பதினாறு வயது ஆவதற்கு முன்பு, உபநயனச் சடங்கு நிறைவேறாத நிலையில், இளம் வயதிலேயே சுகதேவர் வீட்டை விட்டு வெறியேறிக் காட்டிற்குச் சென்றுவிட்டார்.
தன்னுடைய மகன் தன்னை விட்டு நீங்கியதால் மனம் வருந்திய வியாசர், சுகதேவரின் பின்னால் ஓடி, மகனே, மகனே! என்று அழைத்தார்.
அப்போது காட்டிலிருந்த மரங்களும் செடிகளும், வியாசரின் கவலையை எதிரொலித்தன.
சுகதேவர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, இளம் பெண்கள் பலர் ஆடைகள் எதுவுமில்லாமல் ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வழியாகத் தன்னுடைய உடலில் ஆடை எதுவும் அணியாமல் 16 வயது சுகதேவர் சென்றார்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்கள், சுகதேவர் செல்வதைப் பார்த்தார்கள். என்றாலும் நாணம் என்ற உணர்ச்சி அவர்களிடம் தோன்றவில்லை.
சிறிது நேரம் கழித்து அதே வழியாக வியாசர் சென்றார்.
அவர் வருவதைப் பார்த்ததும் பெண்கள் குளத்திலிருந்து வெளியே வந்து, அவசர அவசரமாக உடைகளை அணிய ஆரம்பித்தார்கள்.
அவர்களின் செயலைக் கண்ட வியாசர் மிகவும் ஆச்சரியத்துடன், நீங்கள் நிர்வாணமாகச் சென்ற இளைஞன் சுகதேவரின் எதிரில் வெட்கப்படவில்லை; நானோ வயது முதிர்ந்த கிழவன். என்னைப் பார்த்து நீங்கள் மிகவும் வெட்கப்படுகிறீர்களே, அதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார்.
அதற்கு அந்த இளம் பெண்கள், முனிவரே, உங்களுக்கு உடல் பற்று இருக்கிறது; ஆனால் சுகதேவருக்கு தனது உடலைப் பற்றிய உணர்ச்சியே இல்லை. ஆகவே அவருடைய முன்னிலையில் எங்கள் உள்ளத்திலும் சரீர உணர்ச்சி எழவில்லை என்று பதிலளித்தார்கள்.