அங்கே சிவபெருமான் இல்லை!
போஜராஜனைப் பார்ப்பதற்கு ஒரு கவி நீண்ட நாளாக முயன்று கொண்டிருந்தார்.
காவலாள் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி அவரைத் தடுத்து வந்தான்.
''இப்போது அரசர் ஸ்நான அறையில் இருக்கிறார். இப்போது சாப்பிடுகிறார். இப்போது தூங்குகிறார். இப்போது அந்தப்புரத்தில் இருக்கிறார்'' என்று ஏதாவது காரணத்தை அவன் சொல்லுவான்.
ஒரு நாள் அரசன் உள்ளூர்க் கோயிலுக்குச் சென்ற சமயம் பார்த்துக் கவி அங்கே போய்ச் சேர்ந்தார்.
கோயிலில் எல்லாருக்குமே கவியின் புலமையில் மோகம். அவருடைய பண்பில் அன்பு, அவரை உள்ளே அனுமதித்தார்கள்.
அரசன் சிவபெருமானைத் துதித்துக்கொண்டிருந்தபொழுது கவி பின்னால் போய் நின்றார்.
குருக்கள் ஆரத்தி செய்தார்.
அப்பொழுது கவி, 'அங்கே சிவபெருமான் இல்லை!' என்று கத்தினார்.
பின்னாலிருந்து வந்த ஒலியைக் கேட்டு அரசன் திடுக்கிட்டான்.
கவியைத் திரும்பிப் பார்த்து, “எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கண்டிப்போடு கேட்டான்.
“வெகு நாளைக்கு முன்பே சங்கரனார் தமது உடலில் பாதியை நாராயணனுக்குக் கொடுத்துவிட்டார். மற்றொரு பாதியை மலைமகளுக்குக் கொடுத்து விட்டார். அதனால் அவருடைய அடையாளத்தைச் சுட்டிக் காட்ட ஏதுமில்லை" என்றார் கவி.
"அவர் தலையில் இருந்த கங்கை எங்கே போச்சு?" என்று போஜராஜன் கேட்டான்.
"அது கடலில் கலந்துவிட்டது''
"அவர் சென்னியில் அணியாகத் திகழ்ந்த வெண்மதி என்ன ஆயிற்று?"
"அது வானத்தில் சென்று இப்போது அங்கேயே நிலவுகிறது"
"ஆனால் அவருடைய சக்தி மட்டும் கட்டாயம் இருக்க வேண்டுமே?''
"அதுவும் இல்லை; அதை அவர் தங்களுக்குத் தந்துவிட்டார்"
கவியின் பேச்சைக் கேட்டு அரசன் மகிழ்ந்து, முறுவல் பூத்தபடியே. "எல்லாம் போனாலும் அவருடைய பிச்சைப் பாத்திரம் அவசியம் இருக்குமே!'' என்றான்.
"அதுவும் அவரிடம் இல்லை. அதை அவர் எனக்குத் தந்துவிட்டார்" என்றார் கவி.
போஜராஜன் அந்தக் கவியின் வறுமையை அறவே துடைத்து அவருடைய காவியம் மலரவும் வழி செய்தான்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.