ஒரு காட்டில் குரு ஒருவர் இருந்தார். அவர் ஒரு சந்தியாசி
அவரிடம் சந்நியாசிகள் நிறைய பேர் சீடர்களாக இருந்தார்கள்.
ஒரு நாள் இரவு அந்தக் குரு தமது சீடர்களில் ஒரு சந்நியாசியைக் கூப்பிட்டு, “நீ இப்போது உடனே அரண்மனைக்குப் புறப்பட்டுப் போ ... அங்கு அரசனின் அவையிலிருந்து ஞானம் பெற்று வா!” என்று கூறினார்.
"குருவே! இந்த ஆசிரமத்தில் நான் கற்றுக் கொள்ள முடியாததையா அரண்மனையில் போய் கற்றுக்கொள்ள போகிறேன்...!” என்று சீடர் வினவினார்.
“பேசாமல் நான் சொல்வதைக் கேள். மற்றதெல்லாம் அங்கே போய் அரசனைக் கேட்டுக் கொள்!” என்றார் குரு.
வேறு வழி இல்லை. அந்தஅ சந்நியாசி அரண்மனைக்குச் சென்றார்.
அங்கே போய்ப் பார்த்தால் அவருக்கு அதிர்ச்சி!
ஏனென்றால், அங்கே எல்லோரும் மது மயக்கத்தில் நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் அந்த நிலையைப் பார்த்ததும் அந்தச் சந்நியாசியின் மனம் மிகவும் சங்கடப்பட்டது. 'நம்முடைய குருநாதர் இப்படி நம்மை அவமானப்படும்படி செய்து விட்டாரே....!' என்று அவர் நினைத்தார்.
இருந்தாலும் அரசன் சந்நியாசியை வரவேற்று உபசரித்தான்.
மேலும் அரசன் அவரிடம், 'நீங்கள் கண்டிப்பாக இன்றிரவு இங்கேயே தங்க வேண்டும்....!' என்று கேட்டுக் கொண்டான்.
"இன்றைக்கு ராத்திரி நான் இங்கு தங்குவதா! இது என்ன அர்த்தமில்லாத செயல்!" என்று சந்நியாசி வினவினார்.
இருந்தாலும் அவரை அரசன் விடுவதாக இல்லை....!
"நாளைக்குக் காலையில் குளித்து முடித்து, சாப்பிட்ட பிறகு நீங்கள் போகலாமே!" என்றான் அரசன்.
அரை மனதுடன் சந்நியாசி ஒருவாறு, “சரி” என்று சொல்லிவிட்டு அங்கு தங்கினார்.
அன்றிரவு அவருக்குத் தூக்கமே வரவில்லை. "இந்த இடத்தில் நான் எப்படி ஞானம் பெற முடியும்?'' என்று ஆச்சரியத்துடன் அவர் யோசித்து யோசித்துப் பார்த்தார்.
காலையில் எழுந்தவுடனேயே அரசன் அவரிடம் வந்து, "அரண்மனைக்குப் பின்னால் இருக்கும் நதியில் குளித்துவிட்டு வரலாம்... வாருங்கள்!" என்று அழைத்தான்.
இரண்டு பேரும் சென்று நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் திடீரென்று ஒரு பயங்கரக் கூச்சல் கேட்டது.
என்ன என்று பார்த்தால்..... அரண்மனை தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது!
அப்போது அரசன் சந்நியாசியிடம், "அதோ பார்த்தீங்களா!” என்று காட்டினான்.
சந்நியாசி நிமிர்ந்து பார்த்தார்... வானளாவிய தீப்பிழம்புகள்!
அவ்வளவு தான்.... உடனே சந்நியாசி அரண்மனையை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
"எதற்காக அங்கே ஓடுகிறீர்கள்?” என்று மன்னன் வினவினான்.
"அங்கு அரண்மனையில் என்னுடைய ஒரு துணி இருக்கிறது. அது எரிந்துவிடுமே என்ற அவசரத்தில் ஓடுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே துறவி ஓடினார்.
அப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர் உள்ளத்தில், 'அரசரின் அரண்மனையே தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது! ஆனால் அரசர் அங்கு நதியிலேயே நின்றுகொண்டிருக்கிறார்! ஆனால் நான்...? என்னுடைய ஒரு சிறிய துணி எரிந்துவிடும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறேனே....!' என்ற எண்ணம் தோன்றியது.
உடனே அவர் அரசன் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்தார்.
அங்கே தண்ணீரில் நின்று அரசன் சிரித்துக் கொண்டிருந்தான்.
அவனிடம், “அங்கே உங்களுடைய அரண்மனையே தீப்பற்றி எரிகிறது! நீங்கள் இப்படி ஒன்றுமே நடக்காதது போல் நின்று சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே... இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்று துறவி கூறினார்.
இப்போது அந்த அரசன், “நான் அந்த அரண்மனையை என்னுடையதாகக் கருதியிருந்தால் இந்நேரம் இங்கே நின்று கொண்டிருக்க மாட்டேன். அரண்மனை என்பது அரண்மனை. நான் என்பது நான். நான் பிறப்பதற்கு முன்பும் அரண்மனை இருந்தது. நான் இல்லாமல் போன பிறகும் அரண்மனை இருக்கும். அப்படியிருக்கும்போது அது எப்படி என்னுடையதாக இருக்க முடியும்? நீங்கள் அந்தத் துணியை உங்களுடையதாகவும், அரண்மனையை என்னுடையதாகவும் நினைத்தீர்கள். அதனால் அதன் பின்னால் ஓடுகிறீர்கள்!” என்றான்.
அதைக் கேட்டதும் சந்நியாசிக்கு, 'மனிதன் தன்னுடைய நோக்கத்தினாலேயே அடிமையாகிறான். அந்த நோக்கத்தை மாற்ற வேண்டும் அல்லது தகர்க்க வேண்டும். ' அப்படி செய்தால் உலக பந்தங்களிலிருந்து விடுதலை பெற முடியும்' என்ற தெளிவு ஏற்பட்டது.