இறை என்ற சொல் இறு என்ற பகுதியடியாகப் பிறக்கிறது. இறைவன் எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் தங்கியிருக்கிறான். அதனால் அவன் அணுவுக்கும் அணுவாக இருக்கிறான். எல்லாப் பொருள்களும் அவனிடத்தில் தங்க இருக்கிறான். அதனால் பெரிய பொருளுக்கும் பெரியப் பொருளாகிறான்.
'அணோரணீயான் மஹதோ மஹீயாநாத்மா' என்பது சுருதி. ஆகவே எல்லாவற்றிலும் தங்கியும், எல்லாம் அவனிடத்தில் தங்கவும் இருக்கிறபடியால் இறை எனப் பெற்றனன்.
இதைத்தான் நாரதர் கொண்டு வந்த பழத்தினால் ஏற்பட்ட பழநிக் கதை விளக்குகிறது. ஒரு பழம் காரணமாக விநாயகர் சிவபெருமானை வலம் வந்தார். முருகப்பெருமான் அகில உலகங்களையும் வலம் வந்தார்.
அதன் உட்பொருள் என்ன?
சிவத்துக்குள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்ற உண்மையை முருகன் அறியமாட்டாரா? இனி, சர்வ வல்லமையுடைய வல்லபை கணபதிக்கு உலகங்களை ஒரு நொடியில் வலம் வரக்கூடிய ஆற்றல் இல்லையா? உண்டு.
சிவம் என்ற ஒன்றுக்குள்ளே எல்லாவற்றையும் கண்டார் விநாயகர். எல்லாவற்றுக்குள்ளும் சிவத்தைக் கண்டார் முருகப்பெருமான்.
இதுதான் அதனுடைய தத்துவம். இதனைக் கருத்தில் இருத்துங்கள். யாவையுமாய் அல்லையுமாய், ஒன்றாய்ப் பலவாய் என்ற திருவாக்குகளைச் சிந்தியுங்கள்.