
திசையறிகருவியின் நுனிஎப்போதும் வடதிசையையே காட்டும் வரையில், கப்பல் தன் மார்க்கத்தை விட்டு விலகிப்போய் ஆபத்துக்கு உள்ளாவதில்லை. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனம் பரப்பிரம்மத்தையே எப்போதும்நோக்கி அசைவற்று இருக்குமானால் அது ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டிப் போகும்.

புலால் உண்பதில் குற்றமில்லை, மதுபானத்தில் தோஷமில்லை, கலவியில் தீது ஏதுமில்லை; இவையாவற்றிலும் உயிர்களுக்கு இயல்பாகவே நாட்டம் உண்டு. ஆனால் மனிதனாகப் பிறந்தவன் இவற்றிலிருந்து விலகினால் பெரும்பயன் எய்துகிறான். அதாவது, புலாலினால் உயிரும், மதுபானத்தினால் அறிவும், கலவியினால் மனமும் அல்லலுறுவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம். பெரும்பயனை விரும்பிப் பிறவியை மேம்படுத்த விரும்புகிறவன் இவற்றிலிருந்து விலகுவது நன்மை பயக்கும்.

பூமியில் செல்வக் குவியல்களை உங்களுக்கென்று சேர்த்து வைக்காதீர்கள். இங்கே பூச்சியும் துருவும் அவைகளைப் பாழாக்கிவிடும். திருடர்கள் கன்னமிட்டுத் திருடுவார்கள். ஆனால், நீங்கள் அருள் உலகில் உங்களுக்கென்று செல்வக் குவியல்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் கெடுப்பதில்லை. திருடர்கள் கன்னமிட்டுத் திருடுவதும் இல்லை. ஏனெனில், உங்கள் செல்வங்கள் எங்கிருக்குமோ அங்குதான் உங்களுடைய இதயமும் இருக்கும்.

சிறு தூசியைக் காற்று சுலபமாக மலைமேல் தூக்கி வைத்து விடுகிறது. கல்லையோ, தூக்குவதில்லை. அதுபோல் சத்சங்கங்கள் பணிவு உள்ளவனை உயர்த்திவிடும். ஆனால் கர்வம் கொண்டவனையோ தொடுவதோடு நின்றுவிடும்.
- தாமஸ் பேன்

உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துப் கொண்டும் நடக்காதே! நிச்சயமாகக் கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாரையும் அல்லா நேசிப்பதில்லை.
- திருக்குர் ஆன்

காணிக்கைகளுடன் வரும்போதுதான் நாம் உண்மையாகவே கடவுளைச் சந்திக்கிறோம். தேவைகளுடன் வரும்போது அல்ல.
- தாகூர்

நாளைக்குப் போவோம் கோயிலுக்கு, நாளைக்குப் போவோம் கோயிலுக்கு என்று தினம் தினம் எண்ணி நாளைக் கழிப்பது கூடாது.
- வடலூர் வள்ளலார்

ஒரே விஷயமானது, மனதில் ஒரு சமயத்தில் சுகமாகவும் மற்றொரு சமயத்தில் துக்கமாகவும் கொள்கிறது. ஒருவனுக்குச் சுகமாயிருப்பது மற்றொருவனுக்கு துக்கமாயிருக்கிறது. ஆகையால் சுகமும் துக்கமும் விஷயத்தில் இல்லை. மனதில்தான் உள்ளது. ஆத்மா எப்போதும் ஆனந்தமாயுள்ளது.
- விவேக சூடாமணி

மனச்சான்றே மனிதனுடைய இதயத்திலுள்ள கடவுளின் பிரதிநிதி ஆகும். நல்லவராக வாழ விரும்புகிறவர்கள் நல்வாழ்வு பெறுவர். தூய மனச்சான்று உடையவர்கள் மட்டுமே சுக வாழ்வு பெறுவர்.
- சாக்ரடீஸ்

நண்பர்களும் உறவினர்களும் ஒருவனைச் சுடுகாட்டில் விட்டு வந்துவிடுகிறார்கள்; அவனோடு யாரும் கூடப் போவதில்லை. அவன் செய்த பாவ புண்ணியச் செயல்களே அவனைத் தொடருகின்றன.
- மகாவீரர்

வெளிப் பார்வைக்குக் கேவலமாக உள்ளதும், ஆனால் உட்புறத்திலே அன்பு நிறைந்ததுமான ஒரு குடிசைதான் ஆண்டவன் குடியேறி வசிப்பதற்கு ஏற்றதொரு மாளிகை.
- இங்கர்சால்

'அனைவரும் சேர்ந்து வீரியமான காரியத்தைச் செய்வோம்' என்று உபநிஷதம் கூறுகிறது. ஒருவருக்காக மற்றவர் செய்யலாம் என்று அது கூறவில்லை. ஆகவே அவரவர் செய்ய வேண்டிய காரியங்கள் அவர்களே செய்ய வேண்டும் என்பதே நமது சமயங்களின் கோட்பாடு.
- வினோபாஜி

எங்கே பெண்களுக்குக் கௌரவம் அளிக்கப்படுகிறதோ, அந்த இடத்தைப்பற்றிக் கடவுள்களும் திருப்தியடைகிறார்கள். அவர்கள் கௌரவிக்கப்படாத இடங்களில் எந்தப் புண்ணிய காரியமும் பலன் தராது.
- மனு

ஜீவராசிகள் அனைத்துமே பயணிகள்தாம். இறுதி அழைப்பு வந்ததும் கண நேரங்கூடத் தாமதிக்க முடியாது.
- குரு நானக்

கடவுளிடம் நம் குறைகளுக்காகவும் குற்றங்களுக்காகவும் எத்தனை முறை மன்னிப்புக் கேட்கிறோம்! அவர் நம்மை ஒரு முறையா மன்னிக்கிறார்? அவரைப் போல நாமும் பிறர் குற்றங்களைப் பல முறை மன்னிக்கப் பழக்கப்படுத்திக் கொள்வோம்.
- சுவைட்சர்

இறைவன் என் பக்கத்தில் இருக்கிறானா என்பதுபற்றி நான் கவலையுறுவதில்லை; ஆனால் நான் இறைவன் பக்கத்தில் இருக்கிறேனா என்பதுபற்றித்தான் கவலையுறுகிறேன்.
- ஆப்ரகாம் லிங்கன்

புராணங்களையும் நம் முன்னோர்களின் செயல்களையும் ‘பொய், பொய்'! என்று நிரூபிக்க முயல்வதைவிட, அவற்றுள் பொதிந்து கிடக்கும் நன்னெறிகளை மக்களுக்குப் போதிக்க முயலுங்கள்.
- அனந்தராம தீட்சிதர்

உயிர்கள் இறப்பதில்லை, அழிவற்றவை. உலக வாழ்க்கை மனிதனுக்கு அமைந்த சிறையே. நம் உடலான சிறையிலிருந்து விடுபட முயல்வதே தத்துவஞானம்.
-
பிளேட்டோ

இரண்டு கால்களையும் தூண்களாக நிறுத்தி, முதுகெலும்பை விட்டமாக அமைத்து, விலா எலும்புகளைக் குறுக்குக் கழிகளாகப் போட்டுத் தோல் எனப்படும் கூரையால் மூடப்பெற்ற நடமாடும் குடிசைதான் இந்த உடம்பு! அறிவில்லாதவர்கள்தாம் இதைப் பார்த்து மகிழ்வார்கள்.
- அறநெறிச்சாரம்

மனிதன் தான் எண்ணியபடி செய்து முடித்தால் அது மதியின் வெற்றி என்கிறான். வேறு விதமாக முடிந்தால், அது விதியின் செயல் என்கிறான்.
- ரமண மகரிஷி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.