'பகவானே, நீயே தூதுவனாகச் சென்றாலும் துரியோதனன் போரைத்தான் விரும்புவான். இந்த பாரதப் போரில் எங்களுக்கே வெற்றி கிடைக்க வரம் தர வேண்டும்' என்று வேண்டினான் சகாதேவன்.
'நான் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். யாருடைய வெற்றிக்கும் நான் எந்த உத்தரவாதமும் தரமுடியாது. ஆனால் எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி நிச்சயம்' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
சில நாட்களுக்குப் பின் பகவான் அஸ்தினாபுரத்திற்குத் தூது சென்றார். சகாதேவன் எண்ணியது போலவே, 'ஊசிமுனை இடம் கூட பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது' எனக் கூறிவிட்டான் துரியோதனன். பாரதப் போர் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.
பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் படைகளைத் திரட்டிக் கொண்டு குருக்ஷேத்திரத்தில் முகாமிட்டனர்.
திடீரென்று துரியோதனன் பாண்டவர் பாசறைக்கு வந்தான். சகாதேவனைத் தனியாக அழைத்துச் சென்று போரில் வெல்வதற்குண்டான நல்ல முகூர்த்தத்தைத் தனக்குக் குறித்துத் தரும்படி கேட்டான்.
விரோதி என்றாலும் தன்னிடம் நம்பிக்கையுடன் வந்த துரியோதனனுக்காக ஜோதிட சாஸ்திரத்தைக் கணித்து, ''வரும் அமாவாசை அன்று 'களபலி' கொடுத்து போரை ஆரம்பிப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்'' என்ற உண்மையைக் கூறினான் சகாதேவன்.
துரியோதனன் போரில் வெற்றி பெற நாள் குறித்துக் கொடுத்த சகாதேவனின் சத்திய நிஷ்டையைக் கண்டு மகிழ்ந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.
''போரில் துரியோதனனுக்கு வெற்றி என்றால் தங்களுக்குத் தோல்வி மற்றும் மரணம். எப்படி அதைச் சமாளிப்பது?'' என்று ஸ்ரீகிருஷ்ணரிடம் வினவினர் மற்ற பாண்டவர்கள்.
''நல்ல நாளில் ஆரம்பிப்பவர்களுக்குப் போரில் வெற்றி கிடைக்குமா என்பது நிச்சயம் இல்லை. ஆனால் தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
அமாவாசைக்கு ஒரு நாள் முன்பே ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுடன் பித்ருக்கள் மற்றும் களபூஜைக்கு ஏற்பாடு செய்தார்.
இதைக் கண்ட தேவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டானது. 'ஸ்ரீகிருஷ்ணர் ஏன் அப்படி வேத விதியை மீறுகிறார்?' என்று கேட்டு வர சூரியனையும் சந்திரனையும் அனுப்பினர்.
ஸ்ரீகிருஷ்ணரிடம் அவர்கள் வந்தவுடனே பூஜை ஆரம்பித்துவிட்டது. எந்த இடையூறும் இல்லாமல் பூஜை முடிந்தது. களபலி கொடுக்கப்பட்டது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரே ஆச்சரியம்! ''எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி வேத விதியை மீறி தவறான நாளன்று பூஜை செய்வது ஏன்?'' என்று ஸ்ரீகிருஷ்ணனை வினவினர்.
ஸ்ரீகிருஷ்ணனோ, ''நான் வேத விதியை மீறவேயில்லை. அமாவாசை என்றால் என்ன?'' என்றார்.
''சூரியனாகிய நானும் சந்திரனாகிய தம்பியும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்கும் நாளே அமாவாசை'' என்றார் சூரியன்.
''இப்போது நீங்கள் இருவரும் எப்படி நின்று கொண்டிருக்கிறீர்கள்? நேருக்கு நேர் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்?'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
''ஆமாம். இன்றைய நாள்தான் அமாவாசை'' என்று ஒப்புக்கொண்டனர் சூரியனும் சந்திரனும்.
தர்மத்தைக் கடைப்பிடித்துத் தன் பக்தர்களாக வாழ்ந்து வரும் பாண்டவர்களைக் காக்க வேண்டி பகவான் இயற்கை விதியையே மாற்றினார். நாளை வரக்கூடிய அமாவாசை தினத்தை இன்றே வரவழைத்தார். சகாதேவன் கூறியபடி அமாவாசை தினம் அன்று களபலி கொடுக்கப்பட்டதால் பாண்டவர்களுக்கே வெற்றி உண்டானது.