நியாய சாஸ்திரம்
ஸ்ரீசைதன்யர் மகாபிரபுவுக்கு அப்பொழுது பதினாறு வயதுதான் ஆகிக் கொண்டிருந்தது. அப்பொழுது எல்லோரும் நிமாயி என்று அவரை அழைப்பது வழக்கம். அந்தப் பதினாறு வயதுக்குள்ளேயே அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றறிந்து, நியாய சாஸ்திரத்தைப்பற்றி ஒரு நூலும் எழுதியிருந்தார்.
அவருடன் படித்த அவருடைய நண்பர் ரகுநாதர் என்பவரும் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். அவரும் நியாய சாஸ்திரத்தைப் பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார்.
தாம் எழுதியுள்ளது போலவே, தம் நண்பர் நிமாயியும் நியாய சாஸ்திரத்தைப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார் என்று கேள்வியுற்று, ஒரு நாள் ரகுநாதர், நிமாயியைப் பார்த்து, நீயும் நியாய சாஸ்திரத்தைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். அதை நான் பார்க்க வேண்டும்! என்றார்.
அதற்கு நிமாயி, “அதற்கென்ன, நாளைக்குப் படகில் பாடசாலைக்குப் போவோம் அல்லவா? அப்பொழுது நானே படித்துக் காண்பிக்கிறேன்!’ என்றார்.
அடுத்த நாள் காலை கங்கையில் சென்று கொண்டிருந்த ஒரு படகில் நிமாயியும், அவர் நண்பர் ரகுநாதரும் சென்றனர்.
நிமாயி தாம் எழுதிய நியாய சாஸ்திரத்தை நண்பருக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.
நிமாயி படித்ததைக் கேட்கக் கேட்க ரகுநாதரின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
அதைக் கவனித்த நிமாயி, ‘எதற்காக ரகுநாத் அழுகிறாய்?’ என்று கேட்டார்.
அதற்கு ரகுநாதர், ‘இல்லை நிமாயி, நான் என் நூல் மிகப் பிரசித்தமாக விளங்கப் போகிறது, எல்லோரும் என்னைப் புகழப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உன் நூலைக் கேட்டதும் என் நூலை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. அதனால்தான் என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது’ என்றார்.
‘இதற்குத்தானா அழுகிறாய்! என் நண்பனாகிய உன் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் என் நூல் தடையாக இருப்பதை நான் விரும்புவேனா?’ என்று சொல்லி, நிமாயி தமது நூலைக் கங்கை ஆற்றில் தூக்கியெறிந்தார்.
நிமாயியின் மகத்தான தியாகத்தைக் கண்ட ரகுநாதர் ஒரு கணம் அயர்ந்து போய்விட்டார்.
‘நிமாயி! நீ மனிதன் இல்லை, தெய்வம்!’ என்று சொல்லி அவர் காலில் விழப்போனார்.
ஆனால் நிமாயி நண்பரைத் தடுத்து, அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.