திருமால் நெறிச் சமய நூல்கள், அந்தர்யாமித்துவம், பரத்துவம், வியூகம், விபவம், அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளில் திருமால் விளங்குவதாகக் கூறுகின்றன.
இறைவன் உயிர்தொறும் உள்ளும் புறமும் கலந்து பரவி நிற்கும் நிலை அந்தர்யாமித்துவம்.
திருமகளும் தானுமாய் நித்தியர் முத்தர் சேவிக்கப் பரமபதத்தில் திருவோலக்கம் இருக்கும் நிலை பரத்துவம்.
திருப்பாற்கடலில் யோக நித்திரை என்னும் அறிதுயில் கொண்டு உயிர்களைக் காத்தருளும் வகைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலை வியூகம்.
கொடியோரைத் தெறுதலாகிய துஷ்ட நிக்கிரகமும், நல்லோருக்கு அளித்தல் ஆகிய சிஷ்ட பரிபாலனமும் செய்தருளுவதற்காக, இராமபிரான், கண்ணபிரான் முதலிய அவதாரங்களாகத் தோன்றியருளும் நிலை விபவம்.
வழிபடும் அன்பர்களுக்கு எழுந்து அருள் செய்வதற்காகத் திருவரங்கம் திருமலை பெருமாள் கோயில் முதலிய திவ்விய தேசங்களிலும், அடியார்களின் திருமாளிகைகளிலும் எழுந்தருளி விளங்கும் நிலை அர்ச்சை எனப்படும்.
ஐவகை நிலைகளும் ஆழ்வார்களின் பாடல்களும்
இந்த ஐந்தனுள், பரத்துவ நிலையை 'ஆதியஞ் சோதி உரு', 'குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத் தினுள்ளே எழுவதோர் உரு' என்றும், வியூக நிலையைப் ‘பாற்கடலில் பையத்துயின்ற பரமன்' என்றும், விபவ நிலையை, ‘மீனொடு ஆமை கேழல் அரிகுறளாய் முன்னும் இராமனாய்க் கற்கியும் ஆனான்' என்றும், அந்தர்யாமித்துவ நிலையை “ஒண்சங்கு கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளான்' என்றும், அர்ச்சை நிலையைத் 'தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே, தமர் உகந்தது எப்பேர் மற்றப் பேர்; தமருகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே அவ்வண்ணம் ஆழியான் ஆம்', 'பின்னானார் வணங்கும் சோதி' என்றும் ஆங்காங்கே ஆழ்வார்கள் தம் அருளிச்செயல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஐவகை இடங்கள்
1. திருமால் பரமபதத்தில் நித்தியரும் முக்தரும் தமது அனுபவத்திற்குப் போக்கு வீடாகப் பாடும் சாமகானம் கேட்பராதலின், பரத்துவ நிலை ‘பாட்டுக் கேட்கும் இடம்.'
2 ‘அசுரர்களாலும் இராக்கதர்களாலும் துன்புறுத்தி நலியப்படுபவர்களான பிரமன் முதலிய தேவர்களைக் காத்தருள்வதற்கு, அவர்களின் துயர ஒலி எங்கிருந்து எப்போது வருமோ?' என்று செவி கொடுத்துக் கொண்டு, திருமால் திருபாற்கடலில் அறிதுயிலில் அமர்ந்திருக்கும் வியூக நிலை, ‘கூப்பீடு கேட்கும் இடம்.'
3. அடியவர்களின் துயர ஒலியைக் கேட்ட அளவில் துடித்துக் கொண்டு எழுந்திருந்து, திருப்பாற்கடலினின்று ஆதிசேடன் ஆகிய கட்டிலை விட்டு நீங்கி, இந்த உலகத்திற்கு இழிந்து வந்து, அயோத்தி, மதுரா முதலிய இடங்களில் திருமால் அவதரிக்கும் விபவ நிலை ‘குதித்த இடம்.'
4. தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ‘இனிப் புறம் போகேன், புறம் போகல் ஒட்டேனே' என்று இட்ட அடி பெயர விடாமல், அடியார்கள் தன்னைக் கட்டி வளைத்துக் கொள்ளும்படி எளிமையாய் வந்து, உருவத் திருமேனிகளில் திருமால் உறைகிற அர்ச்சை நிலை, 'வளைத்த இடம்.'
5. அடியார்களின் இதயகமலத்திலே பிரிவின்றி எழுந்தருளியிருந்து, திருமால் தான் உகந்தார்க்குத் தன் அழகைக் காட்டி, நுகரச் செய்து உண்பிக்கும் அந்தர்யா மித்துவ நிலை 'ஊட்டும் இடம்'
என்று, இந்த ஐந்து நிலைகளையும் பற்றித் திருமால் நெறிச் சான்றோர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஐவகை நீர்கள்
1. உயிர்களின் உள்ளத்தில் இருந்து வைத்தும், கண்டு தொழ வேண்டும் என்று விரும்புபவர்களுக்குக் கண்களால் காண இயலாமல், யோகநெறி நின்று பயின்று பெரிதும் முயன்றே காண வேண்டும்படி இருத்தலின், அந்தர்யாமித்துவம், நீர் வேட்கை கொண்டவன் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டாமல் தான் நிற்கும் இடத்திலே நீர் இருந்ததாயினும், கொட்டும் குந்தாலியும் கொண்டு அகழ்ந்தால் அன்றிக் கிடைக்காதபடி தரைக்கு அருகில் ஆழ்ந்துள்ள தண்ணீர் (பூகத ஜலம்) போன்றது.
2. கண்டு பற்றித் தொழ விரும்புபவருக்கு அணுக இயலாமல், நிலவுலகமாகிய லீலா விபூதிக்கு அப்பாற்பட்டிருத்தலின், பரத்துவம், நீர்வேட்கை கொண்டவனுக்கு அண்டத்திற்கு அப்பால் புறம்பே பெருகிக் கிடக்கிற நீர் (ஆவரண ஜலம்) போன்றது.
3. கண்டு பற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவருக்கு, 'பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்' என்கிறபடி, கேட்டிருக்கும் அத்தனையே அன்றிச் சென்று காண அரிய நிலையிலுள்ள வியூகம், இவ்வுலகத்துக்குள்ளேயே இருப்பினும் நீர்வேட்கை கொண்டவர்க்குச் சென்று அடைய முடியாத திருப்பாற்கடல் (க்ஷீராப்தி) நிகரானது.
4. நிலவுலகில் தோன்றிக் கால் தரை தோய நடந்தும், அவ்வக் காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமே பயன் கொள்ளத்தக்கதாய், இக்காலத்திலுள்ளோர் கிட்ட இயலாத விபவம், மிகவும் அருகில் இருந்தும், வெள்ளமாக ஓடும் காலத்தில் இருந்தவர்கள் மட்டுமே பருகலாம்படியாய், வற்றிப்போன காலத்தில் இருப்பவர்க்குப் பயன்படாத பெருக்காறு போன்றது.
5. முன்பு கூறிய நிலைகளைப் போல அரியதும் சேயதுமாகாமல் எல்லோர்க்கும் எளியதும் இனியதுமாய், அனைவர் கண்ணுக்கும் புலப்பட்டு நின்று, கோவில்களிலும் இல்லங்களிலும் திருமால் எழுந்தருளி நிற்கும் அர்ச்சை நிலை, முன்பு கூறிய பலவகை நீர்களைப் போல அல்லாமல் எளிதாகச் சென்று இனிதாகப் பருகும்படி தேங்கி நிற்கும் மடுவின் நீர் போன்றது.
இனி வேறொரு வகையிலும், திருமாலின் இந்த ஐந்து நிலைகளின் இயல்பைக் குறிப்பிடலாம்.
பரத்துவ நிலை, எட்டாத வானத்தில் உள்ள மேகநீர் (ஜீமுத ஜலம்)
வியூக நிலை உண்ணற்கியலாத கடல் நீர் (ஸாகர ஸலிலம்)
விபவ நிலை ஓடிக்கழிந்த ஆற்றுநீர் (ஸரித் ஸலிலம்)
அந்தர்யாமித்துவ நிலை பெருகக்கூடிய கிணற்று நீர் (கூப பயஸ்)
அர்ச்சை நிலை அள்ளியெடுத்து உண்ணும்படி நிறைந்து நிற்கும் குளத்து நீர் (வாபீ பயஸ்)
என்றும் பெரியோர் இவற்றின் இயல்பை விளக்கியருளியிருக்கின்றனர்.