காளிதாசர் போஜராஜனின் சபையில் சிறந்த புலவராவார். பாமரராக இருந்தவர் காளி தேவியின் அருளால் புலமை பெற்றார்.
ரகு வம்சம், குமாரசம்பவம், மேகதூதம் போன்ற சம்ஸ்கிருத நூல்களை இயற்றினார்.
போஜராஜனின் சபையில் தண்டி என்ற புலவரும் இருந்தார்.
அவர் தாம் காளிதாசரைவிடச் சிறந்தவர் என்று பெயர் வாங்க விரும்பினார்.
போஜராஜன், “நாளை நான் ஒரு கேள்வியைக் கேட்பேன். பொருத்தமான பதில் தருபவரைச் சிறந்த புலவர் எனப் பிரகடனம் செய்வேன்'' என்றான்.
தண்டி இரவெல்லாம் சரஸ்வதியின் அருளை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்.
சரஸ்வதி தேவி தோன்றி, “என்ன வேண்டும்?” என்று வினவ, தண்டி, "தாயே, நாளைக் காலையில் அரசவையில் தோன்றி நான் சிறந்த புலவன் என்று கூற வேண்டும்" என்றார்.
தேவி ஒப்புக்கொண்டாள்.
மறுநாள் அரசவை கூடியது. எல்லோரும் ஆவலுடன் அமர்ந்திருந்தனர்.
திடீரென்று, 'கவிர் தண்டீ' என மூன்று முறை அசரீரி கேட்டது. 'தண்டி பெரும் பண்டிதன்' எனக் கேட்ட மக்கள் ஸ்தம்பித்து நின்றனர்.
ஆனால் காளிதாசர் இதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. கண் சிவக்க, கோபக்கனல் தெறிக்க எழுந்து நின்று தம்மை அறியாமல் தேவியை வசைபாட ஆரம்பித்தார்.
அவை தேவிக்குப் பிரியமான பாடல்களாயின. அதனால் மகிழ்ந்த தேவி, ஆகாசவாணியாக, “எனதருமைக் காளிதாசா! தண்டி பெரும் புலவனாக இருந்துவிட்டுப் போகட்டும். உனக்கு ஏன் அதில் வருத்தம்? நீ நானே. த்வமேவாஹம் (நீயே நான்)" என்று மொழிந்தாள்.
இதைக் கேட்ட தண்டி வெட்கித் தலைகுனிந்தார்.