வியாச முனிவர் முன்பு ஒரு சமயம் கங்கைக்குக் கீழ்க்கரையிலே காசி க்ஷேத்திரத்திற்கு எதிராகக் காசியைப் போல் ஒரு நகரை உண்டு பண்ணினார்.
‘மகாசேத்திரமாகிய காசி நகருக்குப் போலி ஒன்று இருக்கக்கூடாது; எது காசி என்று அறியாமல் மக்கள் இடர்ப்படுவர்' என்று வருந்திய தேவர்கள் சிந்தாமணி விநாயகரை வேண்டினார்கள்.
சிந்தாமணி விநாயகர் பிராம்மணச் சிறுவர் போல் வடிவெடுத்து வியாசரிடம் போய், புதிய காசியின் பெருமையைக் கேட்டார்.
கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வியாசர் விடை கூறி வந்தார்.
முடிவில் விநாயகர் ஒரு விஷயத்தைப் பற்றியே பல முறை கேட்டார். வியாசருக்குக் கோபம் வந்தது.
“சுவாமி! காசியில் இறந்தால் முக்தி என்கிறார்களே; இந்தப் புதிய காசியில் இறந்தால் என்ன வரும்?” என்று விநாயகர் கேட்டார்.
வியாசர் கோபத்தினால் விழுங்கப்பட்டிருந்ததால், “கழுதைப் பிறப்பு வரும்'' என்றார்.
உடனே விநாயகர் மறைந்துவிட்டார்.
வியாசர் பெரிதும் வருந்தி, காசிவிசுவநாதரைப் பூசித்து, “சுவாமி! நான் ஏற்படுத்தியக் காசிக்கு ஒரு பெருமையும் இல்லையே!" என்றார்.
கருணைக்கடலான விசுவநாதர் வியாசரைத் தேற்றி, “காசியில் வந்து என்னை வழிபடுவர் அனைவரும் வியாசக் காசிக்கு வந்து அங்கு நீ பூசித்த மூர்த்தியைச் சேவிக்கட்டும். அங்ஙனம் வழிபடுவோர் காசிக்கு வந்த முழுப் பயனைப் பெறுவர்'' என்று வரமளித்தார்.
அதனால் காசி யாத்திரை செல்பவர்கள் வியாச காசி சென்று வணங்குவது அவசியமாகும்.