பிரதோச விரதம் வளர்பிறை தேய்பிறையாகிய இரண்டு பட்சங்களில் வருகிற திரயோதசி திதியில், மாலை ஏழரை நாழிகைக் காலமான பிரதோசக் காலத்திலே சிவபெருமானைக் குறித்துக் கடைப்பிடிக்கும் விரதமாகும். இந்த விரதத்தை ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்ற நான்கு மாதங்களுள் ஒன்றில் சனிக்கிழமையில் வரும் பிரதோசத்திலிருந்து முதலாகத் தொடங்கிக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு வரும் சனிப் பிரதோசம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ஆகமம் சொல்லுகிறது. பிரதோசத்தன்று உபவாசமிருந்து சூரிய அஸ்தமனமாக நான்கு நாழிகை முன்பு ஸ்நானம் செய்து, வில்வத்தினால் சிவபூஜை செய்து, பின்பு திருக்கோயிலுக்குச் சென்று அங்கு மூலலிங்க மூர்த்திக்கும் நந்திக்கும் நடக்கும் விசேஷ அபிசேக ஆராதனைகளைக் கண்டு, பின்பு பிரதோச நாயகரை இடப வாகனத்தில் ஏற்றிக் கோயில் பிரகாரத்தை வலம் வருவதைக் கண்டு தரிசனம் செய்தல் வேண்டும்.
பிரதோசக் காலத்தில், கோயிலைப் பிரதட்சணம் செய்யும் முறை யாதெனில், நந்திதேவரைத் தரிசித்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டேச நாயனாரை வணங்கிப் பின்பு, சென்ற வழியே திரும்பி வந்து, மறுபடியும் நந்திதேவரைத் தரிசித்து, பின்பு அங்கிருந்து வலமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்து, பின் திரும்பி வந்து நந்திதேவரை வணங்கி, அவருடைய இரண்டு கொம்பின் நடுவே பிரணவத்தோடு கூட 'ஹர ஹர' என்று சொல்லிச் சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து வணங்குதல் வேண்டும். இப்படிச் செய்யும் பிரதட்சணத்திற்கு, 'சோம சூத்திரப் பிரதட்சணம்' என்று பெயர். இதனைப் பிரதோசக் காலத்தில் செய்தால் சிறப்பான பலனுண்டு.
இவ்வாறு சிவதரிசனம் செய்து, பின்பு சிவனடியார்களுக்கு உணவு படைத்துப் பின் விரதமிருப்பவர் உணவு கொள்ள வேண்டும். பிரதோசக் காலத்தில் செய்யும் சிவத்தொண்டு சிறிதாயினும் கோடானுகோடி பலனை அளிக்கும். இந்த விரதத்தை மெய்யன்போடு கடைப்பிடிப்போருக்குக் கடன் வறுமை நோய் பயம், மரண வேதனை பாவம் முதலியன நீங்கும். பிரதோசக் காலத்தின் சிறப்புப் பலனை உணர்ந்து, வீண்காலம் போக்காமல் அன்றைத் தினங்களில், விரதமிருந்து அதன் பலனைப் பெறுதல் அறிவுடையோர் கடமையாகிறது.