ஸ்ரீமத் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி பூமியின் புத்திரர். அவர் நாரதரின் அருளால் சம்சார பந்தத்தைத் துறந்து, பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார்.
அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்துவிட்டது. புற்று என்றால் ‘பூமியின் காது’ என்று பொருள். சம்ஸ்கிருதத்தில் ‘வன்மீகம்’ என்பர். இதனால் அவர் ‘வான்மீகி’ எனப் பெயர் பெற்றார்.
புற்றிலிருந்து மறுபிறவி எடுத்ததுபோல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்பட்டார்.
அதுபோல், தங்கக் கலப்பையைக் கொண்டு பூமியை உழுதபோது சீதாதேவியும் ஜனகருக்குக் கிடைத்தாள். எனவே அவளும் பூமித் தாயின் மகள் ஆகிறாள்.
அந்த வகையில், இருவரும் சகோதர, சகோதரிகள்.
பெண்கள் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போவார்கள்.
சீதாதேவி கர்ப்பமாக இருந்தபோது, அவளது கற்பின் மீது சிலர் சந்தேகப்பட்டுப் பேசினர். அதனால் ராமர் அவளைத் தகுந்த பாதுகாப்புடன் காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
சீதையைக் காட்டுக்கு அனுப்பியது தண்டனை போல் தோன்றினாலும், அதிலும் தர்மத்துடன் நடந்து கொண்டவர் ராமர்.
வால்மீகியின் ஆசிரமத்தில் சீதாதேவி தங்கினாள். அங்கேயே லவகுசரைப் பெற்றெடுத்தாள்.