ஒரு பசுவுக்கு உடம்பு சரியில்லை 'என்று கால்நடை மருத்துவர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.
கால்நடை மருத்துவர் பசுவைப் பரிசோதித்துப் பார்த்தார்.
பின்னர் அவர் பசுவின் உரிமையாளரிடம் ஒரு மருந்தைக் கொடுத்து, "இதில் மிளகுப்பொடியும், வெண்ணெயும் கலந்து பசுவிற்குக் கொடுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் பசுவின் உரிமையாளர் மருந்தை மிளகுப்பொடியில் மட்டும் கலந்து பசுவிற்குக் கொடுத்தார்.
அவர், 'வெண்ணெய் பாலிலிருந்து கிடைக்கிறது. பால் பசுவிடமே இருக்கிறது. எனவே மருந்தை வெண்ணெயில் கலந்து தர வேண்டியதில்லை' என்று நினைத்தார்.
அவரது செயலால் பசுவின் உடல்நிலை தேறாமல் மேலும் மோசமடைந்தது.
எனவே பசுவின் உரிமையாளர் மீண்டும் கால்நடை மருத்துவரைச் சென்று சந்தித்தார்.
அவர் பசுவின் உடல்நிலை, தான் மருந்து கொடுத்த விதம் ஆகியவை பற்றிக் கால்நடை மருத்துவரிடம் தெரிவித்தார்.
அதைக் கேட்ட மருத்துவர், "பசுவின் உடலில் பால் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் வெண்ணெய் வேண்டுமென்றால், பாலைக் கறந்து, அதைத் தயிராக்கி, பின்னர் அதைக் கடைந்து வெண்ணெய் எடுக்க வேண்டும்” என்றார்.
இதைப் போலத்தான் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆனால் அவனை உணர்வதற்கு ஆலய வழிபாடு, பூஜை, ஜபம், தியானம், பிரார்த்தனை, சத்சங்கம், அருள் நூல்களைப் படித்தல், புலனடக்கம் போன்ற தவ முயற்சிகளைச் சரியான முறையில் நாம் மேற்கொள்ள வேண்டும்.
“எங்கும் இறைவன் இருக்கிறான்" என்ற கேள்விஞானம் மட்டும் போதாது.