இராமர் சீதையைத் தேடிக்கொண்டு போனார்.
இடையே இராவணனது வாளால் வெட்டுண்டு வீழ்ந்து கிடந்த சடாயுவைக் கண்டு புலம்பியழுதார். மனைவியைப் பிரிந்த கவலை ஒரு புறம், பெரிய பிதாவாகிய சடாயுவின் பிரிவுத் துன்பம் மறு புறம்.
அப்போது சடாயு இராமரை நோக்கி, “மகனே! வருந்தற்க. இன்ப துன்பம் மாறி மாறி வரும் இயல்புடையன. சூரியனையும் அரவம் மறைக்கிறது. திங்களும் தேய்ந்து வளர்கிறது. ஆகவே வாழ்வில் தாழ்வும் உயர்வும் மாறி மாறி வரும்; அவற்றைக் கண்டு மதியுடையார் கலங்கக் கூடாது'' என்றார். ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை விளக்கும் சடாயுவின் கூற்றாக அமைந்த அந்தப் பாடல் வருமாறு:
“பொங்கு வெங் கோளரா விசும்பு பூத்தன
வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்
அங்கண்மா ஞாலத்தை விளக்கும் ஆய்கதிர்த்
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால்”