ஆன்மாவும் – இறைவனும் வேறு வேறானவை. இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றுபடப் போவதில்லை. ஆகவே இந்த இரண்டெனும் நிலை மாறப்போவதில்லை என்று உறுதியாக வாதிப்பதனால் மத்வரின் கொள்கைக்கு த்வைதம் என்ற பெயர் வந்தது. மாயாவாதத்திற்கு எதிராக த்வைதக் கொள்கை தத்துவ வாதத்தை முன் வைக்கின்றது.
த்வைதக் கொள்கையில் பேதங்கள் எனப்படும் வேற்றுமையே முக்கியமான வாதமாக ஸ்ரீமத்வரால் முன் வைக்கப்படுகிறது.
1. ஜீவ – ஈஸ்வர பேதம்: இறைவனுக்கும் – உயிருக்கும் உள்ள வேற்றுமை
2. ஜட – ஈஸ்வர பேதம்: உயிரற்ற பொருளுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை
3. ஜீவ – ஜட பேதம்: உயிர்களுக்கும் உயிரற்ற பொருளுக்கும் உள்ள வேற்றுமை
4. ஜீவ பரஸ்பர பேதம்: இரண்டு உயிர்களுக்கிடையில் உள்ள வேற்றுமை
5. ஜட பரஸ்பர பேதம்: இரண்டு உயிரற்ற பொருட்களுக்கு இடையே உள்ள வேற்றுமை
என்று ஐவகை பேதங்களாக இருக்கின்றன.
விஷ்ணுவே பரம்பொருள் என்று த்வைதிகள் கொள்வர். இந்தத் தத்துவத்திற்கு ஆதாரமாக வேத – உபநிடதங்களையே கொண்டிருந்தாலும் புராணங்களையே சிறப்பித்துப் பேசுவர்.
ஆன்மாக்கள் ஒத்த இயல்பினை உடையவை அல்ல. ஒவ்வொன்றும் வேறுபட்ட இயல்புடையவை. ஆன்மாக்கள் சில தம் வினைப்பயன் மூலமாக மீளா நரகில் மாட்டிக் கொள்கின்றன.
ஆன்மாக்களால் இறைவனை நேரடியாக அடைய முடியாது. ஆனால் இறைபுத்திரனாகிய வாயுவின் மூலம் இறை அருளை, காட்சியைப் பெற முடியும்.
ஆன்மாக்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவை அல்ல. ஆன்மாக்கள் அழிவற்றவை.
மோட்ச இன்பம் கூட, ஆன்மாவிற்கும் இன்னொரு ஆன்மாவிற்கும் பாரபட்சமாகவே இருக்கும்.
1. சுதந்திர தத்துவம் – பரம்பொருளாகிய விஷ்ணு.
2. சுதந்திரமற்ற தத்துவம் – சார்ந்துள்ள பொருட்கள் உலகம் / உயிர் போன்றவை.
எனும் இரண்டு பொருட்கள் இருக்கின்றன.
1. முக்தி பெறும் தகுதி உடையவை முக்தி யோக்கியம் என்றும்,
2. எண்ணற்ற பிறப்பு இறப்பினை அடைபவை நித்திய சம்சாரிகள் என்றும்,
3. முடிவற்ற நரகில் உழல்பவை தமோ யோக்கியம் என்றும் ஆன்மாக்கள் மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன.
பரம்பொருளை மத்வர் வர்ணிக்கும் போது, 'பிரம்ம சப்தஸ்ச் ச விஷ்ணு ஏவ', விஷ்ணுவே பரம்பொருள் என்கிறார்.
மனிதனின் துன்பங்களுக்கும் தளைகளுக்கும் காரணம் அவர்களின் வினையோ, அறியாமையோ, காலம், பொருள், இயற்கையோ கூட அல்ல.
இறைவனால் மாத்திரமே உலகில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களைக் கட்டுப்படுத்த இயலும். தளைகளும் அவனது விருப்பத்தினால் வருவதே.
ஸ்ரீமத்வாச்சாரியார் கடவுளின் அருளைப் பெற அன்பு எனும் வழியைப் போதித்தார். பரிவார தேவதைகளை வழிபடும் வழக்கத்தைக் கொடுத்தார். இந்தப் பரிவார தேவதைகள் பரம்பொருளாகிய விஷ்ணுவை அடையும் பாதையில் உதவும் என்பது அவரது கருத்து. இறைவனும், இறைவியுமே எல்லா உயிர்களுக்கும் அம்மையப்பர்.
இறைவனிடத்தில் பக்தியே முக்திக்கு வழியும், முடிவும் ஆகும். உயிர்களின் தளைகள் நீங்குவதும், அவர்களுக்கு வழங்கப்படும் முக்தி, ஆனந்தம் யாவும் முற்றுமுழுதாக இறைவனின் திருவுள்ளப்படியே அமையும்.