சைவ சமயத்தில் புண்ணியம் என்பது, பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும், பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் அழைக்கப்படுகிறது.
பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து, வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப்படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்.
பசு புண்ணியம் பயன் அழிந்துவிடுவதற்கு ஓர் எடுத்துக் காட்டு.
பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம். அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.
இவ்வுண்மையைச் சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில்,
“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்"
என்று மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார்.
உயிர்களுக்கு செய்யும் நல்வினைகள், இறைவனை நினைந்து, அவனருளால் செய்யப்படுவதாகக் கருதிச் செய்வோமானால், அவை பதி புண்ணியங்களாகும்.
இத்தகு சிவ புண்ணியங்களில் ஈடுபடுவதற்கு நற்குருவை நாட வேண்டுவது முதற்கண் செய்யவேண்டியது ஆகும். அத்தகு குருவருளில் நின்று ஒழுகினால், தவ முயற்சியாகிய சிவ புண்ணியத்தில் ஈடுபாடு ஏற்படும்.