பக்த ஹரிதாஸ் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வீட்டில் பிறந்தும், பூர்வ ஜன்ம வாசனையின் பயனாகச் சிறந்த ஹரிபக்தரானார். அவர் தினம் மூன்று லட்சம் தடவை ஹரி நாமத்தை ஜபிப்பது வழக்கம். அவர் சைதன்ய மகாப்பிரபுவை விடப் பதினைந்து இருபது வருடம் வயதில் பெரியவர். இருந்தும் அவர் தம்மைச் சைதன்யரின் சீடராகவே மதித்தார்.
ஹரிதாஸின் புலனடக்கத்தைக் கண்டு பொறாமை கொண்ட ஜமீன்தார் ஒருவர் அவரைக் கெடுக்க எண்ணி ஒரு நாள் இரவு ஒரு தாசியை அவர் குடியிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
தாசி சென்ற சமயம் ஹரிதாஸ் ஹரிநாம ஜபத்தில் ஈடுபட்டிருந்தார். ஆகவே அவர் அவளைக் கவனிக்கவேயில்லை. இரவு முழுவதும் ஜபத்திலேயே ஈடுபட்டிருந்த அவர் மனதைத் தன் பக்கம் இழுக்க அந்தத் தாசி என்ன என்னவோ சேஷ்டைகள் செய்து பார்த்தாள். ஒன்றும் பலனில்லை.
பொழுது விடிந்ததும் ஹரிதாஸ் வேசியைப் பார்த்தார். “அம்மா! நான் ராம ஜபம் செய்து கொண்டிருந்ததனால் உன்னைக் கவனிக்க முடியவில்லை. என்னை மன்னிக்க வேண்டும்'' என்றார்.
தாசி போய்விட்டு அன்றைய ராத்திரி திரும்பி வந்தாள். அன்றும் ஹரிதாஸ் ராம ஜபத்திலேயே ஈடுபட்டிருந்தார். பொழுது விடிந்ததும், “அம்மா! நான் ராமஜபத்தில் ஈடுபட்டிருந்ததனால் உன்னைக் கவனிக்கவே முடியவில்லை; மன்னிக்க வேண்டும்'' என்றார்.
இப்படி நான்கு தினங்கள் சென்றன. ஆனால் நான்கு தினங்களாக, புலனடக்கமுள்ள ஒருவரைப் பார்த்துக் கொண்டும், அவரது ராம ஜபத்தைக் கேட்டுக் கொண்டும் இருந்ததனால் வேசியின் மனம் மாறிவிட்டது.
'எத்தனை பெரிய உத்தமரை நாம் கெடுக்க இருந்தோம்!' என்று அவள் பச்சாத்தாபப்பட்டதுடன் தன் தொழிலையும் நொந்து கொண்டாள்.
ஐந்தாம் நாள் காலை அவள் ஹரிதாஸரின் காலில் விழுந்து வணங்கி, “இந்தப் பாவி கடைத்தேறுவதற்கு ஏதாவது வழி சொல்ல வேண்டும்'' என்று கேட்டாள்.
ஹரிதாஸ் அவள் கையில் ஒரு மாலையைக் கொடுத்து ஹரிநாமத்தை ஜபிக்கச் சொல்லி விட்டு அந்த ஊரைவிட்டே அகன்றார்.
அவரது புலனடக்கத்தினால், அவரைக் கெடுக்க வந்த தாசி பெரிய பக்தையானாள்.