ஒளரங்கஜீப் ஆண்ட காலம். ஏதாவது ஒரு ஹிந்து ராஜ்யம் பலவீனமாக இருக்கிறது என்று தெரிந்தால் போதும்; உடனே அதன் மீது போர் தொடுத்து, அந்த அரசை வென்று அதைத் தம் ராஜ்யத்தோடு சேர்த்துக் கொள்வது ஔரங்கஜீப்பின் வழக்கம். ஹிந்து ராஜ்யங்களைத் தம் ராஜ்யத்தோடு சேர்த்துக் கொள்ள அவர் தந்திரங்களைக் கையாளுவதும் உண்டு.
அந்த நாளில், மார்வார் நாட்டின் அரசர் யஷ்வந்த்சிங் காலமான போது அவர் மகன் அஜீத்சிங் சிறு பையனாக இருந்தான். அதனால், துர்க்காதாஸ் என்னும் வீரர் அரசை ஆண்டு வந்தார்.
மார்வார் நாட்டை வெல்ல அதுதான் சரியான தருணம் என்று ஔரங்கஜீப் நினைத்துத் தம் புத்திரர்கள் ஆஜம், அக்பர் ஆகிய இருவரையும் பெரிய சேனையுடன் மார்வாரை நோக்கி அனுப்பி வைத்தார்.
ஆஜமும் அக்பரும் தங்கள் சேனையுடன் ஜோத்பூர் வந்தடைந்தார்கள். யுத்தம் வேண்டாமென்றும், பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாமென்றும் தீர்மானித்து, ஔரங்கஜீப்பின் பிள்ளைகளில் ஒருவரான அக்பர் துர்க்காதாஸைச் சந்தித்தார்.
துர்க்காதாஸின் சீரிய பண்பையும், அவருடைய உயர்ந்த குணங்களையும் நேருக்கு நேரே பார்த்த பிறகு, அக்பருக்குத் தம் தகப்பனார் செய்வது தவறு என்று புரிந்தது. ஆகவே அவர் துர்க்காதாஸை எதிர்த்துப் போரிட மனமில்லாமல் தம் மகன் அக்தரையும் அழைத்துக்கொண்டு துர்க்காதாஸோடு மார்வாரிலேயே தங்க நிச்சயம் செய்து விட்டார்.
இதைக் கேள்வியுற்ற அவரது சகோதரர் ஆஜம், துர்க்காதாஸைத் தனித்து எதிர்த்து நிற்கப் பயந்து, தம் படைகளுடன் டில்லி திரும்பிவிட்டார்.
துர்க்காதாஸ் அக்பரைத் தம் நண்பர் போலவே கருதி, அவரும் அவர் குழந்தைகளும் தங்க ஓர் அரண்மனையைக் கொடுத்தார். இருந்தும் அக்பருக்குத் தம் தகப்பனாரைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்தது. ஔரங்கஜீப்பின் சேனைகள் அடிக்கடி மார்வாரைத் துன்புறுத்திய வண்ணமாக இருந்ததால், எப்பொழுது ஔரங்கஜீப்பின் ஆட்கள் தம்மைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து, அக்பர் ஒரு நாள் தம் குழந்தைகளை துர்க்காதாஸிடம் ஒப்படைத்துவிட்டுத் தாம் ஈரான் போய்ச் சேர்ந்தார்.
அக்பர் போனபிறகு துர்க்காதாஸ் அந்த இரண்டு குழந்தைகளையும் தம் குழந்தைகளைப் போலவே அத்தனை அக்கறையாக வளர்த்து வந்தார்.
தன் மகன் ஈரானுக்குச் சென்றுவிட்டான் என்றும், தன் பேரனும் பேத்தியும் மார்வாரில் வளர்ந்து வருகிறார்கள் என்றும் கேள்விப்பட்ட ஒளரங்கஜீப் அவர்கள் இருவரையும் தம்மிடம் அழைத்து வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார். ஆகவே ஈச்வரதாஸ் என்னும் தம் பிரதிநிதியைத் துர்க்காதாஸிடம் அனுப்பி வைத்தார்.
ஈச்வரதாஸ் துர்க்காதாஸை ஜோத்பூரில் சந்தித்து ஔரங்கஜீப்பின் விருப்பத்தைத் தெரிவித்தார்.
“நான் அவருடைய இரண்டு பேரக் குழந்தைகளையும் அவரிடம் ஒப்படைக்கத் தயார். ஆனால் அதற்குப் பதிலாக அவர் அஜீத்சிங்தாம் மார்வாரின் அரசர் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். மார்வாரைத் தாக்க முயலக் கூடாது'' என்று துர்க்காதாஸ் சொன்னார்.
தாம் ஔரங்கஜீப்பை இது விஷயமாகச் சம்மதிக்கச் செய்வதாக ஈச்வரதாஸ் சொல்ல, துர்க்காதாஸ் தாமே டில்லிக்கு வருவதாக அவருடன் கிளம்பினார். ஆனால் ஔரங்கஜீப் தந்திரக்காரர், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாதவர் என்று துர்க்காதாஸுக்குத் தெரியுமாதலால் அவர், பேரன் அக்தரை அங்கேயே விட்டு, பேத்தி சபாயதுன்னிசாவை மட்டும் அழைத்துக்கொண்டு ஒளரங்கஜீப் தங்கியிருந்த பிரம்மபுரிக்குச் சென்றார்.
பேத்தியைக் கண்டதும் ஔரங்கஜீப் ஆனந்தமடைந்து, துர்க்காதாஸின் நிபந்தனைக்கு உட்பட, பேரன் அக்தரையும் துர்க்காதாஸ் அக்பரிடம் அனுப்பி வைத்தார்.
அப்பொழுது சபாயதுன்னிசாவிற்குப் பதினைந்து பதினாறு வயதிருக்கும். ஒரு நாள் ஒளரங்கஜீப் தம் பேத்தியைப் பக்கத்தில் அழைத்து, “நீ இத்தனை நாள் பிற மதத்தினர் வீட்டில் இருந்துவிட்டாய். ஆகவே நம் தர்மத்தைப் பற்றிய விஷயம் எதுவும் உனக்குத் தெரிய நியாயமில்லை. ஆகவே உனக்குக் குர்ரான் சொல்லிவைக்கச் சீக்கிரமே ஏற்பாடு செய்யப்போகிறேன்” என்று சொன்னார்.
“என்ன தாத்தா இப்படிச் சொல்கிறீர்கள்! எனக்கு நம் மதத்தைப்பற்றிய சகல விஷயங்களும் தெரியும்” என்று சொன்னாள் சபாயதுன்னிசா.
“நீயோ சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து ஹிந்துக்களின் ராஜ்யத்தில் வளர்ந்து வந்திருக்கிறாய்! உனக்கு எப்படிக் குர்ரான் தெரியும்?''
“தாத்தா! துர்க்காதாஸ் என்னைத் தம் மகளைப்போல் போஷித்ததுமன்றி, ஒரு முஸ்லிம் ஸ்திரீயை வைத்தே எனக்குக் குர்ரான் சொல்லிக் கொடுத்தார். உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் சொல்லுங்கள்; இதோ நான் ஒப்பிக்கிறேன்'' என்றாள்.
இதைக் கேட்டு ஔரங்கஜீப் ஆச்சரியமடைந்தார். துர்க்காதாஸின் பெருந்தன்மையை மனதிற்குள் புகழ்ந்து கொண்டார்.
உடனே அவர் தம் பேத்தியைப் பார்த்து, "குழந்தாய், நீ என் கண்களைத் திறந்து விட்டாய். நான் ஹிந்துக்கள் மீது விரோதம் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் இத்தனை பரந்த மனப்பான்மை உடையவர்களென்று நான் இத்தனை நாளும் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்றார்.
துர்க்காதாஸை வரவழைத்து ஔரங்கஜீப் அவரை மனமாரப் புகழ்ந்தார்.
அப்பொழுது துர்க்காதாஸ், “சக்கரவர்த்தி! நான் என் கடமையைச் செய்தேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. எங்கள் விரோதமும் தங்கள் ஆட்சியின் மீதே தவிரத் தங்கள் மீதோ தங்கள் பேரக் குழந்தைகள் மீதோ அல்ல. அந்தக் குழந்தைகளை நான் என் குழந்தைகளைப் போலவே வளர்த்தேன்" என்றார்.