'நாராயணா, நாராயணா...' என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டே நாரதர் வைகுண்டம் வந்தார். அவர் ஸ்ரீமந் நாராயணனிடம், ''பிரபோ, இப்போதெல்லாம் வைகுண்டத்திற்கு வருபவர் எண்ணிக்கை குறைந்துள்ளதே, ஏதாவது தடையா?'' என்று கேட்டார்.
''அப்படியொன்றுமில்லையே, தகுதியுள்ளவர் எவருமே தாராளமாக வரலாமே! ஆனால் நாரதா! இப்போது ஜீவாத்மாக்கள் இங்கு வர விரும்பவில்லை என்று தெரிகிறது. நீ பூமிக்குச் சென்று முடிந்தவரை புண்ணிய ஆத்மாக்களை இங்கு வருமாறு செய்வாய்'' என்று சொன்னார் பகவான்.
பகவானது அனுமதி கிடைத்துவிட்டதால் வைகுண்டத்தில், ஜீவாத்மாக்களைக் கொண்டு வந்து குவித்துவிடப் போகிறேன் என்று மனதிற்குள் பூரித்தார் நாரதர்.
'யாருக்குத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட மனம் வரும்? சுகதுக்கத்தில் மூழ்கித் திணறும் ஜீவாத்மாக்கள் இங்கு வரத் தயங்குவார்களா?' என்றெல்லாம் மனதில் கணக்குப் போட்டுப் பூமிக்கு விரைந்தார்.
பூமியில் நாரதரின் கண்ணில் முதலில் பட்டது ஒரு பன்றி. 'அழுக்கில் புரளும் இந்த விலங்கை முதலில் வானுலகம் அனுப்புவோம்' என்று எண்ணினார்.
அதனிடம் நாரதர், ''ஓ பன்றியே! நீ மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பகவான் ஜீவாத்மாக்களை எல்லாம் வைகுண்டம் புக அனுமதி அளித்துள்ளார். என்னோடு வந்து அந்தச் சுதந்திர, சுகபோக வாழ்வை அனுபவிக்கலாமே!'' என்றார்.
நாரதர் ஏதோ விளையாடுகிறார் என்று கருதி பன்றி கேட்டது: ''ஆமாம். அங்கு என்ன விசேஷம் உள்ளது என்று கூறுங்களேன்''
நாரதர், ''ஆஹா என்னதொரு பிரகாசமான தூய்மையான உலகம் அது! எப்போதும் எந்தக் கவலையும் இன்றி தெய்விக ஆனந்தத்தில் திளைக்கலாம்!''
''அது இருக்கட்டும், என்னோடு பேசுவதற்கும், விளையாடுவதற்கும் வேறு பன்றிகள் அங்கு இருக்குமா?'' என்ற கேள்விக்கு நாரதர் கூறினார் : ''தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்குத்தான் அங்கு இடம் உண்டு. பெருமாள் அனுமதி கொடுத்ததால் உன்னை அங்கு அனுப்பலாம் என்று கேட்டேன்''
பன்றி சொன்னது, ''நான் தனியாக இருக்க வேண்டும் அப்படித்தானே? அப்படியானால் எனக்கேற்ற உணவு அங்கு கிடைக்குமா? நான் புரளுவதற்கேற்ற சாக்கடைகள் அங்கு உண்டா?''
நாரதர், ''பன்றியே, வைகுண்டம் என்பது தெய்விக ஆன்மாக்களுக்கு மட்டுமே, அங்கெல்லாம் இத்தகைய சேற்றையும் சகதியையும் எதிர்பார்க்கிறாயே! உனக்கு எங்கே அதன் அருமை தெரியப் போகிறது'' என்றார்.
பன்றியோ சிரித்தபடி, ''அப்படிப்பட்ட இடம் எனக்கு நரகம். வேறு யாரையாவது பாருங்கள்'' என்று கூறிவிட்டது.
'மிருகத்திற்கு ஆன்மிக ரகசியங்கள் தெரிய நியாயமில்லை. மனிதனிடம் போவோம்' என்று நினைத்து, எலும்பும் தோலுமாய் இருந்த ஒரு கிழவனை நாரதர் அணுகினார்.
போர்வையைப் போர்த்திக் கொண்டு சுற்றி எச்சில் துப்பிக் கொண்டு, கட்டிலில் கிடந்த அவனிடம் வைகுண்டத்தைப் பற்றிய பேச்சை எடுத்தார். அந்தக் கிழவனோ பெரிய இருமலுடன் ஆத்திரம் பொங்கக் கத்தினான்:
''என்னுடைய அமைதியான உலக வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கிறீரா? எனக்குக் குழந்தை குட்டிகள் ஏராளம், வேறு யாராவது சந்ததியில்லாத மனிதனைப் போய்ப் பாருங்கள்''
நாரதருக்கு ஏமாற்றம். இருந்தாலும் பெருமாளின் அழைப்பிற்குப் பதில் சொல்ல வேண்டுமே, என்று நினைத்தபடி ஓர் அழகிய வாலிபனிடம் சென்று வைகுண்டத்தின் பெருமையை விவரித்தார். ''அது எங்கிருக்கிறது! என்னென்ன வசதிகள் அங்கே உள்ளன. நான் பூகோளம் படித்தவன்தான். ஆகவே அது எங்கே இருக்கிறது என்பதை முதலில் கூறுங்கள்'' என்ற வாலிபனிடம், ''தம்பி, அது பூமியில் இல்லை. பூமிக்கு மேல் உள்ள தெய்விக உலகம்'' என்றார் நாரதர்.
''ஓ, அதுவா? என் தாத்தா அதைப் பற்றி நான் சிறுவனாக இருக்கும்போது சொல்லியிருக்கிறார். இந்தப் பூமியில் நான் எத்தனையோ சாதிக்க வேண்டியுள்ளது. பிழைக்கத் தெரியாத வேறு வயதான ஆசாமியைப் போய்க் கேட்டுப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.
எப்படி மகாவிஷ்ணுவின் முகத்தில் விழிப்பது என்ற கவலையுடன் நாரதர் நகரத்திற்குச் சென்று, ஒரு கடையில் உயரமான ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு கடைக்காரரிடம் பேசினார்: ''சேட்ஜி! கடவுள் உங்களுக்கு எல்லாம் கொடுத்திருந்தும் ஏன் வருத்தமாக, வாட்டமாகக் காணப்படுகிறீர்கள்?''
சேட், ''மஹராஜ்! என்ன இருந்து என்ன? குழந்தைச் செல்வம் இல்லையே. என் வியாபாரத்தைப் பொறுப்பேற்று நடத்த வாரிசு இல்லையே!''
நாரதர், ''நீங்கள் விரும்பினால் என்னுடன் வைகுண்டம் வாரும். அங்கு எவ்வித சோகமும் கவலையும் இருக்காது. பகவானிடம் அனுமதி பெற்றுத்தான் வந்திருக்கிறேன்''
சேட்டோ, ''மகராஜ், நானோ சம்சாரி. எனக்குக் குழந்தை பிறந்த பிறகு கட்டாயம் உங்களுடன் வருகிறேன்'' என்றார்.
நாரதர் அவரை விடக்கூடாது என்று முடிவெடுத்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சேட்டை சந்தித்தார். சேட் அவருக்கு பால், பழம் கொடுத்து உபசரித்து, ''இறைவன் அருளால் எனக்குக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்கள் வளர்ந்து கடையின் பொறுப்பை ஏற்றதும் அவசியம் உங்களுடன் வருகிறேன்'' என்றார்.
சில ஆண்டுகள் கழித்து நாரதர் சேட்டைச் சந்திக்க வந்தபோது அவர் காலமாகியது தெரிந்தது. தனது ஞானதிருஷ்டி கொண்டு பார்த்ததில் அந்த ஆத்மா ஒரு மாடாகப் பிறந்து அந்த வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்ததைக் கண்டார்.
நாரதர் அந்த மாட்டிடம் சென்று, ''மனிதப்பிறவிலிருந்து மாடாகப் பிறந்துவிட்டீர். இருந்தாலும் இப்போதுகூட உங்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.
''மகராஜ், என் மக்கள் இப்போது வளர்ந்து வருகிறார்கள். நான் அவர்களைக் கண்காணித்துக் கொண்டு முடிந்தவரை அவர்களுக்கு உதவவே ஆசைப்படுகிறேன்'' என்று மாடாகிய சேட் சொன்னதும், எப்படியாவது அவரை மீட்கலாம் என்று சில காலம் கழித்து வந்து பார்த்தபோது அவர் நாயாகப் பிறந்து அந்த வீட்டில் காவல் காத்து வந்தார்.
அப்போதும் நம்பிக்கை இழக்காமல் நாரதர், ''சேட்ஜி, இப்போதும் நீங்கள் விரும்பினால் உங்களை வைகுண்டம் அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறேன்'''என்றதும் அந்த நாய் உருவில் இருந்த 'சேட்', ''என் பிள்ளைகளெல்லாம் வேலைக்காக வெளியே செல்லும்போது வீட்டை யார் பார்த்துக் கொள்வார்கள்? அவர்களுக்குக் குழந்தை பிறந்து வளர்ந்து வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றபின் நான் தாராளமாக உங்களுடன் வைகுண்டம் வருகிறேன்'' என்றார்.
அப்படியும் நம்பிக்கை இழக்காத நாரதர், சில ஆண்டுகள் கழித்து அங்கு வந்தார். நாய் இறந்து புழுவாய்ப் பிறந்து அந்த வீட்டு சாக்கடையில் நெளிந்து கொண்டிருந்தது. பரிதாபப்பட்ட நாரதர், ''அற்ப ஜீவனே! மேலும் உயர்ந்து தெய்வநிலை அடைவதற்குப் பதில் அழுக்கு நீரில் மிதக்கும் அற்பப் புழுவாய்க் கிடக்கிறாயே. போனால் போகிறது கடைசியாக உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். என்னுடன் வைகுண்டம் புறப்படத் தயாராகு'' என்றார்.
புழு உறுதியாகச் சொல்லிற்று: ''முனிவரே! எப்போது பார்த்தாலும் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? உங்களுக்குக் குழந்தை குட்டிகள் கிடையாது. ஆகவேதான் குழந்தைகளின் பிரிவினால் ஏற்படும் சோகம் உங்களுக்குத் தெரியவில்லை. நான் வீட்டின் சாக்கடையில் இருப்பதால் எனது பிள்ளைகள், மருமகள்கள், மற்ற உறவினர்கள் தினமும் வெளியே செல்லும்போது பார்த்து மகிழ்கிறேன். அவர்கள் தூக்கி எறியும் உணவுப் பண்டங்களை நான் விருந்தாக எண்ணி ருசித்து ஆனந்தப்படுகிறேன். இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்? இந்தநிலை ஒன்றே எனக்குப் போதும். ஆகவே எனக்கு வைகுண்டம் என்றெல்லாம் வீண் ஆசைகாட்டி ஏமாற்றுவதை விட்டுவிடுங்கள். எனக்கு இதுவே வைகுண்டம்.''