பாட்டனார் தேடிய செல்வம்
வைணவ வழிமுறையின் முதல் ஆசாரியர் என்று கருதப்படும் நாத முனிகளின் பேரர் ஆளவந்தார். அவர் இளவயதில் சிற்றரசர் போல் போக வாழ்வு வாழ்ந்து வந்தாரே தவிர, பாட்டனார் தேடிய கடவுள் பக்தி என்ற செல்வத்தைத் தாமும் அடைந்து இன்புற வேண்டும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை.
நாதமுனிகளின் சீடர்களில் ஒருவரான உய்யக்கொண்டாரின் சீடர் மணக்கால் நம்பி, இந்த நிலையைப் போக்கி அவரை வைணவ வழியில் திருப்ப என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார்.
முதலில் தாம் ஆளவந்தாருக்கு அறிமுகமாக வேண்டும்; அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
ஆளவந்தாருக்குத் தூதுவிளங்கீரை மிகவும் பிடிக்கும் என்பது மணக்கால் நம்பிக்குத் தெரியும். அதனால் தினம் தூதுவிளங்கீரை வாங்கி ஆளவந்தாரின் சமையற்காரரிடம் கொடுத்தார்.
சமையற்காரர் அதைச் சமைத்து ஆளவந்தாருக்குப் போட்டார்.
ஆனால், ஆளவந்தார் தினம் கீரையை ருசித்துச் சாப்பிட்டாரே தவிர, அதை யார் கொடுத்தது, அல்லது எங்கிருந்து வந்தது என்று கேட்கவில்லை. ஆறு மாதம் இப்படியே சென்றது.
இதனால் மணக்கால்நம்பி, ஒரு நாள் வழக்கம் போல் தூதுவிளங்கீரையை அனுப்பி வைக்கவில்லை. அதனால் சமையற்காரருக்குக் கீரை கிடைக்கவில்லை. அதனால் சமையலில் அன்று தூதுவிளங்கீரை இடம் பெறவில்லை.
சாப்பிட ஆரம்பித்த ஆளவந்தார், ‘ஏன் இன்று தூதுவிளங்கீரை பரிமாறவில்லை?’ என்று கேட்டார்.
‘வழக்கமாக ஒரு கிழவர் கீரை கொண்டு வந்து கொடுப்பார். அவர் இன்று கொண்டு வந்து கொடுக்கவில்லை’ என்று பதிலளித்தார் சமையற்காரர்.
‘அவர் யாரென்று தெரியுமா?’
‘தெரியாது.’
‘அப்படியானால் அவர் திரும்பவும் கீரை கொண்டு வந்தால் என்னிடம் அழைத்து வாரும்.’
கீரையை நிறுத்தியும் பயனில்லாமற் போகவே, மணக்கால்நம்பி திரும்பவும் ஒரு நாள் சமையற்காரரிடம் கீரையைக் கொண்டு போய்க் கொடுத்தார்.
‘ஆளவந்தார் தங்களைப் பார்க்க விரும்புகிறார்’ என்றார் சமையற்காரர்.
ஆளவந்தாரும் மணக்கால்நம்பியும் சந்தித்தார்கள்.
‘நீங்கள் தினம் எனக்குக் கீரை கொண்டு வந்து கொடுத்ததற்காக, உங்களுக்கு ஏதாவது பொருள் வேண்டுமானால் கேளுங்கள்’ என்றார் ஆளவந்தார்.
‘நான் தங்களுக்குக் கொடுக்க வந்தேனேயன்றி வாங்க வரவில்லை’ என்றார் மணக்கால்நம்பி.
‘எனக்கு உரிமையில்லாததை நான் தங்களிடமிருந்து எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும்?’
‘உங்களுக்கு உரிமையுள்ள சொத்துதான்; உங்கள் பாட்டனார் நாதமுனிகள் தேடிய பொருள்தான்.’
‘அந்தப் பொருள் எங்கே இருக்கிறது?’
‘திருவரங்கத்தில் இருக்கிறது. அங்கு வந்தால் காட்டுவேன்’ என்றார் மணக்கால்நம்பி.
சில நாள் கழித்து இருவரும் திருவரங்கம் சென்றனர்.
திருவரங்கத்தில் பெருமாளைக் காட்டி, ‘இதுதான் தங்கள் பாட்டனார் தேடிய செல்வம்’ என்றார் மணக்கால்நம்பி.
அவ்வளவுதான், உடனே ஆளவந்தார் மனம் மாறி, நாதமுனியின் பக்தி வழியைப் பரப்ப ஆரம்பித்தார்.
தமது விடாமுயற்சி வெற்றியடைந்தது கண்டு மனம் மகிழ்ந்தார் மணக்கால்நம்பி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.