மகாராஜா சத்ரஸால் மன்மதனைப்போல் அத்தனை அழகாக இருப்பார். அவரைக் கண்டால் எந்தப் பெண்ணும் மோகித்து விழுவாள்.
சத்ரஸால், மக்களின் குறைகளை நேரில் தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி நகரைச் சுற்றி வருவது வழக்கம். அப்படிச் சுற்றி வந்த போது ஒரு தெருவில் ஓர் அழகி அவரைக் கண்டு மோகித்து விட்டாள். ஆனால் மகாராஜாவோ, பிற பெண்களைக் கண்ணெடுத்தும் பார்க்காதவர்.
ஒரு தடவை அவர் அவள் இருந்த தெருவின் வழியாகப் போய்க் கொண்டிருக்கையில், அவள் தன் வீட்டிலிருந்து வெளிப்பட்டு, மகாராஜாவைப் பார்த்து, “நான் மிகவும் மனது உடைந்திருக்கிறேன்'' என்று சொன்னாள்.
அரசர் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தரையைப் பார்த்தபடி, "உங்களுக்கு என்ன கஷ்டம்? என்னால் உதவக்கூடுமானால் சொல்லுங்கள்'' என்றார்.
"எனக்குக் குழந்தைகளே இல்லை. என் கணவர் இது விஷயத்தில் அசமர்த்தராக இருக்கிறார். தங்களைப் போன்ற ஒரு பிள்ளை எனக்கு வேண்டும்'' என்று அவள் சொன்னாள்.
அவளுடைய எண்ணத்தை அரசர் புரிந்து கொண்டார். ஆனாலும் தம் மனதைப் பறிகொடுக்காமல் அவள் முன் தலைகுனிந்து, “அம்மா! இன்று முதல் என்னையே தங்கள் மகனாகக் கருதுங்கள். தாங்கள்தான் இனி ராஜமாதா" என்றார்.