூர் அரசோடு இணைத்தனர். இப்போர்களின் முடிவில் ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. இதனால் பலம் பெற்ற ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியையும் திப்புசுல்த்தானையும் எதிர்த்தனர். ஆனால் அவர்களுக்கு அஞ்சாது இருவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டனர்.
திப்பு பெற்ற சிறப்புகள்
1769-ஆம் ஆண்டு முதலாம் மைசூர்ப் போர் முடிவுக்கு வந்த போது ஆங்கிலேயர்கள் திப்புவுடன் சமாதான உடன்படிக்கைக்கு முன்வந்தனர். இந்த உடன்படிக்கையின் போது திப்பு உடனிருந்தார். ஆங்கிலேயர்களுக்காகப் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட போது ஹைதர் அலியின் சார்பில் கலந்து கொண்ட திப்புவின் திறமையையும், அரசியல் அறிவையும் ஆங்கிலேயர்கள் கண்டு வியப்படைந்தனர். இந்த உடன்படிக்கையின் போது சமாதானம் செய்பவராகக் கலந்து கொண்ட ஹைதராபாத் நிஜாம் திப்புவின் மீது கொண்ட ஈடுபாட்டினால் ஹைதராபாத் நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 6000 படைவீரர்களுடன் திப்பு நிஜாம் அரசவைக்கு நல்லெண்ணத் தூதுவராகச் சென்றார்.
நிஜாம் திப்புவிற்கு ஃபரே அலிகான், நவாப்உத்தவுலா போன்ற சிறப்புகளை வழங்கினார். திப்பு இச்சிறப்புகளை தனது 18-ஆவது வயதிலேயே பெற்றார். 1780-ஆம் ஆண்டு செப்டம்பரில் காஞ்சிபுரத்தை அடுத்து நடைபெற்ற பொல்லலார் போரில் ஆங்கிலப்படை முற்றிலும் அழிக்கப்பட்டது. கர்னல் பெய்லி, அவருக்குத் துணையாக வந்த சர்ஹெக்டர் மன்றோ போன்றோர் படுதோல்வி அடைந்தனர். இது திப்புவிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
ஆங்கிலேயர்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்னைக்கு ஓடினர். கர்னல் பெய்லி திப்புவால் கைதுசெய்யப்பட்டார். இது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் அடைந்த மாபெரும் தோல்வியாகும். திப்பு 1781-ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சித்தூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். சென்னைக்கு அருகிலிருந்த கோட்டையை இழந்ததை ஆங்கிலேயர்கள் பெரிய தோல்வியாகக் கருதினர். 1782-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் நாள் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள அன்னக்குடி என்னுமிடத்தில் நடந்த போரில் ஆங்கிலப் படையினைரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடித்தார். ஆங்கிலப் படையினரையும் தளபதியையும் ஆங்கிலேயர்களையும் திப்பு சிறைப்படுத்தினார். ஆங்கிலேயர்களின் அனைத்து ஆயுதங்களையும் தனதாக்கிக் கொண்டார். இங்ஙனம் மாவீரராக இளமையிலிருந்தே திப்பு விளங்கினார்.
மைசூர் அரசர் பதவி
ஹைதரலி காலமானதால் 1782-ஆம் ஆண்டில் திப்பு மைசூரின் அரசரானார். தந்தையின் வழியில் தொடர்ந்து ஆங்கிலேயர்களைத் திப்பு எதிர்த்துப் போரிட்டார். ஆங்கிலேயருடன் நடந்த பல போர்களில் திப்பு வெற்றி பெற்றார். திப்புவை அடக்குவதற்காக பம்பாய் மாகாண ஆளுநர் பிரிகேடியர் மேத்யூஸ் என்பவரைப் புதிய தளபதியாக நியமித்து மைசூரைத் தாக்குமாறு அனுப்பினார்.
மைசூரின் வடக்குப் பகுதியைத் தாக்கிய இவர் திப்புவால் 1783-ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆங்கிலேயர்கள் மீண்டும் 1783-ஆம் ஆண்டின் இறுதியில் கர்னல் புல்லர்ட்டன் தலைமையில் வடக்குப் பகுதியை மீண்டும் தாக்கி அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். இப்போர் 1769-ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 4 ஆண்டுகள் வரை நீடித்தது. பல இடங்களில் இப்போர் நடைபெற்றது.
இப்போரில் இரு தரப்புகளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவுடன் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்தனர். 1784-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் நாள் ஆங்கிலேயர்களுக்கும் திப்புவிற்கும் மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது. இவ்வுடன்படிக்கையின்படி போரில் அவரவர் கைப்பற்றிய பகுதிகளைத் திரும்ப ஒப்படைப்பதென்றும் இருதரப்புகளிலும் உள்ள போர்க் கைதிகளை விடுவிப்பதென்றும் உடன்படிக்கை முடிவு செய்யப்பட்டது.
இவ்வுடன்படிக்கை இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆங்கிலேயர்களுக்கு நிபந்தனைகள் விதித்து அவர்களிடம் இருந்து கையொப்பம் பெற்ற சம்பவம் வேறெப்போதும் நடந்ததில்லை என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் ராஜதந்திரத்துடன் திப்பு நடந்து கொண்டார். ஆங்கிலேயர்களுக்கு இவ்வொப்பந்தத்தினால் ஏதும் நன்மைகள் கிட்டவில்லை.
இவ்வுடன்படிக்கையை அப்போதைய இந்தியாவின் தலைமை ஆளுநரான வாரன்ஹேஸ்டிங் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் நாட்டு மன்னருக்கு ஏற்பட்ட அவமானமாக இதனை அவர் கருதி சென்னை மாகாண அரசையும் ஆளுநரையும் தண்டிக்க வேண்டும் என்று இங்கிலாந்து மன்னரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
துரோகங்களின் கூட்டணி
இவ்வுடன்படிக்கையால் ஹைதராபாத் நிஜாம், மராட்டியர்கள் ஆகியோர் கலக்கமடைந்தனர். அவர்கள் திப்புவிடம் இழந்த பகுதிகளை மீட்க முடியாமல் போனது. இதனால் கொதிப்படைந்த அவர்களிருவரும் திப்புவிற்கு எதிராகக் கூட்டணி அமைத்தனர். இருவரும் ஆங்கிலேயருக்கு உதவி திப்புவை ஒழிக்க முயற்சித்தனர். இனத் துரோகிகள் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சதி செய்யத் தொடங்கினர்.
ஆனால் திப்பு மராட்டியருக்கு பதானிப் பகுதியை விட்டுக் கொடுத்து அவர்களிருவரிடமும் நட்புணர்வுடன் நடந்து கொள்ள முயன்றார். ஆனால் மராட்டியர்கள் நயவஞ்சக எண்ணத்துடன் தங்களது பகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். இத்துரோகச் செயலுக்கு மராட்டியர் பிற்காலத்தில் மிகவும் வருந்த நேரிட்டது.
திருவாங்கூர் படையெடுப்பு
1889-ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மீது திப்பு போரிட்டுத் தாக்குதல் நடத்தினார். திப்புவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத திருவாங்கூர் மன்னர் ஆங்கிலேயரின் உதவியை நாடினார். ஆங்கிலேயர், மராட்டியர், நிஜாம், திருவாங்கூர் மன்னர் என நால்வர் இணைந்து கூட்டணியாகத் திப்புவைத் தாக்கினர்.
இப்போர் இரண்டாண்டுகள் நடைபெற்றது. திப்புவின் தாக்குதலை இந்நால்வர் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆங்கிலேயர்கள் அமெரிக்கப் போரில் அனுபவம் பெற்ற காரன்வாலிஸ் என்பவரை அழைத்து கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்தது. இவரின் தலைமையில் மீண்டும் போர் தொடர்ந்தது. இவர் 1791-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் நாள் பெங்களூரைக் கைப்பற்றினார். பின்னர் திடீரென ஸ்ரீரங்கபட்டினக் கோட்டையை முற்றுகையிட்டார். இத்தாக்குதலை திப்பு எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் மலபார் பகுதியிலிருந்து திரும்பி வந்து போரிட்டார். இப்போரில் ஆங்கிலேயரின் கை ஓங்கியது. இறுதியில் ஸ்ரீரங்கபட்டணம் கோட்டையினுள் ஆங்கிலப்படை நுழைந்துவிட்டது.
திப்பு இப்போரில் ஆங்கிலேயருடன் உடன்பாடு செய்து கொண்டார். இதன்படி தனது அரசின் கால் பகுதியினையும் மூன்று கோடி ரூபாய்ப் பணமும் இழப்பீடாகத் தரச் சம்மதித்தார். உடனடியாகத் திப்புவால் இப்பெருந்தொகையினைச் செலுத்த முடியவில்லை. இதனால் ஆங்கிலேயர்கள் திப்புவின் இரு மகன்களை பிணையாக அழைத்துச் சென்றனர். திப்பு மிக விரைவில் தான் ஒப்புக் கொண்ட தொகையினைச் செலுத்தி தனது இரண்டு மகன்களை மீட்டுக் கொண்டார்.
இச்செயலைத் திப்பு தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாகக் கருதினார். இதன்பின் எந்த ஒரு உடன்படிக்கைக்கும் ஆங்கிலேயருடன் இணங்குவதில்லை என்று முடிவெடுத்தார். ஆங்கிலேயர்களைத் தனது பரம எதிரியாகக் கருதினார் திப்பு. பிரெஞ்சுக்காரர்களுடன் நட்பினைப் பெருக்கிக் கொள்ள விரும்பி தனது தூதுவர்களைத் திப்பு நெப்போலியனிடம் அனுப்பி உதவி கோரினார். நெப்போலியனும் அதற்கு உதவுவதாகக் கூறித் தனது படையுடன் ஆசியாவை நோக்கிப் பயணமானார்.
மைசூர்ப் புலி
திப்பு அனைத்துத் துறைகளிலும் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். போர்க்களத்தில் தனித்து விடப்பட்டாலும் கலங்காது வெற்றி வீரராக வலம் வந்தார் திப்பு. எத்தகைய இக்கட்டான நேரத்திலும் மனஉறுதியை இழக்காதவராக திப்பு விளங்கினார். சிறுவயதாக திப்பு இருந்தபோது இவருக்குப் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த பிரெஞ்சுக்காரர் ஒருவருடன் மைசூர்க் காட்டை ஒட்டினாற் போன்ற பகுதியில் உலவிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகக் காட்டிற்குள்ளிருந்த புலி ஒன்று அவர்கள் முன்பாக எதிர்ப்பட்டு இவர்களைத் தாக்க முற்பட்டது. சுதாரித்துக் கொண்ட திப்பு புலியைக் கைத்துப்பாக்கியால் குறிபார்த்துச் சுட்டார். ஆனால் கைத்துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. இதனைக் கண்டு அஞ்சி நடுங்கிய பிரெஞ்சுக்கார் அதிர்ச்சியில் மயங்கிவிழுந்தார்.
திப்புசுல்த்தான் கைத்துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டு புலியின் மீது பாய்ந்து போரிட்டார். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின் புலி மயங்கி விழுந்தது. மயங்கிக் கிடந்த நண்பரை மயக்கம் தெளிவித்து எழுப்பி கீழே கிடந்த புலியைக் காட்டினார். பின்னர் புலியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அரண்மனைக்கு நடந்து வந்தார். திப்புவின் வீரத்தைப் பிரெஞ்சுக்காரர் அங்கிருந்தவர்களிடம் கூற அனைவரும் வியப்புற்றனர். இதனை அறிந்த மக்கள் திப்புசுல்த்தானை மைசூர்ப்புலி என்று அழைத்தனர்.
திப்புசுல்த்தான் சிறந்த வீரராக மட்டுமல்லாது நிர்வாகத் திறன் மிகுந்தவராகவும் விளங்கினார். திப்புவிற்கு இனம், மொழி கடந்து உலகம் முழுவதும் நண்பர்கள் இருந்தனர். ஜாக்கோப்பியன் கிளப் என்ற பெயரில் கிளப் ஒன்றைத் தொடங்கியிருந்த திப்பு சுல்த்தான் அதன் மூலம் ஐரோப்பிய நண்பர்களைப் பெற்றிருந்தார். அனைத்து மதத்தினரையும் திப்புசுல்த்தான் மதித்து நடந்தார். சிருங்கேரி மடத்திற்குப் பல மானியங்களை வழங்கினார். இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்களை வழங்கினார். சமயப் பொறையுடையவராக விளங்கினார். திப்புவின் காலத்தில் வணிக் செழித்து வளர்ந்தது. இதனைக் கண்ணுற்ற மராத்தியரும் ஆங்கிலேயரும் நிஜாமும் திப்புவின் மீது பொறாமை கொண்டனர். பொறாமைத் தீயில் கருகிய ஆங்கிலேயர்கள் திப்புவை ஒழிக்கத் திட்டமிட்டனர்.
துரோகிகளின் செயல்கள்
ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகளை அறிந்த திப்பு பெரும்படை திரட்டினார். ஆங்கிலேயர்கள் திப்புவை அடக்க வெல்லெஸ்லி என்பவனின் தலைமையில் படைகளை அனுப்பினர். வெல்லெஸ்லிக்குத் திப்புவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. அதனால் திப்புவை ஒழிக்க எண்ணி 1799-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வேலூரில் அப்போது இருந்த 21000 போர் வீரர்களைக் கொண்ட படை ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் மைசூர் நோக்கிப் புறப்பட்டது.
இந்தப் படையுடன் 20.2.1799-ஆம் நாள் ஆம்பூர் என்ற இடத்திற்கு அருகில் கர்னல் வெல்லெஸ்லியின் தலைமையில் ஹைதராபாத் நிஜாமின் 16000 பேர்கள் கொண்ட படை ஒன்றும் சேர்ந்து கொண்டது. கும்பினியாரின் பம்பாய்ப் படையில் 6400 பேர்கள் ஜெனரல் ஸ்டூவர்ட் என்பவன் தலைமையில் திருச்சியை நோக்கிக் கிளம்பினர்.
ஜெனரல் ஹாரிஸ் என்ற படைத்தளபதி தனது படையுடன் 1799 மார்ச் மாதம் 5-ஆம் தேதி மைசூர் இராஜ்யத்தின் எல்லையை வந்தடைந்தான். அதற்குப் பிறகு வடகிழக்குப் பகுதிகளான காளிமங்கலம், பங்களூர் முதலிய இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றான். பம்பாய்ப் படையும் பிப்ரவரி 21-ஆம் நாள் குடகு ராஜ்யத்தின் எல்லையை வந்தடைந்தது.
ஆங்கிலேயர்கள் தன்மீது எவ்வாறு திடீரென்று தாக்குதல் நடத்தினார்களோ அதுபோன்று தானும் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கருதி திப்பு குடகு எல்லையில் சித்தேசுவரா என்ற இடத்தில் ஸ்டூவர்ட் என்ற ஆங்கிலேயனின் தலைமையில் வந்த படைகளைத் தாக்கும் பொருட்டு 11800 பேர்கள் கொண்ட படையுடன் சித்தேசுவராவை நோக்கி வந்தார். வருவதற்கு முன்னர் ஸ்ரீரங்கபட்டினத்துக் கோட்டைக் காவலை சையத் சாகிப் என்பவனிடமும் மந்திரி பூர்ணய்யா என்பவனிடமும் ஒப்படைத்துவிட்டு திப்பு சென்றார்.
சித்தேசுவராவை நோக்கி திப்பு வருவதை அறிந்த ஆங்கிலேயர் அவரை எதிர்க்க மிகவும் தயராக நின்றனர். எனவே திப்பு அங்கிருந்து வெற்றிகரமாக பெரியபட்டினம் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். இதற்கிடையில் ஜெனரல் ஹாரிஸ் என்ற தளபதியின் படை கங்கனகள்ளி என்ற ஊரில் மதூர் என்ற ஆற்றைக் கடந்து மைசூரை நோக்கி விரைந்து வந்துவிட்டது. இதனை அறிந்த திப்பு பெரிய பட்டினத்திலிருந்து ஸ்ரீரங்கபட்டினத்திற்கு படையுடன் ஓடிவந்தார்.
ஆனால் திப்பு வருவதற்கு முன்னதாகவே ஜெனரல் ஹாரிசுடன் கோட்டைக் காவலுக்கிருந்த பூர்ணய்யாவும் சையத் சாகிப்பும் ஆங்கிலேயர்களுடன் இரகசிய உடன்படிக்கையினைச் செய்து கொண்டனர். ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு திப்புவிற்குத் துரோகமிழைக்கத் தொடங்கினர். மைசூரை நோக்கி வந்த ஹாரிஸை இவர்கள் இருவரும் தடுத்து நிறுத்தவில்லை.
இதற்கிடையில் பிளாயிட் தலைமையில் சென்ற கம்பெனிப் படையும் பம்பாயிலிருந்து வந்த ஸ்டூவர்ட் படையும் ஒன்று சேர்ந்துவிடாதவாறு தடுத்து நிறுத்தும்படி குலாம் உதீர்க்கான் என்ற தன் தளபதியைத் திப்பு ஒரு படையுடன் அனுப்பினார். ஆனால் அவன் பெருந்துரோகத்தைச் செய்தான். இரண்டு படைகளும் கலக்கும்படி அவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
இதனால் ஹாரிஸ் கோட்டையின் வெளிமதில்சுவரின் காவல் தளத்தை ஏப்ரல் 26-ஆம் தேதி இரவில் கைப்பற்றினான். இதற்கிடையே திப்பு ஹாரிசைச் சந்தித்து சமாதானம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஆங்கிலேயர்கள் பெருந்தொகையைக் கேட்டனர். இதனைக் கொடுக்க முடியாது என்றறிந்த திப்பு போரைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுத்தார்.
நயவஞ்சகன் மீர்சடக்
இந்நிலையில் திடீரென்று கோட்டைச் சுவரில் மே மாதம் 3-ஆம் நாள் ஒரு விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசலின் வழியாக ஆங்கிலேயர் நுழைவதற்கு முன்பு அவர்கள் திப்புவின் திவான்களான பூர்ணய்யா, மீர்சடக் மற்றும் திப்புவின் படைத்தளபதி குலாம் உதிர்கான் என்பவனையும் கண்டுபேசி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றனர்.
மீர்சடக் படைத் தலைவர்களில் ஒருவனான நாதிம் என்பவனை அழைத்துக் கோட்டைக் காவல் பட்டாளத்திற்கு மூன்றாம் தேதி சம்பளப் பட்டுவாடா செய்யப்படுவதால் நகருக்குள் வந்து சம்பளம் பெற்றுப் போகும்படி அறிக்கை ஒன்று விடச் சொன்னான். அதனால் உள்கோட்டைக் காவல் வீரர்கள் நாதிம் கூறியபடி நகருக்குள் சம்பளப் பட்டுவாடாவிற்காகக் காத்துக் கிடக்கும் சமயத்தில் ஆங்கிலப் படைகள் உள்புகுந்துவிட்டன.
துரோகிகள் தக்க சமயம் பார்த்து வெண்ணிறக் கைக்குட்டைகளை வீசுவதன் மூலம் கோட்டை மதில் மீதிருந்து சைகை செய்து ஆங்கிலேயரை உள்ளே வரவழைத்தனர். அவ்வாறு வந்த ஆங்கிலப் படைகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒன்று தெற்காகவும் மற்றொன்று வடக்காவும் முன்னேறி இறுதியில் இரண்டும் நகரின் கீழ்ப்புறத்தில் சந்திப்பது என்று முடிவு செய்தனர். அதோடு கோட்டைக்குள் வெளி மதில் சுவர்களுக்கும் உள் மதில் சுவர்களுக்கும் இடையே தீயிடடுக் கொளுத்தி எஞ்சியுள்ள காவல் வீரர்களின் உயிருக்கு உயிராகத் திகழ்ந்த சையத் கபார் என்பனையும் மீர்சடக்கின் உதவியால் கொன்றனர்.
இதை அறிந்த திப்பு தானே படைக்குத் தலைமை தாங்கிப் போரை நடத்த முற்பட்டார். ஆனால் துரோகிகளின் செயல் ஈடேறியதால் கோட்டையின் உள்புறமும் வெளிப்புறமும் ஆங்கிலேயர் வசமாயின. இதை உணர்ந்த திப்புவின் மனம் திகில் அடைந்தது. சிதிலமடைந்திருந்த கோட்டைச் சுவரை உடனே அடைக்குமாறு திப்பு உத்தரவிட்டுவிட்டு அரண்மனைக்குள் சென்றார். அங்கிருந்த சோதிடர்கள் மே மாதம் 4-ஆம் தேதி கெட்ட நாள் என்றும் அதோடு திப்புவிற்கு அங்காரக தோஷம் கழிந்துவிடுகின்றது என்றும் அதற்குத் தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறவே அவர்கள் சொன்னதை எல்லாம் திப்பு செய்தார்.
ஸ்ரீரங்க பட்டணத்துக் கோட்டைச் சுவரின் வடமேற்கு மூலையில் உடைந்திருந்த சுவரைக் கட்டுமாறு திப்பு கூறியதை மீர்சடக் சரியாகச் செயல்படுத்தவில்லை. வெறும் பூச்சாகப் பூசி அதில் ஆங்கிலப் படை வருவதற்கு வழியும் அமைத்தான். இதனால் ஆங்கிலேயர்களின் பீரங்கித் தாக்குதலில் சரிந்து விழுந்தது. இதனைக் கேள்வியுற்ற திப்பு எதிரில் எந்த அராசங்க அதிகாரியும் கண்ணில் படாததால் தானே போர்க்களத்தில் இறங்குவதென்று முடிவு செய்து தனது மெய்க்காப்பாளன் ராஜாக்கான் மற்றும் வேலைக்காரர்கள் 20 பேர் ஆகியோருடன் சுவர் இடிந்த திசைக்குச் சென்றார்.
துரோகத்தால் வீழ்ந்த தீரன்
சுவர் இடிந்த இடத்திற்கு வந்த திப்புவிற்குத் திக்கென்றிருந்தது. ஏனெனில் அங்கு யாரும் இல்லை. அங்கு உல்லாசமாக உலாவந்த மீர்சடக்கும் கோட்டையின் கில்லேதாரான மீர்நாடியும் மட்டுமே எதிர்ப்பட்டனர். இடிந்த சுவர்ப்பக்கம் சுமார் 600 அடி தூரத்தில் ஒரு உயரமான சுவர் இருந்தது. அதில் ஒரு சிறு கதவு வழியாகத் தன் வீரர்களுடனும் மெய்க்காப்பாளருடனும் திப்புசுல்த்தான் குதிரையில் சென்றார்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்துசென்ற மீர்சடக் மீர்நாடிம் இருவரும் தந்திரமாகக் கோட்டைக் கதவின் உட்புறம் நின்று கொண்டு, அனைவரும் சென்ற பின்னர் கதவைப் பலமாக மூடித் தாளிட்டனர். வேறு யாரும் கதவைத் திறக்காதவாறு மீர்நாடிம் துப்பாக்கியுடன் மேல்த்தளத்தில் நின்று காவல் காத்தான்.
இதனை அறியாத திப்பு தன் எதிரே வந்து பாய்ந்த ஆங்கிலேயர்களைத் தாக்கினார். இம்மோதலில் அவருடன் வந்த அனைவரும் கொல்லப்பட்டனர். அப்போது பெரிய குண்டு ஒன்று வந்து திப்புசுல்த்தானின் காலில் பட்டது. இதனால் தான் அங்கிருப்பது ஆபத்து எனத் தெரிந்து கொண்டு கோட்டைக்குள் செல்ல முயன்றபோது கோட்டைக் கதவு தாளிடப்பட்டதை அறிந்து கொதித்துப் போனார்.
கோட்டைக் கதவைத் திறக்குமாறு தட்டிப் பார்த்தும் யாரும் திறக்கவில்லை. கோட்டையின் மேல்த்தளத்தில் நின்று கொண்டிருந்த மீர்நடிம் குறுநகை செய்தானே தவிர திறக்கவில்லை. திப்பு ஆங்கிலேயர்களைப் பார்த்துத் திரும்பும் போது அவர் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. துரோகிகளின் செயலால் தீரன் திப்புசுல்த்தான் கீழே வீழ்ந்தார்.
திப்புசுல்த்தானின் மெய்க்காப்பாளனும் வீழ்ந்தான். கீழே கிடந்த திப்புவின் தங்கக் கச்சையைக் கண்டு அதனை ஆங்கிலேயப் போர்வீரன் அதனை எடுக்கக் குனிந்தான் அதனை உயிர்போகும் நிலையில் கவனித்துவிட்ட திப்பு தன் வாளை ஓங்கி அவனை வெட்டி வீழ்த்தி மரணத்தைத் தழுவினார்.
ஆங்கிலேயர்கள் மாவீரன் திப்புவின் உடலைக் கண்டெடுத்தனர். மறுநாள் மாலை திப்புவின் சடல ஊர்வலம் தொடங்கியது. அரச மரியாதையுடன் திப்புவின் சடல ஊர்வலம் சென்றது. கஞ்சத்தில் உள்ள கும்பாள் என்ற லால்பாக் தோட்டத்தை அடைந்தவுடன் திப்புவின் தாயாரின் சமாதிக்குப் பக்கத்தில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏழைகளுக்கு 5000 ரூபாய்க்கான தான தருமங்கள் செய்யப்பட்டன. அவ்வேளையில் இடியுடன் கடுமையான மழை பொழியத் தொடங்கியது. அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் மீது இடிவிழுந்தது. அதில் அவர்கள் இறக்கப் பல ஆங்கிலப் படைவீரர்கள் காயமடைந்தனர்.
இறக்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து தன்கூடவே இருந்த துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு திப்பு இறந்தார். அவர் இறந்தவுடன் அங்கு வந்த அவரது வீரர்களுள் சிலர் மீர்சடக்கின் துரோகத்தை அறிந்து வாளால் அவனை வெட்டி வீழ்த்தினர். துரோகிகள் நீடித்து வாழ்வதில்லை. அவர்களுக்குரிய தண்டனையை உடன் அவர்களுக்கு அறமே வழங்கிவிடுகின்றது.
உலகின் முதன் முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் போர்க்களத்தில் அறிமுகப்படுத்தியவர் திப்புசுல்த்தானே ஆவார். இவரது ராக்கெட் தொழில்நுட்பம் இன்றளவும் அமெரிக்காவில் ஆராயப்பட்டு வருகின்றது. இவர் தயாரித்த இரண்டு ராக்கெட்டுக்கள் அமெரிக்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நேரிய வழியில் ஆங்கிலேயர்கள் திப்புவைத் தாக்கி இருந்தால் வென்றிருக்க முடியாது. அழிந்து போயிருப்பர். அவர்கள் துரோகிகள் வாயிலாக நயவஞ்சகத்துடன் போரிட்டதால்தான் அவரை வீழ்த்த முடிந்தது. திப்புவின் மறைவுக்குப் பின்னர் மிகப் பெரிய அநியாயம் ஒன்று நிகழ்ந்தது. சீரங்கபட்டினம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 45, 58,350 வராகன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆங்கிலேய அதிகாரிகள் கொள்ளையடித்தது போக அவர்களின் வீரர்கள் மனம்போன போக்கில் கொள்ளையிட்டனர். ஆங்கிலேயர்கள் திப்புவின் தங்கச் சிம்மாசனத்தையும் வெள்ளி அம்பாரியையும் பிரிட்டிஷ் அரசிற்குக் கொடுத்தனர். ஜெனரல் ஹாரிசுக்கு 21,43,530 ரூபாய் மதிப்புள்ள பொன்னும் பொருளும் கிடைத்தன. வெள்ளையர்கள் கொள்ளையர்கள் என்பதற்கு இச்சீரங்கபட்டினச் சீரழிவே சரியான சான்றாகும்.
மிகப் பெரிய வீரனாக இருந்தாலும் சிறந்தவராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இல்லையெனில் அவர்களை வீணர்கள் வீழ்த்தி விடுவார்கள். திப்புசுல்த்தான் அதிகாரியையும், அமைச்சரையும் நம்பியதால்தான் நயவஞ்சகர்களின் வலையில் வீழ்ந்தார். ஆனால் அவர் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலையான இடத்தைப் பெற்று அனைவராலும் போற்றப்படுகின்றார். நயவஞ்சகர்கள் அற்பமாக அனைவராலும் கருதப்பட்டு நாள்தோறும் தூற்றப்படுகின்றனர்.
துரோகம் சிறுகதை அல்ல... அது தொடர்கதை... காலத்திற்கேற்றவாறு வேடமிட்டு மனித குலத்தினைத் தொடர்ந்து வரும்... நாம்தான் விழிப்புடன் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்... நயவஞ்சகர்கள் நடிப்பார்கள்... தங்களின் நடிப்பால் பிறரை ஏமாற்றிக் கவிழ்ப்பார்கள்... அவ்வாறு நடித்து நல்லவராக விளங்கிய ஒருவரை வீழ்த்தினார்கள் துரோகிகள்... ஆஸ்ட்ரகாத் என்ற நாடோடி இன மக்களுக்கு இருக்க வீடும் இடமும் முகவரியும் கொடுத்தார் ஒருவர்... ஆனால் அவரை நயவஞ்சகர்கள் கொன்றனர்... நாடோடி மக்களுக்கு முகவரி கொடுத்தவர் யார்? அவரைத் துரோகத்தால் வீழ்த்தியவர்கள் யார்...? என்பதை அறிந்து கொள்ள அடுத்தபகுதி வரை காத்திருங்கள்...
*****
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|