ஷணிக லிங்கம் பூசை
மு. சு. முத்துக்கமலம்
ஷணிக லிங்கம், உலோக லிங்கம், சைல லிங்கம், பாண லிங்கம் முதலியன பூசிக்கத் தக்கவை.
'ஷணம்' என்றால் கணம் அல்லது நொடி என்று பொருள். குருவிடம் தீட்சை பெறாதவர்களும், நிரந்தர லிங்கம் இல்லாதவர்களும் உடனடியாக சிவபூஜை செய்ய இந்த முறை உதவுகிறது. மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், ருத்திராட்சம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பம், சர்க்கரை, மாவு எனப் பன்னிரு வகைப்படும். இத்தகைய லிங்கங்களில் சிவபெருமான பூசை முடியும் வரையும் வியாபகமாய் நின்று அனுக்கிரகம் செய்வார். பூசை முடிந்ததும் ஷணிக லிங்கத்தைக் கங்கையில் விடுதல் வேண்டும் அல்லது குறிப்பிட்ட ஒரு தினத்தில் விடுவது நல்லது. பன்னிரு வகை லிங்கத்தைப் பூசித்து அடையும் பலன்களைப்பற்றி அம்சுமான் ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.
புற்று மண்ணால் அமைத்துப் பூசிப்பவர் மோட்சத்தையும், அரிசியால் அமைத்து பூசிப்பவர் செல்வத்தையும், அன்னத்தினால் அமைத்துப் பூசிப்பவர் தன தானிய விருத்தியையும், நதி மண்ணால் அமைத்துப் பூசிப்பவர் பூமி லாபத்தையும், கோமயத்தால் அமைத்துப் பூசிப்பவர் ரோக சாந்தியையும், வெண்ணெயால் அமைத்துப் பூசிப்பவர் மனதில் விரும்பிய பலனையும், ருத்திராட்சத்தில் அமைத்துப் பூசிப்பவர் ஞானவிருத்தியையும், சந்தனத்தில் அமைத்துப் பூசிப்பவர் போகத்தையும், கூர்ச்சத்தினால் பூசிப்பவர் புத்தி விருத்தியையும், புஷ்பத்தினால் அமைத்துப் பூசிப்பவர் ஆயுள்விருத்தியையும், சர்க்கரையினால் அமைத்துப் பூசிப்பவர் மனதில் விரும்பிய சித்தியையும், மாவால் அமைத்துப் பூசிப்பவர் சரீரபுஷ்டியையும் அடைவர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.