காஞ்சி மன்னன் வசுமான். அவன் காசி யாத்திரை சென்று நாடு திரும்பினான், அதற்குள் பகைவர் அவனது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.
அரசன் மனம் வருந்தி, சாபாலி முனிவரை அடைந்தான்.
நாட்டைத் தான் இழந்த காரணத்தை அவரிடம் வினவினான்.
முனிவர் அவன் செய்த தீங்கைப் பின்வருமாறு கூறினார்:
"அரசனே! நீ முற்பிறப்பில் பெருஞ்செல்வன்; வணிகன்; பல பண்டங்களும் விற்கும் தொழில் உடையவன். உன் வீட்டின் பக்கத்தில் ஓர் அந்தணன் இருந்தான். அந்தணன் உன்னிடம் அரிசி முதலிய பொருளை விலைக்கு வாங்குவான். மாதம் ஒருமுறை அவற்றின் மொத்தத் தொகையை உன்னிடம் செலுத்தி வந்தான். நீ அவன் வாங்கும் பொருள்களின் விலையை மட்டும் எழுதி வைத்து மாதந்தோறும் அவன் கொடுக்கும் தொகையை மட்டும் எழுதாமல் விட்டாய். இவ்விதம் ஐம்பது ஆண்டுகள் ஆயின. அந்தணன் காலம் முடிந்து இறந்தான். அவன் மனைவியும் இறந்தாள். அவர்களுக்குச் சிறிய வயதுடைய நாலைந்து பிள்ளைகள் இருந்தார்கள். அந்தப் பிள்ளைகளை அரசவைக்கு இழுத்துச் சென்று, வரவு இல்லாத கணக்கைக் காட்டி, அந்தப் பிள்ளைகளின் வீடு மற்றப் பொருட்கள் எல்லாவற்றையும் கைக்கொண்டாய். அந்தப் பாவம் இப்போது உனக்குப் பலன் தருவதாயிற்று. அந்தக்காலத்தில் சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் சில பொருட்களைக் கொடுத்தாய். அந்தப் புண்ணியப் பயனால் இந்தப் பிறப்பில் அரசனாக இருந்து உலகை ஆட்சி புரிந்தாய். நீ அசுவமேதயாகம் புரிந்தால் பாவம் ஒழிந்து, இழந்த நாட்டை மீண்டும் பெறுவாய்" என்று முனிவர் மன்னனிடம் தெரிவித்தார்.
மன்னன், "பொருள் இல்லாத நிலையில் நான் எப்படி அசுவமேத யாகம் செய்வேன்?'' என்றான்.
“நீ திருவிடைமருதூர் அடைந்து அசுவமேதப் பிரதட்சிணம் வந்தால் இந்தப்பழியும் தீரும்'' என்றார் முனிவர்.
முனிவர் கூறியபடியே மன்னன் திருவிடைமருதூர் சென்றான். அங்கு அவன் பிரதட்சிணம் செய்து இறைவனை மனமுருக வழிபட்டான்.
அது காரணமாக வலிமை பெற்றுத் தனது நாட்டை மீண்டும் வென்றான். அவன் இறைவனுக்கு மார்கழித் திருவாதிரைத் திருவிழாவைச் சிறப்புற நடத்தி வைத்தான்.