ஆதிசங்கரர் நெறிப்படுத்திய ஆறு மதங்களுள் காணபத்யம் கணபதியை முழு முதற்கடவுளாகக் கொண்டது. ரிக்வேதம் 'கணானாம் த்வா கணபதிக்ம்' என்று போற்றி 'ப்ரஹ்மணஸ்பதி', 'கணங்களின் தலைவன்' என்றும் போற்றுகிறது. அதர்வவேதம் யானை முகத்தவனாக வழிபடுகிறது. தைத்திரீய ஆரண்யகம் ஒற்றைக் கொம்பனாக ஆராதிக்கிறது. தனிமதமாகத் தொடங்கினாலும் சிவசக்தி வழிபாட்டோடு காணபத்யம் இரண்டறக் கலந்து, சைவ சித்தாந்த மரபோடு இயைந்து காணப்படுகிறது.
சாமவேதத்தில் கோபில கிருஹ்ய சூத்திரம் கணபதி வழிபாடு பற்றி விரிவாகக் கூறுகிறது.
நிர்குண, நிராகார பரப்பிரம்மமாகிய அவரே கணபதி. அவரே முழு முதற்கடவுள், உலகின் தோற்றமும், நிலைபெறுதலும், ஒடுக்கமும் அவரிலேயே நடைபெறுகிறது.
1. மகாகணபதி
2. அரித்திர கணபதி
3. சுவர்ண கணபதி
4. சந்தான கணபதி
5. நவநீத கணபதி
6. உன்மத்த உச்சிஷ்ட கணபதி
என ஆறு பிரிவுகளாக கணபதியை வழிபடுவர்.
கணபதி மூலாதாரச் சக்தியின் வடிவினர். 'க' என்பது ஞானம், 'ண' என்பது மோட்சம், 'பதி' என்பது இருப்பிடம். இவற்றின் பொருள் சேர்த்து கணபதி ஞானத்திற்கும், வீடு பேற்றிற்கும் அதிபதி என்று கூறுவர். உயிர்களின் மும்மலங்களைத் தொழிற்படுத்தி அவற்றிற்கு ஞானம் வழங்குபவர்.
உலகின் படைப்பில் மாயையே ஆக்க சக்தியாக விளங்குகிறது. இந்த மாயையின் தலைமையான சிவசக்திக்கு 'விநாயகர்' என்று பெயர். வி – இன்மை, நாயகர் – தலைமை. தனக்கு மேல் தலைமையற்றவர் என்பது பொருள்.
மாயையை நீக்கும் சக்தி அவருடையது. ஆகவே அவருக்கு வக்ர துண்டர் எனப் பெயர் கொள்வர். உலகம் முழுவதையும் தம்முள் அடக்குவதால் 'லம்போதரர்' என்பர். நமக்குள் இருக்கும் கயமையாகிய உலகப்பற்றினை நீக்கி (எலி), நமக்கு மெய்ஞானத்தை அளிப்பவர் (மோதகம்).
விநாயகர் ஏந்தியுள்ள பாசக்கயிறு – மாயையிலிருந்து உலகைப் படைத்தலையும், அங்குசம் – அழித்தலையும், ஒற்றைக்கொம்பு ஏந்திய கை – காத்தலையும், துதிக்கை – மறைத்தலையும், மோதகம் உள்ள கை – அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் குறிக்கின்றன.
கணபதி பிரம்மசாரி என்று பொதுவாகச் சொல்லப்படுகிறார். அறிவு மற்றும் ஆற்றல் வடிவமாக வல்லப கணபதி உருவில், சக்தியைத் தன் மடிமேல் வைத்திருப்பார். இடையூறுகளை நீக்கும் பொருட்டு கணபதியே எல்லாப் பூஜைகளிலும் முதலில் வணங்கப்படுகிறார். வினை தீர்ப்பவர், தலைவன், முதலில் வணங்கப்படுபவர்.
சாங்கியம் காணபத்தியத்தின் அடிப்படைத் தத்துவமாகும். புருஷனாகிய உயிர், தனது தளைகளிலிருந்து விடுபட்டுத் தனக்கும் பிரகிருதிக்கும் உள்ள வேறுபாட்டைப் பிரித்து அறிய வேண்டும். இதற்கு இயமம் முதலான அஷ்டாங்க யோகப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
மூலாதாரத்தின் வடிவமாகவே கணபதி அறியப்படுகிறார். எனவேதான் பிரபஞ்சச் சக்தியாகிய குண்டலினியைப் பாம்பாக அணிந்திருக்கிறார். சந்திரனின் அகந்தையை நீக்கிய லீலையைப் போல், நமக்குள் இருக்கும் அகங்காரத்தை நீக்கி, இடை, பிங்கலையின் நடுவில் சுசும்னை நாடி வழியில் சஹஸ்ராரத்தை அடைவித்து தத்துவநிலையாகிய ஞான அனுபூதியை அருள்கிறார்.
இவ்வாறு குண்டலினி யோகம் பயின்று ஞானத்தை அடைந்து கணபதியின் உலகை அடைவதே கண்பதியை வழிபடுபவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.