அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி - மூலவர் திருவுருவச்சிலை போகரால் நவபாடாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர்
ஆறு ஆதாரங்களில் முக்கியமான ஆக்ஞா எனப்படும் புருவமத்திக்கும், உச்சந்தலைக்கும் மத்தியில் குடிகொண்டிருக்கும் மனோன்மணியின் அனுக்கிரகத்தாலே (பீனியல் சுரப்பி அல்லது கூம்புச் சுரப்பி என்று அறிவியல் ரீதியாக அறியப்படுகிற அரிசியின் அளவே உள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும்) ஒன்பது வகையான பாஷாணங்களாகிய;
1. கௌரிப் பாஷாணம் (Arsenic pentasulfide)
2. கெந்தகப் பாஷாணம் (Sulfur)
3. சீலைப் பாஷாணம் (Arsenic Di sulphite)
4. வீரப் பாஷாணம் (Mercuric Chloride)
5. கச்சாலப் பாஷாணம் (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை)
6. வெள்ளைப் பாஷாணம் (Arcenic Tri Oxide)
7. தொட்டிப் பாஷாணம் (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை)
8. சூதப் பாஷாணம் (Mercury)
9. சங்குப் பாஷாணம் (சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை)
இவைகளைப் பல செய்முறைகளுக்கு உட்படுத்தி அவற்றைச் சுத்திக்கரித்துப் பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் வடிவமைக்கப்பட்டதாகப் போகர் மேற்காணும் பாடலில் கூறியிருக்கிறார். இன்றளவும் இதன் செய்முறை புதிராகவும், நவீன அறிவியலுக்குச் சவால் விடும் விதமாக அமைந்திருப்பதால் தண்டாயுதபாணி சிலை என்பது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.