அசோகா அல்வா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பயத்தம்பருப்பு - 150 கிராம்
2. சர்க்கரை - 600 கிராம்
3. நெய் - 100 மி.லி
4. கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
5. மைதா - 2 மேசைக்கரண்டி
6. பால் - 250 மி.லி
7. சர்க்கரை சேர்க்காத பால்கோவா - 50 கிராம்
8. ஏலத்தூள் - 1/4 தேக்கரண்டி
9. பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
10. சிகப்பு நிற உணவுப் பொடி - 2 சிட்டிகை
11. முந்திரிப்பருப்பு - 15 எண்ணம்
12. உலர் திராட்சை - 15 எண்ணம்
13. தேங்காய் எண்ணெய் - 50 மி.லி
செய்முறை:
1. வாணலியில் சிறிது நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை போட்டு வறுக்கவும்.
2. பயத்தம் பருப்பை முதலில் வெறும் வாணலியில் போட்டு வறுத்து எடுக்கவும்.
3. அதனுடன் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மைதா மற்றும் கோதுமை மாவைச் சேர்த்து நன்கு வறுக்கவும்.
5. அதில் மசித்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும்.
6. அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
7. முதலில் இளகி பின் கெட்டியாக வரும் போது சிறிது சிறிதாக நெய் விட்டு நன்கு கிளறவும்.
8. சற்று சேர்ந்தாற் போல் வரும் போது உதிர்த்த பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும்.
9. அதில் உணவு நிறப் பொடி, ஏலத்தூள் மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறவும்.
10. நெய் முழுவதும் இழுத்து நன்கு சுருண்டு ஒட்டாமல் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.