கோயில் திருவிழாக்கள்
உ. தாமரைச்செல்வி
கோயில் திருவிழாக்கள் சமுதாயத்தின் நன்மைக்காகவே ஏற்பட்டிருக்கின்றன. ஒவ்வோர் ஆலயத்திலும் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் வரை மிகச் சிறப்பாகப் பூஜைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பல விதமான வாகனங்களின் மேல் எழுந்தருளச்செய்து கோயில் பிராகாரங்களிலும் வீதிகளிலும் பவனி வரச்செய்யும் விழாவிற்குத் திருவிழா அல்லது உத்சவம் என்று பெயர்.
உத்வசங்கள் நித்தியோத்சவம், வாரோத்சவம், பட்சோத்சவம், மாதோத்சவம், அயனோத்சவம், வருஷோத்சவம் என்பவை ஆகும். அது தவிர, பஞ்சம் அல்லது பிரபஞ்ச விபத்துக்கள் ஏற்படும் காலங்களில் தீமையைத் தடுப்பதற்கான விருப்பத்தினாலும் திருவிழாக்கள் நடத்துவது உண்டு.
தினந்தோறும் செய்யும் பூஜை வழிபாடுகளை நித்தியோத்சவம் என்றும், சுக்கிரவாரத்தில் செய்யப்படும் சிறப்புப் பூஜையை வாரோத்சவம் என்றும், பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் போன்ற தினங்களில் வழிபடுவது பட்சோத்சவம் என்றும், மாதப் பிரவேசத்தன்று செய்யப்படும் பூஜை மாதோத்சவம் என்றும், உத்தராயண தட்சிணாயன புண்ணியக் காலங்களில் கொண்டாடப்படுவதை அயனோத்சவம் என்றும் கூறுவர்.
மகோத்ஸவம், பிரம்மோத்சவம், வசந்தோத்சவம் முதலியன வருஷத்தில் பத்துப் பன்னிரண்டு தினங்கள் கொண்டாடுவர். இதனை வருஷோத்சவம் என்பர். மகா-பெரிய, உத்-உயர்வான, ஸவ-சிருஷ்டி முதலிய காரியங்கள் அதாவது உயர்ந்த சிருஷ்டி முதலிய ஐந்து தொழில்களைக் குறிக்கும் அடையாளம் மகோத்சவம் என்பதாகும். பிரம்மோத்சவம் என்றால், பெரிய திருவிழா என்று பெயர். வசந்தோத்சவம் என்பது வசந்தக் காலத்தில் செய்யப்படும் உத்சவம் ஆகும்.
ஒரு நாள் முதல் இருபத்தொரு நாள் வரை இந்தத் திருவிழாக்களைக் கொண்டாடுவது உண்டு.
திருவிழா நடத்த வேண்டிய நாட்கள் பற்றி ஆகமங்கள் பலவாறு கூறுகின்றன.
பெரும்பாலும் கொடியேற்றம் முதல் கொடி இறக்கும் வரை பத்து அல்லது பன்னிரண்டு தினங்கள் வரை கொண்டாடுவார்கள். திருவிழாவின் தொடக்கத்தில் அதைக் குறிப்பிடுவதற்குக் கோயிலில் கொடி ஏற்றுவார்கள். விழா இறுதியில் அதை இறக்குவார்கள். கொடி ஏற்றிவிட்டால் அது இறக்கப்படும்வரை ஊரை விட்டு எவரும் வெளியே செல்லக்கூடாது என்பர். இது திருவிழா மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது என்பதையே குறிப்பிடுகிறது.
பக்திபூர்வமான விழாக்களைப் பிற்பகலில் செய்ய வேண்டும் என்பது விதி.
பத்து நாள் திருவிழாவும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துவதாகும்.
முதல் நாள் விழா தூல நீக்கத்தையும், இரண்டாம் நாள் விழா ஸ்தூல சூட்சும நீக்கத்தையும், மூன்றாம் நாள் விழா மூவினை, முக்குற்றம், மும்மலம், முக்குணம், முப்பிறப்பு முதலானவற்றை நீக்கும் தன்மையையும் அறிவிப்பதாகும்.
நான்காம் நாள் திருவிழா அந்தக்கரணம் நான்கையும், நால்வகைத் தோற்றத்தையும் நீக்குவதாகும். ஐந்தாம் நாள் திருவிழா ஐம்பொறி, ஐந்து அவஸ்தைகள், ஐந்து மல நீக்கத்தைக் குறிக்கும். ஆறாம் நாள் திருவிழா உட்பகையான காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற ஆறும், ஆறு அத்துவா, ஆறு கன்ம மலங்கள், பதமுக்தி ஆறு என்னும் ஆறு வகைகளை நீக்குவதைக் குறிக்கும்.
ஏழாம் நாள் திருவிழா ஏழுவகைப் பிறப்புகள், காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை என்னும் வித்தியா தத்துவங்கள் ஏழு, அஞ்ஞானம், பொய், அயர்வு, மோகம், சூனியம், மாச்சர்யம், பயம் என்னும் மாயையின் மலம் ஏழையும் நீக்குவதை உணர்த்துகிறது.
எட்டாம் நாள் விழா பரமசிவனது எண் குண விளக்கத்தையும், ஒன்பதாம் நாள் விழா நவபேத விளக்கத்தையும், பத்தாம் நாள் விழா அந்தமில்லாத சிவானந்தக் கடலில் மூழ்கியிருக்கும் தன்மையையும் குறிக்கின்றன.
மேலும், பத்து நாள் திருவிழாக்களில் முதல் ஐந்து நாள் விருத்திக் கிரமத்தொழிலையும், பிற்பகுதி ஐந்து நாளும் லயக் கிரம ஐந்தொழில் நடைபெறுவதையும் விளக்குகின்றன. இதற்குத் தக்கபடி வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவிழா நாட்களில் முக்கியமாக நடத்த வேண்டிய கிரியைகளை அஷ்டா தசக் கிரியை என்பர். அவை 1. வ்ருஷயாகம், 2. துவஜாரோகணம், 3. ப்ரஹத்தாளம், 4. அங்குரம், 5. யாகசாலை, 6. அஸ்த்ரயாகம், 7. பலிதானம், 8. யானக்ரமம், 9. பரிவேஷம், 10. நீராஜனம், 11. கௌதுகம், 12. தீர்த்த சங்க்ரஹணம், 13. சூர்ணோத்ஸவம், 14. தீர்த்தம், 15. அவரோகணம், 16. ஸ்நபனம், 17. திருக்கல்யாணம், 18. பக்தோத்ஸவம் என்பன. இவற்றோடு ரதாரோஹணம், மிருக யாத்திரை, பூர்ணாஹுதி, மௌனோத்ஸவம் முதலியவற்றைச் சேர்த்தும் கூறுவர்.
இவற்றுள் முக்கியமாகச் செய்யப்படும் சடங்குகள் சில. அவை- மண் எடுத்தல், முளையிடுதல், காலை மாலை பலவித வாகனங்களில் மூர்த்தியை எழுந்தருளச் செய்தல், யாகம் செய்தல், திருக்கல்யாணம் செய்தல், தீர்த்தம் கொடுத்தல், கொடியிறக்கம், திருவூடல், சண்டேசுர உத்ஸவ பூர்த்தி முதலியன.
இறைவன் நடத்தும் ஐந்தொழிலான உண்டாக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல், அருளல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அநுக்கிரகம்) என்பவற்றைப் பத்து நாள் திருவிழாவில் அமைத்துள்ளனர்.
மண் எடுத்தல், முளையிடுதல், கொடியேற்றம் முதலியவை சிருஷ்டித் தொழிலை உணர்த்துகின்றன. வாகன உத்சவம், யாகம், பலியிடுதல் முதலியன ஸ்திதி அல்லது காத்தல் தொழிலைக் குறிக்கின்றன. தேர்த்திருவிழா, பரிவேட்டை, சாந்தணிதல் முதலியன சம்ஹாரத் தொழிலைக் குறிப்பன. மௌனோத்ஸவம் திரோபவத்தைக் குறிக்கும். நடராஜர் உத்சவம், மட்டையடி, திருவூடல் முதலியன அனுக்கிரகத்தைக் குறிக்கும். அன்றியும், அபிஷேகம் சிருஷ்டியையும், கௌதுகபந்தனம் ஸ்திதியையும், அகருதூபம் சம்ஹாரத்தையும், கர்ப்பூரதீபம் திரோபவத்தையும், கர்ப்பூர அடுக்குத் தீபம் அனுக்கிரகத்தையும் உணர்த்தி நிற்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.