ஓர் ஊரில் ஒரு பெரிய அழகிய குளம் இருந்தது. ஆனால் அந்த ஊர், துஷ்டர்கள் நிறைந்தது.
ஆகவே அவர்கள் குளத்தின் ஒரு முனையில் வேசிகளின் விடுதிகள் சில கட்டினர். இன்னொரு முனையில் மாமிசம் விற்கும் கடைகள் அமைத்தனர். மூன்றாவது மூலையில் மதுபானங்கள் விற்கும் கடைகளை அமைத்தனர். நான்காவது முனையில் சூதாட்டங்கள் விளையாடும் சில கட்டிடங்களை அமைத்தனர்.
ஒரு நாள் ஒரு நல்லவர் அந்த ஊருக்கு வந்தார். அந்தத் துஷ்டர்கள் அவரை அந்த அழகிய குளத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.
முதலில் அவர்கள் வேசிகளின் விடுதிகள் இருந்த பக்கத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள். வேசிகளின் விடுதிகளைக் கண்டதும் அந்த நல்லவருக்கு மிகுந்த கோபம் வந்தது.
“இந்த நல்ல குளக்கரையில் இப்படி வேசிகளின் விடுதிகளைக் கட்டி வைத்திருக்கிறீர்களே'' என்று வருத்தப்பட்டார்.
பிறகு அவர்கள் அவரை மாமிசக் கடைகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அதைக் கண்டதும் அந்த நல்லவர் வருத்தப்பட்டார்.
''நல்ல கறிகாய்கள் இருக்க, இந்த நாற்ற மாமிசத்தைச் சாப்பிடுவானேன்?'' என்று கேட்டார்.
பிறகு அவர்கள் அவரை மதுபானக் கடைகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அதைக் கண்டதும் நாற்றம் சகிக்காமல் அவர் மூக்கை மூடிக்கொண்டார். இப்படி எதற்காக மதுபானக் கடைகளை வைத்து மக்களைக் கெடுக்கிறீர்கள்!'' என்று கேட்டார்.
கடைசியாக அவர்கள் அவரைச் சூதாட்ட விடுதிகள் இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதைக் கண்டதும், “இது பரவாயில்லை, மக்கள் உல்லாசமாகப் பொழுது போக்க இந்தச் சூதாட்டங்கள் மிகவும் பயன்படும். ஆனால் அதிகப் பணம் வைத்து ஆடக்கூடாது. கொஞ்சமாகப் பணம் வைத்து ஆடினால் பரவாயில்லை'' என்று சொல்லிவிட்டு அவரே அங்கு உட்கார்ந்து ஆட ஆரம்பித்தார்.
அவர் கொஞ்சமாகப் பணம் வைத்துத் தான் ஆடினார். முதலில் ஜெயிக்க ஆரம்பிக்கவே பிறகு நிறையப் பணம் வைத்து ஆட ஆரம்பித்து விட்டார். ஆனால் நிறையப் பணம் வைத்து ஆடவே தோற்க ஆரம்பித்தார். அவரது உற்சாகம் குறைந்தது.
“உற்சாகத்தோடு ஆடினால் நிச்சயமாக ஜெயிப்பேன். ஆகவே உற்சாகம் ஏற்படச் சிறிது மதுபானம் இருந்தால் தேவலை'' என்று மது பானங்களை வரவழைத்துக் குடித்தார்.
குடித்த அவருக்கு வயிற்றை என்னவோ செய்தது. “மாமிசம் சாப்பிட்டால் சரியாகிவிடும்" என்று பக்கத்தில் இருந்தவர்கள் சொல்ல, அவர் கொஞ்சம் மாமிசம் வாங்கிச் சாப்பிட்டார்.
மாமிசம் சாப்பிட்டதுதான் தாமதம், வேசியின் விடுதிக்குச் செல்ல வேண்டுமென்று அவருக்குத் தோன்றிற்று. அவர் அப்படியே அங்கே சென்றார்.
ஆக, எந்த வேசியின் விடுதி, மாமிசக் கடை மதுபானக் கடை ஆகியவற்றை அவர் வெறுத்தாரோ அவற்றையே அவர் சூதாட்டத்தின் மூலமாக நாட வேண்டியதாகிவிட்டது.