சதாசிவத் தத்துவங்கள்
உ. தாமரைச்செல்வி
பிரளயக் கால முடிவில் சச்சிதானந்தப் பரம்பொருள் ஆன்மாக்கள்மீது கொண்ட கருணை காரணமாகத் தனது சங்கற்பத்தின் மூலம் ஐந்து விதச் சக்திகளைத் தோற்றுவிக்கிறது. அவை பரா சக்தி, ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்பனவாகும். இந்த ஐந்து சக்திகளிடமிருந்து ஐந்து சதாசிவ தத்துவங்கள் தோன்றின. ஐந்து சதாசிவ தத்துவங்களைக் கொண்ட சிவமூர்த்தி ஐந்து திருமுகங்களை உடையவர். அது காரணமாக, அவருக்குப் பஞ்சானன் என்பது பெயர். பஞ்சப் பிரம்மாக்கள் என்றும் அவருக்கு வேறொரு பெயர் உண்டு.
கிழக்கு நோக்கிய முகம் ஈசானன் அல்லது தத்புருஷம் என்றும், தெற்கு நோக்கிய திருமுகம் அகோரம் அல்லது ஈசுவரன் என்றும், மேற்கு நோக்கிய முகம் சத்தியோஜாதம் அல்லது பிரம்மா என்றும், வடக்கு நோக்கிய முகம் வாமதேவம் அல்லது ஈசானம் எனவும், மேல் நோக்கிய முகம் சதாசிவம் என்றும் வழங்கப்பெறுகின்றன.
ஸ்தாபனம் (பிரதிஷ்டை), அபிஷேகம் போன்ற பூஜைக்கு உரிய எல்லாக் கிரியைகளும் ஈசான மூர்த்திக்கே செய்யப்படும். இந்த மூர்த்தி, பளிங்கு போன்று வெண்ணிறமானவர். யோகத்திலும் மந்திரசித்தியிலும் பூரணநிலை அடைந்தவர்களின் தியானத்திற்கே ஈசானன் தவிர ஏனைய நான்கு முகங்கள் உரியவை. இந்த ஐந்து முகங்களிலிருந்தே சிவாகமங்கள் அருளப்பெற்றன என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது.
இறைவனின் மேல்நோக்கிய திருமுகம் சதாசிவம். இது உன்னத அம்சங்களின் அடையாளமாகத் திகழ்கிறது. மேல் நோக்கிய சதாசிவ முகம் இந்தப் பிரபஞ்சத்தின் ஆகாய தத்துவத்திற்கு உரிய அதிதேவதையாகும். ஆன்மாக்களுக்கு வீடுபேற்றை அளிப்பதும் இந்த முகமே ஆகும்.
கிழக்கு நோக்கிய தத்புருஷம், வாயு தத்துவத்தை ஆளும் சக்தியின் அடையாளம். இது ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இருள் சக்தியின் அடையாளமாகும். உண்மையை அறியவொண்ணாமல் மயக்கும் சக்தி இது.
தெற்கு நோக்கிய அகோர முகம் அக்கினி தத்துவத்தை ஆளும் சக்தியாக விளங்குகிறது. இதுவே பிரபஞ்சத்தை ஆக்கவும் அழிக்கவும் வல்ல சக்தியின் அடையாளம்.
வடக்கு நோக்கிய முகம் வாமதேவம். இது நீர்த் தத்துவத்தின் பிரதான சக்தியாகத் திகழ்கிறது. பரம்பொருளின் இந்தச் சக்தியே உலகத்தைப் பாதுகாக்கிறது. இந்தச் சிவ மூர்த்தியின் நிறம் சிவப்பு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.