ஒரு சமயம் பண்டிதமணி கதிரேசனார் அரியக்குடியில் உள்ள ஓர் அன்பரின் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.
இரவு உணவு முடிந்தபின் சில அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வீட்டு அன்பர் பண்டிதமணி அவர்களுக்கு ஒரு கிண்ணத்தில் பால் கொடுத்தார்.
கிண்ணத்தை உற்றுப் பார்த்த பண்டிதமணி, ‘‘அன்பரே! பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டுள்ளார்’’ என்றார்.
அன்பர்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பொருள் புரிந்தது போல் தலையாட்டிச் சிரித்தனர்.
பண்டிதமணி மீண்டும், ‘‘இந்த வீட்டுச் சுவற்றில் பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலிலும் அது காட்சியளிக்கிறது’’ என்றார்.
பாலை அவர்களிடம் காட்டினார்.
அதில் எறும்பு ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
‘‘எறும்புக்கு இந்தக் கிண்ணம் பாற்கடல்தானே! இது சீனியில் வாசம் செய்கிறதல்லவா? அதனால் இந்த எறும்பும் சீனிவாசன்தான்’’ என்று பண்டிதமணி விளக்கியதும் அந்தச் சிலேடையின் நயத்தை உணர்ந்து ரசித்தனர்.