மனதின் குரல் - 11
முனைவர் கு. சிதம்பரம்
கோர்த்து விற்கப்படுகின்றன களவாடப்பட்ட கருவாடுகள்
புதிய அட்டைப் படத்துடன்!
*****
இருட்டில் வேட்டையாடிப் பழகிய ஆந்தைகள்
வெளிச்சத்தைக் கண்டு அஞ்சுகின்றன!
*****
காகிதப் பூ காட்டு மல்லியல்ல
மலர்ந்து வாசம் வீசுவதற்கு!
*****
பூ கட்டும் விரல்களுக்குக் காம்பின்
தன்மை தெரியாமல் போகாது!
*****
வெளுத்தத் துணிகளை மீண்டும் வெளுக்க
ஒதுக்கப்படும் பணமும் மடைமாற்றமே!
*****
உயர உயர வானில் பறக்கும் போது
தனிமை வாட்டத் தொடங்குகிறது!
*****
பக்கத்து வீட்டிலும் மின்சாரம் இல்லாததால்
நிம்மதி அடைந்தது மனம்!
*****
மக்களின் மனநிலைதான் அரசியல் அதனைச்
சரியாக உணர்ந்தவர்களே அரசியல்வாதிகள்!
*****
கடவுள் உறையும் திணையில் தீமைகள்
தோன்றி அழிவதும் இயல்பு!
*****
தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தால்
முக்கண் முதல்வன் போல ஒளிருவாய்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.