காசி தோன்றிய கதை
ஒரு சமயம் சிவபெருமான் பார்வதிதேவியுடன் காசியில் ஓர் இடத்தில் வீற்றிருந்த போது திடீரென்று தேவி சங்கரரிடம், "சுவாமி! மிகவும் புண்ணியம் நிறைந்த இந்தக் காசியம்பதி எவ்வாறு தோன்றியது?'' என்று கேட்டார்.
உமையம்மையின் அந்தக் கேள்விக்குப் பதிலாகச் சிவபெருமான் கூறிய கதை ஸ்கந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளது.
சிவபெருமான் கூறுவதாக அமைந்த அந்தக் கதை இதுதான்:
பிரளயம் எனப்படும் ஊழிக்காலத்தில் அனைத்துத் தோற்றங்களும் அழிந்துவிடுகின்றன. எங்கு பார்த்தாலும் ஒரே இருள் மயமாகக் காணப்பட்டது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகிய எவையும் அப்போது இல்லை. ஆனால் ஈடு இணையற்ற சுய ஒளியையுடைய பரப்பிரம்மம் மட்டும் இருந்தது. கல்பகாலத் துவக்கத்தில் எண்ணிப் பார்க்கவும் இயலாத காரணத்தினால் அந்தப் பிரம்மம் சகுணப் பிரம்மமாக ஆகிறது. உலகைப் படைக்கும் வல்லமையுடைய 'சிருஷ்டிபீஜம்' எனப்படும் அந்தப் பிரம்மத்திற்குள் ஆசையின் தோற்றம் ஏற்படும். "நான் ஒருவனே, இரண்டாக ஆகிவிடுவேன்'' என்பது முதல் ஆசை. இதிலிருந்து அந்த உருவமற்ற பிரம்மத்திற்கு உருவம் உண்டாகிறது. இதனால் எல்லாவிதமான செல்வச் சிறப்பு நிறைந்த இந்த என்னுடைய திருவுருவம் வெளிப்படும்.
''என்னிடமிருந்து உண்டாகும் தண்ணீர் (இங்கே 'தண்ணீர்' என்பது இறைவனின் திருவருள் அலலது கருணையைக் குறிப்பிடுகிறது) உலகம் முழுவதும் பரவிவிடும். இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும், பிரபஞ்சத்திலுள்ள பொருள்களுக்குச் சாட்சிரூபமாக விளங்குபவனும், எல்லோராலும் வணங்கப்படுபவனும், எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக விளங்குபவனும் நான்தான்.
நான் என்னையே இரண்டு உருவங்களில் வெளிப்படுத்தினேன். அதன்படி இரண்டாவது உருவமாக இயற்கையின் குணமுடைய மாயையை உண்டாக்கினேன். அது நீதான். நீதான் புத்தி தத்துவத்தின் தாய். உன்னோடு கூடவே வெளிப்படுத்தப்பட்ட இடம்தான் இந்தக் காசி தலம். நான் காலனின் வடிவெடுத்தக் காரணத்தினால் நாட்டின் படைப்பும் தேவைப்பட்டது. அவ்விதம் ஏற்படுத்தப்பட்ட முதல் நகரம் வாராணாசிதான். நீண்ட நாள் வரை நான் உன்னோடு இந்த ஐந்து கோச விஸ்தீர்ணமுடைய பிரதேசத்தில் என் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அலைந்து திரிந்த இந்தப் பகுதிக்கு 'ஆனந்த வனம்' என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த மகேசுவரர் கல்பத்தின் துவக்கத்தில் தமது உடலின் வலப்பக்கம் தமது பார்வையைச் செலுத்த, அந்தக் கணமே அவருடைய உடலிலிருந்து கருமை நிறைந்த நீலவண்ணமுடைய பீதாம்பரதாரியும், கமலக்கண்ணனுமாகிய திருமால் நான்கு புஜங்களுடன் தோன்றினார். எல்லாப் புருஷர்களையும் விடச் சிறந்து விளங்கிய காரணத்தினால் அவர் புருஷோத்தமர் எனப்பட்டார்.
திருமால் சிவனைப் போற்றித் துதித்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், 'மகாவிஷ்ணு! உன் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றும். நீ சர்வக்ஞன்' என்று அவருக்கு வரமளித்தார்.
அந்த இடத்தில் விஷ்ணு பகவான் தமது சக்கரத்தினால் ஒரு புஷ்கரணியை உண்டாக்கினார். அதைத் தமது வியர்வை நீரினால் நிரப்பினார். அதன் கரையில் அமர்ந்து கொண்டு தவம் செய்யத் தொடங்கினார். அவருடைய தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அருகில் எழுந்தருளினார். அப்போது அந்த இடத்தில் அவரது காதிலிருந்து மணிகள் நிறைந்த குண்டலம் பூமியில் விழுந்தது. அதன் காரணமாக அந்த இடம் 'மணிகர்ணிகை' என்று வழங்கப்பட்டது.
அதனைக் கண்டதும் நாராயணன், ‘பிரபோ, தங்களுடைய மணிகள் நிறைந்த குண்டலம் விழுந்த காரணத்தினால் இந்த க்ஷேத்திரம் முக்தியை அளிப்பதாகுக!' என்றார். மேலும் சிவபெருமானிடம் அவர், 'தேவதேவா, தங்களுடைய வர்ணிக்க இயலாத சிவமயமான ஜோயோதி என்றென்றும் இங்கே பிரகாசிக்கட்டும். இதனால் அந்த இடம் 'காசி' என்று அழைக்கப்படட்டும். இந்தத் தலத்தில் மரணமடையும் எல்லாப் பிராணிகளும் கர்ம ஞான பேதமின்றி மோட்சத்தை அடையட்டும்' என்று வேண்டினார்.
''அவ்வாறே ஆகுக!' என்று சிவபெருமானும் ஆசீர்வதித்தார். உடனே அவர் நாராயணனிடம், 'நீ இப்போது படைப்புக் கடவுளைச் சிருஷ்டி செய். அவர் படைப்புத் தொழிலைத் துவங்கட்டும். இந்த ஐந்து கோச விஸ்தீர்ணமுடைய காசி தலம் எனக்கு மிகவும் விருப்பமானது. இங்கு என்னுடைய ஆணை மட்டும்தான் நடக்கும். படைப்பு ஏற்பட்டபோதிலும், இங்கு காலம், கர்மம், யமன் என்ற யாருடைய ஆளுகையும் இருக்காது' என்று கூறினார்.
எப்போது பூமி தோன்றியதோ அப்போது பகவான் சங்கரர் பாரதபூமியின் இதயத்தைப் போன்ற இந்த முக்தித் தலத்தை அமைத்தார். இவ்விதம் தலங்களிலேயே முதன்மை நிலையை வகிக்கும் பெருதலமாகிய காசி தோன்றியுள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.