மும்பையிலிருந்து புனேக்குச் செல்லும் மின் விரைவு வண்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
முரட்டுத்தனமான அந்தப் பயணி கதவருகே நின்றபடி, யாரும் பெட்டியில் ஏறாமல் தடுத்துக் கொண்டிருந்தான்.
பிளாட்பாரத்தில் நின்று கொண்டு முட்டியடித்து ஏற முயற்சித்தவர்களைத் திட்டினான். கையால் தள்ளித் துரத்திவிட்டான்.
அடுத்த நிறுத்தம் கல்யாண் ஸ்டேஷனில்.
பாவம், வயதான ஒரு கிழவி அப்பெட்டியில் ஏற முயன்றார். அவரையும் முரடன் உள்ளே விடவில்லை. ரயிலில் இருந்த ஒருவரும் கிழவிக்காகப் பரிந்து பேச வரவில்லை.
படிப்பது, அரட்டை அடிப்பது, ஏன் சீட்டாடுவது என்று அவர்களுக்கு அவரவர் பொழுதுபோக்கு. மேலும் முரடனிடம் போய்ச் சண்டை போட பயம் பலருக்கு.
வண்டி மெதுவாக நகரவும் ஆரம்பித்துவிட்டது. கிழவியோ பெட்டியின் கைப்பிடியை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
இத்தனையையும் பார்த்துக் கொண்டு உள்ளே அமர்ந்திருந்த அந்தச் சாது விருட்டென்று எழுந்தார். கதவருகில் நின்றிருந்த முரடனை ஒரே மூச்சில் ஓரமாகத் தள்ளிவிட்டார்.
கதவைத் திறந்து, கிழவியை உள்ளே தூக்கிவிட்டார். பிறகு கதவைச் சாத்தினார்; தமது இடத்தில் போய் அமர்ந்தார். அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. எல்லோரும் அவரை வியந்து பார்த்தனர்.
சாதுவின் வீரத்தால் முரடனும் முடங்கிவிட்டான். அகநோக்கம் கொண்ட அமைதியால் சாதுவைப் பாராட்டக்கூட ஒருவருக்கும் தைரியம் வரவில்லை.
மேலும் அறுபது மைல் பயணித்தது அந்த வண்டி. பலர் இறங்கினர். சிலர் ஏறினர். யாரும் மூச்சுக்கூட விடவில்லை! எல்லாம் சுமுகமாகவே சென்றன. எந்த கோபமோ, வாக்குவாதமோ இல்லை.
அந்தச் சாது முழுமையான பற்றற்றவராக இருந்தார். எது தேவையோ அதை மட்டும் செய்தார்.
நிதானமாக அமைதியாக இருந்தால் செம்மையாகச் செயல்புரியலாம்.
கோபத்துக்கும் இடம் உண்டு. ஆனாலும் கோபப்படக் கூடாது. இதுதான் நடைமுறை செயலாக்கம்!
துறவு என்பதே மனதை அலைக்கழிக்கும் சக்திகளை எதிர்கொண்டு அதனைக் கட்டுப்படுத்துவதுதானே? அந்தச் சக்தி அகத்தில் இருந்தாலும் சரி புறத்தில் இருந்தாலும் சரி அடக்கிவிட வேண்டியது அடியவர் கடமை அல்லவா!
அதைத்தான் அந்தச் சாது செய்தார்.