தட்சப்பிரஜாபதி நடத்தும் மிகப் பெரிய யாகம். ரிஷிகளும் இந்திராதி தேவர்களும் கூடியிருக்கிறார்கள். அழைப்பில்லை என்றாலும் தட்சனின் மகள் சதிதேவி, யாக சாலைக்கு வருகிறாள். தன் மகளின் வருகையை விரும்பாத தட்சன், ''மயானத்தில் வசிக்கும் அமங்கலமான சிவனின் மனைவியான உன்னை யார் இங்கு அழைத்தது?
''நீ வந்ததே இந்த யாகத்திற்கு அமங்கலம். பூப்போன்ற உன்னை அந்தப் பிச்சாண்டிக்குத் திருமணம் செய்து கொடுத்தேனே, அதற்குப் பரிகாரம்தான் இந்த யாகம். மனிதக் கபாலங்களை மாலையாக அணிந்து, திருவோடும் திரிசூலமும் ஏந்திப் பிசாசுகளுடன் பேயாட்டமாடித் திரியும் உன் கணவனிடமே திரும்பிச் செல்'' என்று அவளைக் கடிந்து கொள்கிறான்.
யாகத்தீயைப் போன்று தட்சனின் கர்வம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தட்சனின் அறியாமையை உணர்ந்த உலக அன்னை சதிதேவி அவன் மீது கருணை கொண்டு பகவான் சிவனின் பெருமைகளை எடுத்துக் கூறுகிறாள்.
''எவருடைய மங்களமான நாமத்தை எல்லா வேதங்களும் கொண்டாடுகின்றனவோ, 'குறைவில்லா நிறைவே, கோதில்லா அமுதே' என்று எவருடைய திருவடிகளை மகான்கள் கொண்டாடுகின்றார்களோ, 'சிவ சிவ' என்று எவருடைய மங்கள நாமத்தைக் கூறி பிறவிப் பெருங்கடலை எல்லா ஜீவர்களும் கடக்கின்றார்களோ அவரைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும் தந்தையே?
''அழிந்து போகும் இந்த உடலையே நான் என்று நினைத்து வாழும் உங்களால், சவத்தைச் சிவமாக்கும் அந்த மங்கள மூர்த்தியை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?
''உலகில் உள்ள அனைத்தும் இறுதியில் சாம்பலாகும் என்ற உண்மையை உணர்த்தவே, உடல் முழுவதும் சாம்பல் பூசி, உயிர்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பினாலேயே பகவான் சிவன் மயானத்தில் வாசம் செய்கின்றார். இந்த சிருஷ்டியில் பிறந்த எல்லா உயிர்களும் இறுதியில் வந்து சேரவேண்டிய ஒரே இடம் மயான பூமி. அது உயர்ந்தவர் – தாழ்ந்தவர், ஏழை – பணக்காரர், படித்தவர் – பாமரர் என்று எந்த வேறுபாடும் இல்லாத சமதர்மத்தைக் கொண்டாடும் இடம். இறந்த ஜீவனை மயானத்தில் கொண்டு வந்து அவனுடைய உற்றார்கள் தீக்கிரையாக்கும் போது அந்த ஜீவனுக்கு உற்ற துணைவன் யார் தெரியுமா உஙகளுக்கு? அவர் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? வாழும் போது தன்னை நாடி வராமல் பாபச் செயல்கள் புரிந்து இறுதியில் எமனுக்கு இரையாகும் இந்த ஜீவர்களை மயானத்திலாவது சந்திக்கலாமே என்று அங்கு காத்துக் கொண்டிருக்கும் அன்பின் உருவம் சிவனே. மூன்று குணங்களுக்கு அடிமையாக வாழும் ஜீவர்களின் வினைகளைத் திரிசூலத்தினால் அழித்து, முக்தியைக் கொடுத்ததினால் ஆனந்தத் தாண்டவம் புரியும் அவருடைய திருவடிகளைப் பற்றி, இனியாவது கடைத்தேற வழிகாண்பாய்'' என்றாள்.
அன்னை பார்வதிதேவி, தந்தைக்குச் சொன்ன அறிவுரையைப் பின்பற்றி நாம் வாழ்வில் கடைத்தேற முயற்சிக்கலாம்...!