ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு பூனை வளர்த்தார். மிகவும் செல்லமாக ராஜா அந்தப் பூனையை வளர்த்து வந்தார்.
அவர் என்ன செய்வார் தெரியுமா? இரவு நேரத்தில் அந்தப் பூனையின் தலையில் ஒரு விளக்கை வைத்து விடுவார்.
அந்தப் பூனை மிகவும் ஜாக்கிரதையாக விளக்கு தன் தலையிலிருந்து கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். அது தன் தலையை ஆட்டாமல் ரொம்ப நிதானமாக ராஜாவின் பின்னால் நடந்துபோகும். ராஜா அந்த விளக்கு வெளிச்சத்தில் எல்லா வேலைகளையும் செய்துவிடுவார்.
ஆதலால் அவருக்குக் கையில் தனியாக ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை.
விளக்கைத் தூக்கிக்கொண்டு போகும் வேலையை அந்தப் பூனை பார்த்துக் கொண்டது.
அதனால் ராஜா அந்தப் பூனையின் மீது மிகவும் அன்பு செலுத்தினார்.
ராஜா தன் அமைச்சர்களை அழைத்து, பார்த்தீர்களா? இந்தப் பூனை எவ்வளவு விசுவாசமாக நடந்துகொள்கிறது!... என் மீது இந்தப் பூனைக்குத்தான் எவ்வளவு மரியாதை பார்த்தீர்களா? என்று சொல்வது வழக்கம்.
ஒரு சமயம் இதைக் கேட்ட அங்கிருந்த அமைச்சர்களில் ஒருவர், மன்னா! நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் அந்தப் பூனையின் விசுவாசத்தை நான் கொஞ்சம் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன்! என்றார்.
சரி... உங்கள் ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும்? நன்றாகச் சோதித்துப் பாருங்களேன்! என்று ராஜா கூறிவிட்டார்.
உடனே அந்த அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா?
அவர் எங்கேயோ புறப்பட்டுப் போனார்; ஒரு ஐந்தாறு எலிகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்.
அப்போது அரண்மனையில் ராஜா ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.
அவர் பக்கத்தில் அந்தப் பூனை ரொம்பவும் பணிவாக நின்றுகொண்டிருந்தது. அதன் தலையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
அமைச்சர் தான் பிடித்துக்கொண்டு வந்த எலிகளை அந்தப் பூனையின் பார்வையில் படும் வகையில் எதிரில் விட்டார்.
அந்த எலிகளெல்லாம் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தன.
அதை அந்தப் பூனை பார்த்தது அவ்வளவுதான்! அது தன் தலையில் இருக்கும் விளக்கைப் பற்றியும் கவலைப்படவில்லை....ராஜாவைப் பற்றியும் கவலைப்படவில்லை...
பூனை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து எலிகளைத் துரத்த ஆரம்பித்தது...அதன் தலையில் இருந்த விளக்கு எங்கேயோ போய் விழுந்து அணைந்து போயிற்று.
இருட்டில் ராஜா தடுமாற ஆரம்பித்தார்.
இந்தச் சமயத்தில் அமைச்சர் மறுபடியும் விளக்கை ஏற்றினார். வெளிச்சம் வந்தது.
அதன்பிறகு அந்த அமைச்சர் பேசினார்:
அரசே! இப்போது பூனையின் விசுவாசத்தைப் பார்த்தீர்களா? எலி அதன் கண்ணில் படாத வரையில்தான் அது விசுவாசமாக இருந்ததுபோல் தெரிந்தது! எலியைப் பார்த்ததும் அது எல்லாவற்றையும் விட்டுவிட்டு எலியைத் துரத்த ஆரம்பித்துவிட்டது! என்று கூறினார்.
தான் அந்தப் பூனையைப் பற்றி நினைத்தது தவறு என்று ராஜா அதன் பிறகு புரிந்து கொண்டார்.