வைஷ்ணவத்தின் மகுடமாகத் திகழ்வது பக்தி நெறிதான். இந்தப் பக்தி நெறிக்கு, 'பிரபத்தி' என்று பெயர். இது ஆர்த்தி பிரபத்தி, த்ருப்த பிரபத்தி என முக்கியமான இரண்டாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
1. ஆர்த்தி பிரபத்தி
இறைவன் ஒருவனே அடையத்தக்கவன். அவனை இங்கேயே இப்போதே அடைந்தே தீருவேன் என்று துடித்து இறையனுபூதி பெறல்.
2. த்ருப்த பிரபத்தி
நாம் இறைவனின் அடிமை. அவன் நம்மைக் கைவிட மாட்டான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு, அவனுக்குத் தொண்டு செய்து அவன் திருவருளால் மோட்சம் சித்திக்கும் என்ற நிச்சயத்தோடு அவனருளை எதிர்நோக்கி வாழ்வது.
பிரபத்தி மார்க்கத்தை மேலும் நான்கு வகையாகச் சொல்வதுண்டு. அவை;
1. ஸ்வநிஷ்டை
ஆச்சாரியர் உதவியின்றி இறைவனே சரணாகதிக்கு உரியவர் என்பதை அறிந்து, பிரபத்தியைக் கடைப்பிடித்து சரணடைதல்.
2. உக்தி நிஷ்டை
ஆச்சார்யர் ஒருவரை மட்டுமே நம்பி, அவர் சொல்வதை இம்மியும் பிசகாமல் கடைப்பிடித்து வாழ்தல்.
3. ஆச்சார்ய நிஷ்டை
ஆச்சாரியாரானவர் நம்மை இறைவனிடம் சேர்ப்பிப்பார் என்பதை அறிந்து அவரையே சரணாகப் பற்றி இறையருளைப் பெறல்.
4. பாகவத நிஷ்டை
பூர்ண பக்தியுடைய ஒரு பக்தர் இறைவனிடம் செய்கின்ற சரணாகதி.
பிரபத்தியின் அங்கங்களாக ஐந்து இருக்கின்றன. அவை;
1. அனுகூல்ய ஸங்கல்பம் - இறைவனுக்குப் பிடித்தமானவற்றை மட்டுமே செய்வதாக உறுதி எடுத்தல்.
2. ப்ரதிகூல்ய வர்ஜனம் - இறைவன் திருவுள்ளத்திற்குப் பிடிக்காதவற்றைச் செய்யாதிருத்தல்.
3. மஹா விஸ்வாசம் - இறைவன் நம்மை ஒருக்காலும் கைவிடமாட்டார் என்பதில் உறுதியான நம்பிக்கை.
4. கோப்த்ருத்வ வரணம் - எந்த யோகத்தையும் என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை. ஆகவே, 'இறைவா, கருணை காட்டு' என வேண்டுதல்.
5. கார்ப்பண்யம் - பெருமாளைத் தவிர வேறு தெய்வங்களை நாடுவதில்லை; மோட்சத்தைத் தவிர உலகப் பொருட்களை வேண்டுவதில்லை. வேறு எந்த நெறியிலும் ஈடுபாடில்லை. இறைவா உன்னை விட்டால் வேறு யாரும் எனக்கு கதியில்லை என மனம் உருகி, பணிவாக வேண்டுதல்.
பக்தி ஒன்பது வகைகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவை;
1. ச்ரவணம் – இறைவன் திருநாமம், புகழ் கேட்டல்
2. கீர்த்தனம் – இறைவன் பெருமையைப் பாடுதல்
3. ஸ்மரணம் – இறைவனையே எப்போதும் நினைத்தல்
4. பாதசேவனம் – இறைவன் திருவடிகளைச் சரணடைதல்
5. வந்தனம் – பகவானை வணங்குவது
6. அர்ச்சனம் – அர்ச்சனை செய்தல்
7. தாஸ்யம் – அடிமையாகப் பணிவிடை செய்தல்
8. ஸக்யம் – நட்புகொள்ளுதல்
9. ஆத்ம நிவேதனம் - இறைவனுக்காக உயிரையே தியாகம் செய்தல்.
இறைவனை அடைவதில் சில தடைகள் ஏற்படும் என்கின்றனர். அவை;
1. ஸ்வரூப விரோதி - உடலை ஆத்மா என நினைத்தல், பகவானை விட்டுப் பிறர்க்கு அடிமையாதல்
2. பரத்வ விரோதி - நம் பகவானின் சக்தியே மேலானது என்பதை மறந்து, அவனை விட்டுப் பிற தேவதைகளை உயர்வாக நினைப்பது.
3. புருஷார்த்த விரோதி - தர்ம – அர்த்த – காம – மோக்ஷத்திற்கு இடையூறாக இருப்பது.
4. ப்ராப்தி விரோதி - இறைவனை அடைந்து கைங்கர்யம் செய்யத் தடையாக இருப்பது.
5. உபாய விரோதி - இறைவனை அடையும் மார்க்கத்தில் ஏற்படும் அனைத்துத் தடைகளும்.
இந்த அர்த்த பஞ்சக ஞானத்தை முறையாக அறிவதே மோட்சத்திற்கு எளிய வழியாகும்.
ஜீவாத்மன் தனது சுயமுயற்சியால் மாத்திரமே இறைவனை அடைய முடியாது என்பது வைணவத்தின் அறுதி கருத்து. பெரிய பிராட்டியாகிய தாயாரின் கருணையினால் அவள் ஆன்மாக்களுக்கும், பெருமானுக்கும் பாலமாக இருந்து உயிர்களின் குறைகளை மன்னித்து ஏற்கும்படி பெருமானிடம் விண்ணப்பித்து அவரின் கருணையை உயிர்கள் பெறுமாறு செய்கிறாள். இது புருஷகாரம் என்று கூறப்படுகிறது.
பஞ்ச சம்ஸ்காரம்
குருபக்தியே மோட்சம் அடைவதற்கான மார்க்கம் என்று, குருவானவர் சம்ஸ்காரங்களைச் சீடனுக்குச் செய்வார். இது சமாஸ்ரயனம் எனப்படும்.
1. ஸ்தாபம் எனப்படும் சங்கு சக்கர முத்திரைகள் தோளில் பதித்தல்
2. புண்ட்ரம் எனப்படும் திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணத்தை உடலில் 12 இடங்களில் இடல்
3. அடியேன், தாசன் போன்ற 'தாஸ்ய' நாமத்தை ஏற்றல்
4. திருமந்திரம் மூன்றையும் ஆச்சாரியனிடம் பெறல்
5. 'இஜ்யை' எனும் வழிபாட்டு முறைகளை அறிதல்.
பிரபத்தியை அறிந்து அதன்படி கடைப்பிடிப்பவர்களை பிரபன்னன் என்கின்றனர்.