புதிதாகப் பொறுப்பேற்ற பாதிரி ஒருவர் தமது முதல் பிரசங்கத்திற்குத் தயாரானார். தாம் பேச வேண்டியதை மனப்பாடம் செய்து, உற்சாகத்துடன் சர்ச்சுக்குப் போனார்.
ஆனால் சர்ச்சின் உள்ளே யாருமே இல்லை. சற்று நேரம் பொறுத்திருந்த பிறகு பொறுமையிழந்து திரும்பிப் போக இருந்தார்.
அப்போது மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மெதுவாக உள்ளே வந்து அமர்வதைக் கண்டார்.
பாதிரியார் அவனிடம், “வேறு யாரும் வரவில்லையே, நான் என்ன செய்யலாம்?" என்று அன்புடன் கேட்டார்.
அந்தச் சிறுவன், “ஃபாதர், நான் வெறும் மாடு மேய்க்கும் சிறுவன். ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். வெயிலில் கஷ்டப்பட்டு களைத்து என் தொழுவத்திற்கு மாடுகள் வந்தால், அவற்றிற்குக் கட்டாயம் நான் வைக்கோல் போடுவேன்" என்றான்.
பாதிரியார் உடனே உற்சாகத்துடன் தாம் மனப்பாடம் செய்து வைத்த பிரசங்கத்தைக் கடகட வென்று சொல்லி முடித்தார்.
“எப்படி இருந்தது என் பிரசங்கம்?" என்று அந்தச் சிறுவனிடம் பாதிரியார் மீண்டும் கேட்டார்.
பாதி தூக்கத்திலிருந்த சிறுவன், “ஃபாதர், நான் ஒன்றும் தெரியாத மாடு மேய்க்கும் சிறுவன்தான். ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். எனது மாட்டுக் கூட்டத்திலிருந்து ஒரு மாடு மட்டும் பசியுடன் தொழுவத்திற்கு வந்தால், தொழுவத்திலிருக்கும் வைக்கோல் முழுவதையும் அதைத் தின்ன வைக்க மாட்டேன்" என்றான்.