விஷ்வக்சேனருக்குச் சேனை முதலியார் (படைத்தவர்), சேனைநாதன் என்கிற பெயர்களும் உண்டு.
சிவபிரானுக்குச் சண்டேசுவரர் எப்படியோ, அதுபோல வைணவச் சமயத்தில் திருமாலுக்கு விஷ்வக்சேனர் விளங்குகிறார் எனலாம். சண்டேசுவரர் போலவே, இவர் பெருமாள் கோயில் பணிகள் பலவற்றையும் மேற்பார்வையிட்டு ஆட்சி செய்வதுடன், பெருமாள் திருவுலா வரும் போது உடன் வருபவராவார்.
விஷ்வக்சேனர் என்னும் சொல்லுக்கு உலகமெங்கும் சேனைகளையுடையவர் என்பது பொருள். இவர் அனந்தன் கருடன் என்பவர்களைப் போல, நித்திய சூரிகளுள் ஒருவர் ஆவார். இவரே நம்மாழ்வாருக்குக் குரு என்றும், நம்மாழ்வாராக அவதரித்தவர் என்றும் கூறுவர்.
இவரது நிறம் கறுப்பு. தலையில் திருமுடி உண்டு. நான்கு கைகளுடன் இருப்பார். இரண்டு கைகளில் சங்கும் சக்கரமும் விளங்கும். ஏனைய இரண்டு கைகளில் கதாயுதமும், பிரம்பும் ஏந்தியிருப்பது உண்டு. சில திருவுருவங்களில் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் பிரம்பும் காணலாம். சிலவற்றில் இடக்கை இடுப்பில் இருக்க, வலக்கை அச்சுறுத்தும் அதிகாரத் தோரணையில் காணப்படும்.
வைணவச் சமயக் கொள்கையின்படி நாராயணனும் மகாலட்சுமியும் முறையே முதல் இரண்டாம் ஆச்சாரியர்களாக விளங்க, இவரே மூன்றாம் ஆச்சாரியராகத் திகழ்கிறார்.
பெருமாள் கோவில்களில் இவருக்கு வடகிழக்கு மூலையில் சந்நிதி அமைந்திருக்கும். இவரது திருநட்சத்திரம் ஐப்பசிப் பூராடம். சைவத்தில் விநாயகர் போல, வைஷ்ணவத்தில் இவரை எல்லாச் செயல்களுக்கும் தொடக்கத்தில் வணங்கி வழிபடுவார்கள்.
திருவரங்கம், பெருமாள் கோவில், திருமலை முதலிய தலங்களில் உள்ள கோவில்களில் பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, இவரைத் திருவீதி எழுந்தருளச் செய்து வலம் வருவிப்பது வழக்கம். பிரம்மோற்சவப் பெருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செம்மையாகச் செய்யப்பட்டுள்ளனவா என்ற இவர் மேற்பார்வையிடுவதாக தொன்ம நம்பிக்கையும் இருக்கிறது.