பிள்ளைலோகாசாரியார் தாம் இயற்றிய நூலில் நாராயணன் எனும் சொல் ஆறு பண்புகளை விளக்குவதகச் சொல்கிறார். அவை;
1. வாத்ஸல்யம்
பசு தன் கன்றினிடத்திலே கொண்டிருக்கும் பரிவு. தான் ஈன்ற கன்றினுடைய உடம்பின் மீதிருக்கும் அழுக்காகிய வழும்பினையும் விரும்பியுண்ணும்; தன் பாலை உண்ணக் கொடுத்துக் கன்றை வளர்க்கும். கன்றுக்கு ஊறு செய்பவர்களைத் தன் கொம்பாலும் குளம்பாலும் எதிர்த்துத் தன் கன்றுக்கு யாதோர் ஊறும் நேராதபடி பாதுகாக்கும். அது போலவே இறைவனும் அடியவர்களின் குற்றங்களை 'என் அடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார்' என்று விரும்பி ஏற்று மகிழ்வான். அவர்களுக்குத் தீங்கு ஏதும் நேராமல் அவர்களைப் பெருங் கருணையுடன் பாதுகாத்து அருள்வான். இறைவனின் இந்த இயல்பே வாத்ஸல்யம் எனப்படும்.
2. ஸ்வாமித்வம்
உடைமையை உடையவனாக இருக்கும் இருப்பு ஸ்வாமித்வம் எனப்படும். சேதனன் ஆகிய உயிர் தன்னைப் புறக்கணித்து விமுகனாக இருப்பினும், அவனைக் கைவிட்டொழிக்க மனம் வாராமல், எப்படியாயினும் ஆட்கொண்டு காத்தருள்வதற்கே விரும்பி, எதிர்சூழல் புக்குத் திரிவதற்கு உரியபடி, உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு முறைமை, ஸ்வாமித்வம் ஆகும்.
3. ஸௌசீல்யம்
தான் உயர்வற உயர்ந்தவனாக இருப்பினும், எவ்வளவு இழிந்தவரோடும் யாதொரு வேறுபாடுமின்றி ஒருங்கே மேல் விழுந்து புரையறக் கலந்து பழகி அருள்புரியும் பண்பு.
4
. ஸௌலப்யம்
எத்தனையும் உயர்ந்த இறைவன், எத்தனையும் எளிவந்து, யாவரும் சுலபமாகத் தன்னைப் பற்றிக்கொள்ளும்படி, தன் வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கும் எளிமைத் தன்மை.
5. ஞானம்
உயிர்கள் கீழ் நின்ற நிலையையும், அவற்றை மேல் உய்த்துக் காத்தற்கு உரிய வழிவகைகளையும் அறிந்திருக்கும் தன்மை.
6. சக்தி
அங்ஙனம் தான் அறிந்தபடி சேதனர்களின் குற்றங்களையும் இழிவுகளையும் போக்கி, அவற்றிற்குத் தன்னைக் கொடுத்து நலம் செய்வதற்கு உரிய பேராற்றல்.
‘நாராயணன்' என்னும் நலந்தரும் சொல், இந்த ஆறு பெரும் பண்புகளையும் சிறப்பாகக் குறிப்பிட்டு உணர்த்துகிறது என்பர் பெரியோர்.
சிறந்த இந்த ஆறு தெய்விகப் பண்புகளும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாள் திருவுருவ அமைப்பில் தெளிவாக விளங்குகின்றன என்று பெரியோர் கூறுவர்.
பெருமாள் தமது திருக்கைகளிலே முறையே தரித்துக் கொண்டுள்ள திருவாழி திருச்சங்கு என்னும் திவ்ய ஆயுதங்கள், அவர்தம் ஞானம் சக்தி என்னும் பண்புகளை உணர்த்துகின்றன. அடியார்களை நோக்கி 'அஞ்சேல்' என்று அருளிச் செய்யும் நிலையிலுள்ள அபயஹஸ்தம் என்னும் திருக்கை, அவரது வாத்ஸல்யம் என்னும் பண்பைக் குறிக்கும். அவரது திருமுடி, அனைத்திற்கும் அனைவருக்கும் தலைமை நிலையில் விளங்குகிற அவர்தம் ஸ்வாமித்வம் என்னும் குணத்தைப் புலப்படுத்தும். அவர்தம் திருமுகமும் புன்முறுவலும், அவர் தம் ஸௌசீல்யத் தன்மையைச் சுட்டும், ஒளிமிக்க அழகிய தாமரைமலர்ப் பீடத்தில், அவர் தம் திருவடிகளை ஊன்றி நிற்கும் நிலை, அவருடைய எளிமை என்னும் ஸௌலப்யத் தன்மையைச் சாலவும் விளக்கும்.