மகத நாட்டில் மாஷி நதிக்கரையில் இருந்த ஒரு காட்டில் ஒரு தபஸ்வி இருந்தார். அவர் பெயர் உக்கிர ராமபுத்திரன் என்பது. அவர் தமது தவவலிமையினால் பறக்கும் சித்தியைப் பெற்றிருத்தார்.
எனவே அவர் தினமும் பகல் பன்னிரண்டு மணிக்கு மகதநாட்டு அரசனின் அரண்மனைக்குப் பறந்து வருவார். அரசன் கொடுக்கும் பிட்சையை ஏற்றுப் பிறகு பறந்து தம் இருப்பிடம் செல்வார்.
ஒரு நாள் அரசனுக்கு அவர் வரும் சமயம் பார்த்து அவசர காரியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தது.
அதனால் தபஸ்வியை வரவேற்று உபசரிக்கும் பணியை ஒரு வேலைக்காரிப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் ரதத்தில் ஏறி வேகமாகச் சென்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் தபஸ்வி அரண்மனைக்குப் பறந்து வந்தார்.
‘வாருங்கள் மகராஜ்!' என்று அந்தப் பெண் அவரை வரவேற்றாள்.
பெண்ணைப் பார்த்ததும் தபஸ்வி, ‘எத்தனை அழகாக இருக்கிறாள்! இவளுடைய அங்கங்கள் தாம் எத்தனை லாவண்யமாக விளங்குகின்றன! இவளுடைய குரல்தான் எத்தனை மதுரமாக இருக்கிறது!' என்று ஒரு கணம் நினைத்தார்.
வேலைக்காரி அவருக்கு உணவு வகைகளைப் பரிமாறினாள். அவர் சாப்பிட்டார்.
சாப்பிட்ட பிறகு திரும்பிய போது, வழக்கம் போல் பறந்து செல்ல விரும்பினார். ஆனால் அவரால் முடியவில்லை. அந்த ஒரு கணம் அந்தப் பெண்ணின் அழகில் ஈடுபட்டு விட்டதனால் அவருடைய தவவலிமை குறைந்து போயிற்று.
தபஸ்விக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியில் நிலைமையை ஒருவாறு சமாளிப்பதற்காக, '’இன்று தபஸ்வி பறந்து செல்லமாட்டார். நகர மக்களுக்குத் தரிசனம் கொடுக்கப் போகிறார்'' என்று அறிவிக்கச் சொன்னார்.
அதற்குப் பிறகு அந்தத் தபஸ்வியால் பறக்கவே முடியவில்லை.