உலகப் புகழ்பெற்ற ஓட்டக்காரன் வீட்டில் ஒரு திருடன் புகுந்தான். பல பந்தயங்களில் பெற்றிருந்த தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் எல்லாவற்றையும் திருடிக் கொண்டு ஓடினான்.
சத்தம் கேட்டு விளையாட்டு வீரன் திருடனைப் பிடிக்க ஓடினான். திருடனும் அதைவிட வேகமாக ஓடினான்! ஓட்டப் பந்தய வீரனுக்குத் திருடன் தன்னை விட வேகமாக ஓடுவதைக் கண்டு ஒரே ஆச்சரியம்!
ஒரு திருடனிடம் தோற்றுப் போவது தன் தன்மானத்திற்கு இழுக்கு என்று எண்ணி அவனிடம், ''நில்! நாம் ஒரு பந்தயம் வைப்போம். நம்மில் யார் முதலில் போலீஸ் ஸ்டேஷனை அடைகிறோமோ அவர் ஜெயித்தவர். நீ முதலில் போனால் என் பரிசுப் பொருள்கள் எல்லாம் உனக்கே. நான் ஜெயித்தால் நீ அவற்றையெல்லாம் திருப்பித் தந்துவிடு" என்றார்.
திருடன் ஒப்புக்கொண்டான்.
சிறிது தூரம் வரை முன்னால் போய்க் கொண்டிருந்த திருடன் பின் தங்க ஆரம்பித்தான். நள்ளிரவில் மூச்சிறைக்க ஸ்டேஷனில் நுழைந்த விளையாட்டு வீரனைக் கண்டு போலீஸார் வியப்படைந்தனர்.
அவன் நடந்ததைக் கூறி, ''நானே ஜெயித்தவன்!" என்று பெருமைப்பட்டான்.
ஆனால் போலீஸின் பார்வை வேறு!
''வீரரே, உங்களை விட திருடன் வேகமாக ஓட முடியும் என்பதை உங்கள் தற்பெருமை ஏற்கவில்லை. அதனால் முட்டாள்தனமாக அவனைப் பின்னால் விட்டுவிட்டீர்கள். அவன் முதலில் வந்திருந்தால் போலீஸில் சிக்கியிருப்பான். உங்கள் பொருள்களும் கிடைத்திருக்குமே!" என்று போலீஸார் சொன்னதும் வீரன் முகத்தில் அசடு வழிந்தது!